திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை, திராவிடர் கழகத்தை எதிர்ப்பதில் தமிழகக் கட்சிகள் பல தம் எல்லைகளையும் தாண்டி, எதிர்ப்பைக் காட்டுவதில் முனைந்து நிற்கின்றன. எதிர்க்கும் இக்கட்சிகளில் பல கொள்கை ரீதியாக வேறுபட்டிருந்தாலும், இக்கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டில் மிகப்பெரிய முரண்பாடுகள் இருந்தாலும், ‘திராவிடம்’ என்ற முன்னொட்டை உடைய திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குறிவைத்துத் தாக்குவதில் ஒன்றிணைந்துள்ளன. தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தி.மு.க. மட்டுமே காரணம் என்று வசைபாடி வருகின்றன இக்கட்சிகள்.
ஏன் தி.மு.க. அரசு தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது?
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு சனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அரசு; சனநாயக வழி, சனநாயகம் அளித்த தேர்தல் வழி தெரிவு செய்யப்பட்ட அரசு என்பதாலேயே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட அரசு என்று கருதுதல் ஏற்புடையதல்ல. சனநாயகம் தந்த தேர்தல் வழி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி நடத்துவதோடு, சனநாயக அரசின் அனைத்து விழுமியங்களையும் இவ்வரசு முழுமையாகக் காத்து நிற்கிறது அல்லது நிற்கும் என்று எதிர்பார்த்தல் சரியன்று.
சனநாயகம் மூன்று பெரிய விழுமியங்களைத் தாங்கி நிற்க வேண்டும் என்பர். விவாதிக்கும் உரிமை, முரண்படும் உரிமை, முடிவெடுக்கும் உரிமை. இம்மூன்று பண்புகளுமே சனநாயக அரசின் உயர் பண்புகள். இம்மூன்று பண்புகளுமே திராவிட முன்னேற்றக் கழக அரசால் இன்று பாதுகாக்கப்படுகின்றனவா? இந்தக் கேள்வியை எழுப்பி, அதன் அடிப்படையில் இக்கட்சியின் ஆட்சி விமர்சிக்கப்பட்டால் அந்த விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஒரு கட்சியின் ஆட்சி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கக்கூடாது என்கிறபோது, விமர்சனத்தை எதிர்கொள்ளும் மனநிலையும் ஆளும் கட்சிக்கு இருத்தல் வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசு மீதான விமர்சனங்களில் நிறையவே நியாயம் உண்டு. உண்மையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்குப் பதில் சொல்லும் அரசாக (Accountable) செயல்படுகிறதா? வெளிப்படைத் தன்மை உள்ளதாக இவ்வரசு உள்ளதா? ஆளுமைத் திறன் மிக்க அரசாக உள்ளதா? சுருங்கக் கேட்டால், குறிவைத்துத் தாக்கப்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த ஆட்சி மக்களுக்கான நல்லாட்சியாக இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால், இக்கேள்விகளுக்கு ‘இல்லை’ என்ற பதிலே கிடைக்கும்.
இப்பதிலில் ஆச்சரியம் எதுவும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீதான விமர்சனங்களில் உண்மை உண்டு என்று ஏற்றுக்கொண்டுதான் இக்கட்டுரையை எழுத முடியும். கண்மூடித்தனமாக ஒரு கட்சியின் ஆட்சி முறையைத் தூக்கிப் பிடிப்பது நம் நோக்கமல்ல. சுதந்திரம் பெற்ற இந்தியா தனக்கென வலுவான அரசமைப்புச் சட்டங்களையும், உரிமைச் சாசனங்களையும் உருவாக்கிய பின்பும், சனநாயகம், சமத்துவம், சமயச் சார்பின்மை, இறையாண்மை என்னும் உயரியக் கோட்பாடுகளை வெகு சனங்களிடையே ஆழமாக நிலைநிறுத்திய பின்பும் உயரிய இக்கோட்பாடுகளைச் சிதைக்கும் போக்கில் எழுந்த சில கட்சிகளால் தம் நோக்கில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை. திராவிடம் பேசியக் கட்சிகளும் இவற்றுள் உள்ளடக்கமே என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சனநாயகம் தந்த வெளியில் உருவான கட்சிகள் வெறும் கட்சிகளாக மாறிப்போன நிலையில், திராவிட முன்னேற்றக் கழகமும், அது தலைமையேற்கும் ஆட்சியும் விதிவிலக்கல்ல. எனினும், இன்றைய தமிழ்நாடு-இந்திய அரசியல் சூழமைவில் தி.மு.க.வுக்கு எதிராக மட்டும் கொடுந்தாக்குதல்களைத் தொடுப்பது ஏன்?
