Namvazhvu
அரசியலில் மதம் ஆபத்து!
Friday, 18 Oct 2024 09:22 am
Namvazhvu

Namvazhvu

நமது நாட்டில் உள்ள பெரும்பான்மை இந்து மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இன்று அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. சமத்துவம், சகோதரத்துவம், கூட்டாட்சித் தத்துவம் என்று பேசிக் கொண்டிருந்த மாநிலக் கட்சிகள், இன்று இந்து மக்களின் மத உள் விவகாரங்களில் சற்று அதிகம் அக்கறை காட்டுகின்றன. பா... பெரும்பான்மை இந்துகளின் ஆதரவைக் கலவரங்களின் மூலமாகவே பெற்று இந்தியாவின் வலிமையானதொரு கட்சியாக உருவாகியுள்ளது. பல கட்சிகள் பா...வின் கொள்கையானஇந்துத்துவத்தைதங்களுடைய கொள்கையாக ஏற்றுக்கொள்கின்றன.

இதற்கு ஆந்திராவில் சமீபத்தில் நடந்தேறிய திருப்பதி இலட்டுவை மையப்படுத்திய அரசியல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆந்திர முதல்வரும், துணை முதல்வரும் தங்களின் வாக்கு வங்கியைப் பெருக்கிக்கொள்ளவும், தங்களின் எதிரியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைத் தாக்கவும், அதேவேளையில் தங்கள் தேர்தல் நண்பனான பா...வின் வளர்ச்சியை ஆந்திராவில் தடுக்கவுமே இந்து மதத்தின் நுட்பமான இப்பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்திருக்கின்றனர்.

இன்று ஒவ்வொரு தலைவரும்நான்தான் இந்துகளின் பாதுகாவலர்என்று மேடைகள்தோறும் முழங்குகின்றனர். நாமும் இதன் ஆபத்தை உணராமலே கடந்து செல்கின்றோம். இந்தியாவையும், இந்துகளையும் காக்க வேண்டும் என்று கூறும் இவர்கள் ஆன்மிகத்திற்கும், நாட்டின் இறையாண்மைக்கும் ஒருசேரக் கொள்ளி வைக்கின்றனர்.

புரட்சிகர அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதப்படும் அரவிந்த் கெஜ்ரிவால், 26-அக்டோபர்-2022 அன்று விநாயகரின் படமும், இலட்சுமியின் படமும் நம்முடைய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அந்த நேரத்தில் குஜராத் தேர்தலை மனத்தில் வைத்து, இந்துகளின் வாக்கைப் பெறுவதற்காகவே இவ்வாறு அவர் பேசுகிறார் என்று கூறப்பட்டது.

காங்கிரசின் முக்கியத் தலைவரான இராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் பல தலைவர்கள் இந்துகளின் எதிரியாகச் சித்தரிக்கப்படுகின்றனர். சமத்துவம் பேசும் தலைவர்கள் மீது அரசியலமைப்புச் சட்டம் 154A மற்றும் 259A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்படுகின்றன. அதனால் இந்தத் தலைவர்களும்நாங்கள் இந்துகளின் எதிரிகள் அல்லர்என்று நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தலைவர்கள் இதுபோன்ற நிலைக்குத் தள்ளப்படுவது மதச்சார்பற்ற நாட்டின் நலனுக்கு நல்லதல்ல.

பல இலட்சம் மக்களைக் கொன்ற சர்வாதிகாரிகளாகிய ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, வட கொரியாவின் லீ குடும்பம் உள்ளிட்ட பல சர்வாதிகாரிகள் தங்களுடைய கருத்தியலை மக்கள் மனத்தில் ஆழமாக விதைத்தனர். அவர்களுடைய கருத்தியல்களைச் சிறந்த கருத்தியல்கள் எனத் தங்களுக்கு வேண்டிய பிரபலங்கள் மூலம் மக்களை நம்ப வைத்தனர். இறுதியில் தம் நாட்டு மக்களையே கொத்துக் கொத்தாய்ப் பலி கொடுத்தனர். நம்முடைய இந்தியத் துணைக் கண்டமும், இப்படி ஒரு மோசமான நிலையை நோக்கிக் கடந்த சில ஆண்டுகளாகச் செல்கிற அபாயம் நேர்ந்திருக்கிறது.

