Namvazhvu
மறுக்கப்படும் மகளிர் இட ஒதுக்கீடு
Friday, 01 Nov 2024 04:53 am
Namvazhvu

Namvazhvu

இந்தியச் சமூகம் பெண்ணுரிமையை மறுத்த கற்காலம். கல்வி உரிமை இல்லை, சொத்துரிமை இல்லை, குழந்தைத் திருமணங்கள், அதிக பேறுகால இறப்புகள், பெண் சிசுக்கொலை, உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை என பெண் வாழ்வே கொத்தடிமை என்ற  நிலை. ‘விடியல் வராதா?’ எனப் பெண்கள் ஏங்கிய காலம். 1931 -ஆம் ஆண்டு பேகம் ஷாநவாஸ் மற்றும் கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோர் இந்தியப் பெண்களின் நிலை, மாற்று குறித்த ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பிரிட்டிஷ் அரசிடம் சமர்ப்பித்தனர்.

அன்றைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரிட்டிஷ் அரசு பெண்ணடிமைத்தனம் குறித்த புராதன, வைதீக, பிராமணிய பெண் அடக்குமுறைகளைச் சட்டம் இயற்றித் தடுத்தனர். அது இந்தியப் பெண்களின் விடுதலைக்கான முதல்படி. பெண் கல்வி நடைமுறைக்கு வந்தது. சுதந்திர இந்தியாவில் பெண் கல்வி, கிறிஸ்தவச் சேவை நிறுவனங்களால் மேலும்  ஊக்குவிக்கப்பட்டது. இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில், சொத்துரிமையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெரும் வேறுபாடு இருந்தது.

முதலில் சொத்துரிமை என்பது, இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து கூட்டுக் குடும்பச் சட்டம் எனப் பலவித இடியாப்பச் சிக்கல்களை உள் அடக்கியதாக இருந்தது. இன்றும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன.

தமிழகத்தில் 1989-ஆம் ஆண்டுக்குப் பின் திருமணம் செய்தவர்களுக்குப் பூர்வீகச் சொத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை என அன்றைய முதல்வர் கருணாநிதியால் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2005  மத்திய அரசின் சட்டப் பிரிவு 16 -இன் திருத்தப்பட்டப் பிரிவு 6 -இன்படி  பூர்வீகச் சொத்தில் ஆணைப்போல பெண்ணிற்கும் சமஉரிமை என்றது. இது 09.09.2005 முதல் நடைமுறைக்கு வந்தது. 20.12.2014 -க்குமுன் பாகப்பிரிவினை செய்திருந்தால் நிவாரணம் கோர முடியாது எனக் கெடு விதிக்கப்பட்டது. இருப்பினும், ஆயிரக்கணக்கான வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை நிலுவையில் இன்றும் உள்ளது.

ஆயினும் சில சமூகங்களின் தாய் வழிச் சமூக அமைப்பு, மகளிரின் சொத்துரிமையைப் பேணியது என்பதை நாம்  குறிப்பிட்டே தீர வேண்டும்.

11.08.2020 அன்று வினிதா சர்மா மற்றும் இராகேஷ் சர்மா வழக்கின் இறுதித்தீர்ப்பு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு பிறப்பிலே வருகிறது என்றது. நீதிபதிகள் இத்தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை முடித்துக் கொள்ள உத்தரவிட்டனர்.

பெண்களுக்குச் சொத்துரிமை மட்டுமல்ல; ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற முழக்கங்கள் நாடெங்கும் ஒலிக்கின்றன. 1992 -ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நகர் பாலிகா மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை மாநில அரசுகள் கட்டாயம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. நீண்ட காலத்திற்குப்  பின்  தமிழகத்தில் 1996 -இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கு  33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின் 2016 அன்று 14 வது  சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில்  உள்ளாட்சி அமைப்புகளில் தமிழகத்தில் மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இன்றும் இந்தியா முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பான்மை மாநிலங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை மகளிர் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் குக்கிராமங்களிலும், படிப்பறிவு குறைவாக இருந்தாலும், பட்டறிவு மூலம் எவ்வாறு பணி செய்கிறார்கள் என்ற விவரங்களைப் பஞ்சாயத்து வெப்-சீரியல் மிக நேர்த்தியாக வெளிகொணர்ந்தது. அது வட இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் நாம் வசித்த உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.

உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்படும் மகளிர் இட ஓதுக்கீடு போலவே, மாநில சட்டப் பேரவைகளுக்கும், ஒன்றிய மக்களவையிலும் வழங்கப்பட வேண்டும் என்ற முன்னெடுப்புகள், முயற்சிகள் பெரும் சரித்திரமாக, முடியாத வேதாளம்- விக்ரமாதித்யன் கதையாக நீள்கிறது.

1974 -ஆம் ஆண்டு மகளிர் நிலை குறித்து , அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு, ஆட்சி அதிகார சட்டமியற்றும் அவைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து  கவலை கொண்டது. அதற்கான விடிவு 1996 -ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசில் 12.09.1996 அன்று  மகளிருக்கான இட ஒதுக்கீடாக மிளிர்ந்தது. மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு 1996, 1997, 1998 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஆறு  முறை கொண்டு வரப்பட்டு, கட்சிகளின் கருத்தொற்றுமை இல்லாததால் கிடப்பில் போடப்பட்டது.

2021 -ஆம் ஆண்டு இந்தியப் பெண்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பொதுநல மனு அளித்தது. காலம் ஓடியது. 2023 -ஆம் ஆண்டு புதிதாகக் கட்டப்பட்ட பாராளுமன்றத்தில் முதல் சட்டமாக 33 சதவிகித மக்களவையில், சட்டமன்றங்களில் மகளிரைப் பிரதிநிதித்துவம் அளிக்கும்  மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் வைக்கப்பட்ட நிபந்தனைகள், சட்டம் கொண்டு வரப்பட்டாலும், சட்டம் அமலாகக் குறைந்தது 15 ஆண்டுகளாகும் என்கிறார்கள். சட்டம் 2023-க்கு பிறகு எடுக்கப்படும் மக்கள்தொகை புள்ளி விவரங்களுக்குப் பிறகு, தொகுதி மறுவரையறைக்குப் பின் அமலுக்கு வரும் என்கிறது. பின் 15 ஆண்டுகள் அது அமல்படுத்தப்படும் என்ற வரையறை உள்ளது.  ஆனால், தொகுதி வரையறைக்கான காலம் குறிப்பிடப்படவில்லை.

இந்தியத் தேர்தல் ஆணைய இணையதளம் 2026-க்கு பிறகு 2031-இல் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பின் தொகுதி சீரமைப்பு என்கிறது. தொகுதி சீரமைப்பு நடைபெற குறைந்தது நான்கு ஆண்டுகளாகும் என்கிறார்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பு 2033-இல் கிடைக்கும் என்கிறார்கள். பொதுவாகவே மகளிர் 33 சதவிகித இட ஒதுக்கீடு 2039 -இல் அமலாகும் எனக் கணிக்கிறார்கள்.

2024 தேர்தலில் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரின. ஆளும் ஒன்றிய பா.ச.க. அரசு பிடிவாதமாகத் தொகுதி மறுவரையறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு என உறுதியாக நிற்கிறது. இது குறித்து சோனியாகாந்தி மக்களவையில் “அரசியல் பொறுப்புகளுக்காக இந்தியப் பெண்கள் காத்திருக்கிறார்கள். இப்போது இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. எத்தனை ஆண்டுகளுக்கு? இரண்டு  ஆண்டுகளா? நான்கு ஆண்டுகளா? ஆறு  ஆண்டுகளா? எட்டு  ஆண்டுகளா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மகளிர் இட ஒதுக்கீட்டிலும், சாதிவாரி மகளிர்  உள் ஒதுக்கீடே சரியான பிரதிநிதித்துவம் வழங்கும் என்ற குரல்களை மறுக்க இயலாது. ‘ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாதுஎன்று ஒன்றிய பா.ச.க. அரசு உணர்ந்து சட்ட, பாராளுமன்றங்களில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும். இது  இந்திய மக்கள்தொகையில் 48.5 சதவிகிதம் உள்ள 702.61 மில்லியன் எண்ணிக்கை உள்ள மகளிருக்கு நாம் தரும் பெரும் முதல் மரியாதையாக அமையும்.