Namvazhvu
புதிய மரியியல் தொடர் – 1 (அறிமுகம்) திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி
Friday, 01 Nov 2024 04:15 am
Namvazhvu

Namvazhvu

அன்புக்குரிய வாசகப் பெருமக்களே!

திரு அவை வரலாற்றில் மரியன்னை பக்தி, மரியியல் ஆன்மிகம் தவிர்க்க இயலாத ஒன்று. திருவிவிலியம், கோட்பாடு, திரு அவைப் போதனை, திரு அவை மரபு எனப் பல தளங்களில் விரவிக் கிடக்கும் மரியியல் பேருண்மைகளைத் தனது திருத்தூது மடல், மூவேளைச் செப சந்திப்பு, திருத்தூது ஊக்கவுரை வாயிலாக மக்களுக்கு வழங்கிய திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் சிந்தனைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து, ‘நம் வாழ்வு’  வாசகர்களுக்கு தொடர் கட்டுரைகளாக வழங்க முன்வந்துள்ளார் மரியன்னை ஊழியர் சபையைச் சார்ந்த தந்தை அமல்ராஜ் ஆரோக்கியசாமி, ... அவர்கள். உரோமையில் தங்கள் துறவற சபை தலைமையகத்தில் ஆவணக்காப்பக  இயக்குநராகவும், தங்கள் சபையின் வரலாற்று ஆய்வாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், ‘மரியன்னை மறைக்கல்விஎனும் இத்தொடர் வாயிலாக மரியன்னை பற்றிய முழுமையான தரவுகளைத் திரு அவை வழிநின்று வழங்கவுள்ளார். தந்தை அமல்ராஜ் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்வாசகர் மத்தியில் இத்தொடர் மரியன்னை பக்தியை வளர்க்கும் என நம்புகிறேன்.                                                                                          

- முதன்மை ஆசிரியர்

திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் செப்டம்பர் 7, 1995 முதல் நவம்பர் 13,  1997 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் தனது மக்கள் சந்திப்பின்பொழுது (Wednesday Papal audience) அன்னை மரியா குறித்த எழுபது மறைக்கல்விச் சிந்தனையை வழங்கியுள்ளார். அன்னை மரியா பற்றிய திருத்தந்தையினுடைய இந்த எழுபது மறைக்கல்விச் சிந்தனைகளும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

முதலாவது பகுதியில், ‘திரு அவையினுடைய வரலாற்றில் கன்னி மரியாவின் பிரசன்னம்என்கின்ற தலைப்பில் ஒன்பது சிந்தனைகளை வழங்கியுள்ளார். இதில் அன்னை மரியா தொடக்கக்காலத் திரு அவையால் எவ்வாறு பார்க்கப்பட்டார், வணக்கம் செலுத்தப்பட்டார் மற்றும் திரு அவையின் வரலாற்றில் எத்தகைய இடம் அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றி விவரித்தபின், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தினுடைய மரியியல் சிந்தனைகளோடு நிறைவு செய்கின்றார்.

இரண்டாவது பகுதியில், ‘கன்னி மரியா மீதான திரு அவையின் நம்பிக்கை குறித்த தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றார். அதிகமான தலைப்புகளைக் கொண்ட இப்பகுதியில் (46 தலைப்புகள்) இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மரியன்னை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு திரித்துவம், கிறிஸ்து மற்றும் திருச்சபையின் மறையுண்மையில் கன்னி மரியாவின் பிரசன்னம் மற்றும் பங்கு பற்றிய முழுமையான மற்றும் மிக ஆழமானதொரு விளக்கத்தைத் திருவிவிலியம், திரு அவைத் தந்தையர்களுடைய சிந்தனை, திரு அவையின் ஆசிரியம் மற்றும் பாரம்பரியம் இவைகளை அடிப்படையாகக் கொண்டு விளக்குகின்றார்.

மூன்றாம் பகுதியில், திரு அவையில் கன்னி மரியாவின் பங்கு பற்றி 14 தலைப்புகளில் விளக்குகின்றார். இரண்டாவது வத்திக்கான் திருச்சங்கம் கற்பிப்பதை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு மரியா திரு அவையின் நிறுவுநர் மற்றும் தலைவராகிய கிறித்துவின் தாயாக இருப்பதுடன், அருளின் வரிசையில் விசுவாசிகளின் தாயாக இருக்க அவர் தந்தையாம் கடவுளால் அழைக்கப்பட்டார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றார். பல சவால்கள் நிறைந்த இவ்வுலகில் வாழும் இறைமக்கள், அன்னை மரியாவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ வேண்டும் என்பதையும் அவர் இவ்வுரைகளில் வலியுறுத்துகின்றார்.

இறுதியில், திருத்தந்தை அவர்கள் தனது மரியியல் சிந்தனையை அனைத்துக் கிறித்தவப் பிரிவுகளிடையே ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இயேசுவின் தாயான மரியா கிறித்தவர்களைப் பிரிக்கும் ஒரு நபர் அல்லர்; மாறாக, அவர் அனைவருக்கும் தாய். எனவே, ஒவ்வொரு கிறித்தவனும் தனது எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் மரியன்னையிடமிருந்து பெறும் மகிழ்ச்சியைத் தனது சகோதர-சகோதரிகள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தி, அத்தகைய சாட்சிய வாழ்வை நாம் ஒவ்வொருவரும் வாழ நம்மை அழைக்கின்றார்.

இத்தகைய கருத்தாழமிக்க  திருத்தந்தையின் மரியியல் சிந்தனைகளை வாசித்து, நமது தாயான மரியாவைப் பற்றிய திரு அவையின் போதனையிலும், அன்னை மரியா மீதான அன்பிலும் நாளும் வளர்வோம்.                           

(தொடரும்)