பெரும்பான்மையின மக்களின் உரிமைகளுக்குச் சிறுபான்மையின மக்களால் பாதிப்பு ஏற்பட்டு விட்டதுஎன்ற உலகச் சர்வாதிகாரிகளின் வழக்கமான முழக்கத்தை இந்தியப் பாசிசச் சக்திகளும் தங்கள் கையில் எடுத்துள்ளன. இந்துகளின் நலன்களுக்கான முன்னெடுப்புகளை விட, சிறுபான்மையின மக்கள் மீதான அடக்குமுறைகளையே இந்துகளின் உரிமை மீட்புக்கான ஒரே வழியாக இவர்களால் சித்தரிக்கப்படுகின்றது. இதன் விளைவாக, 27 டிசம்பர் 2019 அன்று சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 27 சிறுபான்மையினச் சகோதரர்கள் தங்களின் உயிரை இழந்துள்ளனர். இதுபோன்ற பெரும்பான்மையின வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராகவும், சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவும் குரல்கள் கொடுக்கும் பெரும்பான்மையினத்தைச் சார்ந்தவர்களைத் தங்கள் மதத்தின் துரோகி என முத்திரை குத்தி அவர்களைத் தனிமைப்படுத்துகின்றனர்.

காவிகள் நம் இந்திய மண்ணைத் தொடர்ந்து இரத்தத்தால் கறைப்படுத்தி வருகின்றனர். 1885-இல் வெளிப்படையாகக் கிளம்பிய அயோத்திப் பிரச்சினை, 2019-இல் அளிக்கப்பட்ட ஒருதலைப் பட்சமான தீர்ப்பின் மூலம் மேலோட்டமாகத் தீர்க்கப்பட்டது. ஆனால், பிரச்சினைக்கான மூலம் இன்றும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்தப் பாசிசச் சக்திகள் அயோத்தி இராமர் கோவில் கலவரம், ஜாம்ஷெட்பூர் கலவரம் மற்றும் கோத்ரா இரயில் கலவரம், கந்தமால் கலவரம் எனப் பல்வேறு கலவரங்களில் பல்லாயிரம் அப்பாவி மக்களின் உயிரை வாங்கியிருக்கின்றன. இன்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைத் தங்களின் வன்முறை வெறியாட்டத்தின் ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். பக்தி வழியில் பயணிக்கும் இந்துகளும், இந்தப் பாசிசச் சக்திகளைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இன்று இந்தப் பாணியைப் பிற கட்சிகளும் தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காகக் கையில் எடுக்கத் தொடங்கிவிட்டன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, விலைவாசிக் குறைப்பு, இளைஞர் நலன், அறிவியல் வளர்ச்சி மற்றும் சமூக மறுமலர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய தலைவர்கள், வெறுப்பரசியல் பேசி மக்களைத் திசை திருப்புகின்றனர். நாட்டை ஆரோக்கியமான வகையில் முன்னேற்ற முடியாத தலைவர்கள், வெறுப்பரசியலைப் பயன்படுத்தி, தங்களுக்கு எதிராகக் கேள்வி எழுப்புகிறவர்களை, ‘இந்தியாவின் துரோகிகள்’, ‘இந்துகளின் துரோகிகள்என்று முத்திரை குத்தி இந்துகளை அவர்களுக்கு எதிராகத் தூண்டிவிடுகின்றனர். இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் கேடானது. இதே வெறுப்பரசியலின் விளைவை ஜெர்மனி, இத்தாலி, இலங்கை போன்ற நாடுகள் நமக்குச் சத்தமாகச் சொல்கின்றன. அதே நிலை நம் நாட்டிலும் நீடித்தால், அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும்.

வெறுப்பரசியலைக் கையிலெடுக்கும் ஆட்சியாளர்களைக் கைவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்காகவேற்றுமையில் ஒற்றுமைஎன்ற தாரக மந்திரத்தை மையமாகக் கொண்ட தளத்தில் அனைவரும் ஒன்றுகூடுவோம். நாட்டின் வளர்ச்சிக்காய் உழைப்போம்!