திராவிடம் என்னும் சித்தாந்தம்
திராவிடத்தை முன்னொட்டாகக் கொண்ட கட்சிகளின் இன்றைய தலைவர்கள் பலருக்குத் திராவிடம் பற்றிய புரிதல் இல்லை. தமிழ்நாட்டில் இந்தியா விடுதலை பெறும் முன்னே சமநீதி வேண்டி தோன்றிய நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கங்கள் பற்றி நம்மவர் அறிந்திருக்க வேண்டுவது காலக்கட்டாயம்.
வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற ‘இந்திய தேசியம்’ வளர்க்கப்பட்டபோது, ‘திராவிடம்’ என்ற பெயரில் வளர்க்கப்பட்ட திராவிடத் தேசியம் இந்தியச் சமூகத்தில் வேரூன்றியிருந்த சாதி ரீதியான படிநிலை அமைப்புகளை வேரறுக்கவும், பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கவும், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கான விடுதலைத் தாகத்தோடு பாலினச் சமத்துவம், சொத்துரிமையைப் பெண்களுக்கு உறுதி செய்தல், சாதியப் பெயர்களை-சாதிப் பின்னொட்டுகளை ஒழித்தல், விதவைத் திருமணத்தை ஆதரித்தல், பெண்களின் மாண்பு மற்றும் பாதுகாப்புக் குறித்த பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்தது. மேலும், திராவிட இயக்கம் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம், இந்தியச் சமூகத்தின் சாதிய மேலாண்மையைத் தகர்க்கும் வண்ணம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சாதி ஒழிப்பு என்பனவெல்லாம் இந்தியாவெங்கும் காணவியலாப் பெரும் புரட்சிகரக் கொள்கைகளாக முன்னெடுக்கப்பட்டவை. வெள்ளையரிடமிருந்து பெறும் அரசியல் விடுதலை இந்தியச் சமூகத்தின் விடுதலையாகாது என்பதால்தான் பெரியார் இந்திய விடுதலையை வரவேற்கவில்லை.
1925-ஆம் ஆண்டு இந்தியா இருவகை சித்தாந்தங்களை எதிர்கொண்டது. இந்தியாவில் மக்களை மத ரீதியாக அணிதிரட்டி, மத ரீதியான தேசம் ஒன்றினைக் கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ். என்ற இயக்கம் உருவானது இதே ஆண்டு. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திலிருந்து வெளியேறியதுடன், கட்சியிலிருந்தும் விலகியதும் இதே ஆண்டுதான். காரணம் என்ன? காங்கிரஸ் பொதுக்குழுவில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்றுக்கொள்ளா நிலையில் பெரியார் சரியான முடிவெடுக்கிறார். இந்திய அரசியல் சமூக அமைப்பில் சமூக நீதியை மட்டுமே முன்னெடுத்த திராவிட இயக்கம், மேலே குறிப்பிட்ட சமூக நீதி நிலைப்பாடுகளில் காட்டிய உறுதியே இன்றுவரை திராவிட இயக்கத்தின் அடையாளமாக இருந்து வருகின்றமையால்தான் இன்றைய மதவாத அரசியலாருக்குத் திராவிடம் எதிர்ப்புக் கொள்கையாக, எதிர்கொள்கையாகக் கருதப்படுகிறது.
