குஸ்தாவோ குத்தியரஸ்! (Gustavo Gutiérrez-Merino Díaz OP)
‘விடுதலை இறையியலின் தந்தை’ (Father of Liberation Theology) என்று கருதப்படும் டொமினிகன் அருள்பணியாளர் குஸ்தாவோ குத்தியரஸ் (Gustavo Gutiérrez-Merino Díaz OP) அவர்கள் கடந்த அக்டோபர் 22 -ஆம் நாள் தன்னுடைய 96-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் 1928 -ஆம் ஆண்டு பெரு நாட்டில் பிறந்தவர். முதலில் மருத்துவம் படித்த பிறகு தத்துவம், உளவியல், இறையியல் பயின்றார். லிமாவில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், இலத்தீன் அமெரிக்கா முழுவதும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகச் சவால்களில் கவனம் செலுத்தினார். இலத்தீன் அமெரிக்க விடுதலை இறையியலின் நிறுவுநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் ஒரு பெருவியன் மெய்யியலாளர் மற்றும் கத்தோலிக்க இறையியலாளர்.
1971-ஆம் ஆண்டு வெளியான ‘விடுதலை இறையியல்’ (A Theology of Liberation) எனும் இவரது நூல் விடுதலை இறையியலின் உருவாக்கத்திற்கு அடித்தளமாகக் கருதப்படுகிறது. இவர் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பெரிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். வறியவர்களின் தேவைகளை மேம்படுத்துவதில்தான் மீட்பும், விடுதலையும் இணைந்துள்ளது என எடுத்துரைத்தார். ‘ஏழைகளின் திருத்தூதர்’ எனப் போற்றப்படும் இவர், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கத்தோலிக்கத் திரு அவையில் வறுமைக்குக் காரணம் சமூக மற்றும் பொருளாதார அநீதி என எடுத்துரைத்தார். ‘வறுமை என்பது இறப்பு’ (Poverty is Death); அது மக்களையும், குடும்பங்களையும் அழிக்கிறது. திரு அவை கடந்த காலங்களைவிட தற்போது தன் மக்களை நன்றாகப் புரிந்துகொள்கிறது எனக் கூறினார். நமது காலத்தின் மிகச் சிறந்த இறையியலாளர்களில் ஒருவரான இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.