Namvazhvu
நவம்பர் 01 - அனைத்துப் புனிதர்கள் தினம் எதிர்நோக்கின் திருப்பயணிகள் நம் புனிதர்கள்!
Friday, 25 Oct 2024 07:02 am
Namvazhvu

Namvazhvu

கல்வாரி அன்பின் உச்சத்தைத் தங்கள் வாழ்க்கையில்  மன உறுதியோடு வாழ்ந்து காட்டியவர்கள் நம் புனிதர்கள்.

யூபிலி 2025-இலச்சினையில் வரையப்பட்ட நான்கு மனிதர்கள் உலகத்தில் நான்கு பக்கங்களில் இருந்தும் பயணிக்கும் மனிதர்களைக் குறிக்கிறது. அவர்கள் சிலுவையை நோக்கிப் பயணிக்கிறார்கள். அவ்வேளையில், அந்தச் சிலுவையின் அன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் மகிழ்வோடும், மனவுறுதியோடும் பயணமாகிறார்கள்.

கிறிஸ்துவின்மீது கண்களைப் பதித்தவர்கள் வேறு எங்குமே தம் கண்களைத் திருப்புவதில்லை. ஏனென்றால், சிலுவையில் காயப்பட்டு இருக்கிற இயேசுவும், உலகில் காயப்பட்டிருக்கிற மனிதர்களும் ஒன்றுதான் என்கிற சிந்தனையில் பயணிப்பவர்கள் இத்திருப்பயணிகள்.

யாரும் வந்து காப்பாற்ற மாட்டார்களா?’ என்கிற பதற்றத்தில் இருக்கின்ற சிலுவையில் தொங்குகின்ற மனிதன், தன்னைக் காப்பாற்ற வருகிறார்கள் என்கிற எண்ணத்தில் இறங்கி வருவதைப் போன்று சிலுவையும் வளைந்து காணப்படுகிறது. எனவே, குற்றுயிராய்க் கிடக்கிற காயப்பட்ட மனிதனைக் காப்பாற்றுவதற்கு ஓடோடி வருகிறார்கள் இத்திருப்பயணிகள்.

சிலுவைதான் வாழ்வின் நங்கூரம் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்கும் இவர்கள் அதைப் பற்றிக்கொண்டு வாழ்கிறவர்கள். சிலுவை வழியாக வாழ்வைக் கொடுக்க முன் வருகிறவர்கள். ஏனென்றால், கிறிஸ்துவை இவர்கள் தாங்கி வருகிறார்கள்.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் ‘கிறிஸ்டோபராய் வாழ வேண்டும்என்று திருத்தந்தையும் அழைப்பு விடுக்கிறார். ‘கிறிஸ்டோபர்என்றால் கிறிஸ்துவைத் தாங்குகிறவர். நம் புனிதர்கள் அனைவரும் கிறிஸ்துவைத் தாங்கி வாழ்ந்தவர்கள்.

புனிதர்கள் மனத்தாழ்மையோடு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தன்னிலும் உயர்ந்தவராகப் பிறரைக் கருதினார்கள். கடும் வார்த்தைகளால் அயலாரை அவர்கள் பேசியதில்லை. இதயம் இல்லாத நீதிபதிகளாய் வாழ்ந்ததும் இல்லை; தவறாக யாரையும் தீர்ப்பிட்டதும் இல்லை. பிறரிடமிருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டார்களே தவிர, தங்களிடமிருந்து பிறர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பவில்லை. எனவேதான், அவர்களால் மகிழ்ச்சியாக வாழமுடிந்தது. எப்பொழுதும் பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்ததால், கிறிஸ்துவின் மனநிலை அவர்களிடம் தங்கியது. இத்தகைய வழிகளில் நம்முடைய மனத்தைச் செலுத்தினால் புனிதர்களாய் நாமும் உருவெடுக்க முடியும்என்பதை ‘மகிழ்ந்து களிகூருஎனும் திருத்தூது ஊக்கவுரையில் (எண் 116-117) திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார்.

யூபிலி இலச்சினையில் சிலுவை நோக்கிப் பயணிக்கிற மனிதர்கள் துன்ப அலைகளால் தடுமாறினாலும் சிலுவையின்மீது கண்களைப் பதித்தவர்களாகத் துணிவுடன் முன்னேறிச் செல்கிறார்கள். வேதனைகள், வருத்தங்கள், விரக்திகள், வலிகள் வாட்டினாலும், கிறிஸ்துவின் சிலுவையின் மீது தீராத பற்று கொண்டவர்களாய் வாழ்ந்து துன்புறும் மனிதர்களில் கிறிஸ்துவைக் கண்டு, அவருடைய காயங்களுக்குக் கட்டுப்போட்டு, புண்களைக் கழுவி மருந்திட்டு நல்ல சமாரியனைப் போல உயர்ந்து நிற்கிற ஆளுமைகள் நம் புனிதர்கள்.

பால்கனியில் நின்று வேடிக்கைப் பார்க்காமல், சாய்வு நாற்காலியில் ‘நான் உண்டு;  என் வாழ்வு உண்டுஎன்று ஊஞ்சலாடாமல், மயக்கமருந்து செலுத்தப்பட்டதுபோல மயங்கிக் கிடக்காமல் (காண்க: கிறிஸ்து வாழ்கிறார், 143)  இறைவனுக்கும், மனிதருக்கும் அயராது பணியாற்றி உழைக்கும் புனிதர்களாய் நாமும் உழைப்போம்! எதிர்நோக்கின் விதைகளை விதைப்போம்!