திராவிட மொழிக் குடும்பத்தின் மொழியுள் தமிழ் மொழி பெரும் சிறப்புடையது. திராவிட மொழிகளின் வேர்ச்சொற்களை ஒப்பிட்டு ஆய்வு செய்த கால்டுவெல் தன் ஆய்வறிக்கையைத் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் வழி தந்தார். ஆரிய மொழி வேறு, திராவிட மொழி வேறு என்று உலகுக்குக் கூறினார். ‘உலகத் தாய்மொழி சமஸ்கிருதமே’ என்ற தவறான எண்ணத்திற்குக் கால்டுவெல் முடிவு கட்டினார். வட மொழி சார்பு இல்லாமல் தனித்தியங்கும் வல்லமை தமிழுக்கு மட்டுமே உண்டென்று உரத்துக் கூறினார்.
கால்டுவெல் அறிவியல்பூர்வமாகக் கண்ட இந்த உண்மைகளே பிற்காலத்தில் தமிழ்நாட்டில் தோன்றிய தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், பிராமணர் அல்லாதோர் இயக்கம், பிற்படுத்தப்பட்டோர் இயக்கம் என்ற பெயர்களில் உருவான இயக்கங்களுக்குக் காரணமாயின.
கால்டுவெல் கண்ட திராவிடம், வகுப்புவாத சித்தாந்தங்களை மிரட்டியதில் நியாயம் இருக்கிறது. ஒற்றைத் தேசக்கொள்கையாளர்களுக்கு, கால்டுவெல்லின் அறிவியல் கண்டுபிடிப்பு கோபத்தைத் தந்தது. கால்டுவெல் தன் மறைப்பணியுள்ளும், மொழி ஆய்வைத் தன் பணியுள் ஒன்றாகக் கொண்டு, உலகுக்குத் தந்த இக்கொடையால் வெகுண்ட மதவாதிகளும், ஆரியச் சித்தாந்தவாதிகளும் கால்டுவெல்லை ஒரு பிரிவினைவாதியாகச் சித்தரித்தனர். காலஞ்சென்ற இராமகோபாலன் என்னும் இந்து முன்னணித் தலைவரால், ‘திராவிடம் என்ற சொல் இந்திய மண்ணுள் நுழைக்கப்பட்ட எயிட்ஸ்’ என்று வர்ணிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோல்வால்க்கரிலிருந்து, இன்றைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி வரை கால்டுவெல் இகழப்பட்டார், இகழப்படுகிறார்.
திராவிட மாடலும், ஆரிய மாடலும்
இன்றைக்குத் தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு தமது அரசை ‘திராவிட மாடல் அரசு’ என்று அழைத்துக்கொள்ளுதலின் ஏற்புடைமை என்பது கேள்விக்குரியதே என்றாலும், திராவிடத்தின் அடிப்படை விழுமியங்களை முழுமையாக மறுக்கும், மதவாத பார்ப்பனிய ஆரியச் சித்தாந்தத்திற்கு இவை முன்னெடுப்பவை நேர் எதிரான ஒரு சித்தாந்தம். சமத்துவத்தையும், சமநீதியையும் அழுத்திக் கூறிய சித்தாந்தம் அது. ஏற்கெனவே இந்தியாவின் தென் பகுதியில் கருவாகி உருக்கொண்ட இச்சித்தாந்தம் திராவிட மண்ணில் பன்மையை மதித்தது. சாதிகளின் இருப்பையும், சாதிகள் உருவாக்கிய சமனற்றப் போக்கையும் எதிர்த்தது. சமூக நீதிக்கான சமத்துவ நெறியை வலியுறுத்தியதோடு, இடஒதுக்கீட்டையும் ஆதரித்தது. பார்ப்பனிய மேலாதிக்கத்தின் வெளிப்படை அடையாளமான கோவில் கருவறையுள் எவரும் அர்ச்சகராகலாம் என்ற புதிய புரட்சிகரத் திட்டத்தை உருவாக்கியது. கல்வியைப் புதுமையாக்க முயன்ற திராவிடம், ஆரியச் சித்தாந்தத்தின் வேரில் கைவைத்து அழிக்க முயன்றது. வகுப்பறையுள் ‘சூத்திரனும்’ குருவானான். ஆளும் பொறுப்பில் ‘சண்டாளருக்கும்’ இடம் கிட்டியது.
‘எல்லாம் நன்றாகவே நடந்தது’ என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்வது கொஞ்சம் அதிகம் என்றாலும், திராவிடத்தின் உள்ளீடுகள் அனைத்தும் இன்றும், இன்னும் நிறைவுபெறா நிலையிலும், திராவிடத்தின் எழுதப்பெறா சித்தாந்த வடிவங்கள் பல இன்னும் மதவாத ஆரிய சக்திகளை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆரியத்தின் சனாதனம் தமிழ்நாட்டில்தான் எதிர்ப்புக்குள்ளானது. திராவிடத்தின் சனாதன எதிர்ப்பை ஆளும் ஒன்றிய அரசு எப்படியெல்லாம் எதிர்கொண்டது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அவர்களின் கருதுகோளின்படி, சனாதன எதிர்ப்பாளர் என்பவர் இந்தியாவுக்கு எதிரானவராகும். இதனால் தமிழ்நாடே இந்தியாவுக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்பட்டதையும் நாம் அறிவோம்.
வடவாரிய வழித்தோன்றல்கள் திராவிடத்தை, திராவிட மாடல் பேசும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்குவதின் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், திராவிடத்தின் பெயரைக்கொண்ட தமிழ்நாட்டின் பல கட்சிகளும் எதிர்ப்பது ஏன்? தேசிய சனநாயக முன்னணியில் இருக்கும் சமூக நீதிக்கான பாட்டாளி மக்கள் கட்சிக்கு தி.மு.க. மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? தேசிய முற்போக்குத் திராவிட முன்னேற்றக் கழகம், தி.மு.க. பொதுச்செயலரை, அவரது கட்சியைக் குறிவைக்காத நாளே இல்லை. தி.மு.க.மீது இக்கட்சிகள் காட்டும் பகைமை யாருக்கு, எந்தக் கொள்கையுடைய கட்சிக்குச் சாதகமாயிற்று?
தி.மு.க.வை மட்டுமே கடுமையாக விமர்சிப்பதை சீமான் முழுநேர அரசியலாகக் கையிலெடுத்து வருகிறார். “2011-2021 வரை பத்து வருடங்கள் தமிழ்நாட்டை ஆண்ட அ.தி.மு.க. ஆட்சியிலும் ஏகப்பட்ட குறைகள், ஊழல்கள் நடந்திருக்கின்றன. அது குறித்து வாய் திறக்காத சீமான், தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத் தினமும் ஓர் அறிக்கை கொடுத்து வருவதைப் பார்க்கிறோம். அதேபோல மத்திய பா.ச.க. அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது குறித்து சீமானுக்குக் கிஞ்சித்தும் கவலையில்லை. ‘யாருக்கும் பயப்பட மாட்டேன்’ என்று ஆவேசமாக முஷ்டி முறுக்கும் சீமான், டெல்லியை விமர்சிக்காமல் வார்த்தையை மென்று விழுங்குவதற்கு என்ன காரணம்?” (நன்றி: ‘குமுதம்’ 7-8-2024).
மீண்டும் வலியுறுத்திச் சொல்லிக்கொள்வது என்னவெனில், தி.மு.க. அரசு சொல்லும் திராவிட மாடல் அரசு பெரியார் சிந்தனை வயப்பட்ட முழுமையான திராவிட மாடல் அல்ல; திராவிடச் சிந்தனைகளை அப்படியே நடைமுறைப்படுத்தும் அரசும் அல்ல. திராவிடச் சிந்தனைக்கு நசிவு ஏற்படும் வேளையில் விமர்சிக்கும் உரிமை எவருக்கும் உண்டு. ஆனால், தி.மு.க. அரசின் மீது வலிந்து வைக்கப்படும் சில கட்சிகளின் விமர்சனம் தரங் கெட்டவை.
தி.மு.க.வின்மீது வைக்கப்படும் பகைப் பிரச்சாரம் ஒருவேளை அக்கட்சியை அழிக்கலாம். ஆனால், அழிவில் எழுவது எது? அதை எப்படிச் சந்திக்கப் போகிறோம்?