Namvazhvu
இறைவேண்டலின்  பரிமாணங்கள் – 25 செபமாலை இறைவேண்டல்!
Friday, 01 Nov 2024 05:13 am
Namvazhvu

Namvazhvu

கத்தோலிக்கர்களின் இறைவேண்டலில் செபமாலைக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது. ஆனால், செபமாலை பற்றிய நமது பார்வையைச் சற்று விசாலப்படுத்த வேண்டும். செபமாலை என்பது ஒரு மரியியல் மன்றாட்டு, மரியன்னைமீது அன்பு கொண்ட பிள்ளைகள் தவறாது வெளிப்படுத்தும் அன்பின் வேண்டுதல் என்பதே பலரின் பொதுவான புரிதல். அது உண்மைதான் என்றாலும், முழு உண்மையல்ல.

மேற்கூறியவைகளோடு, செபமாலை ஒரு கிறிஸ்தியல் மன்றாட்டு என்பதும், இயேசுவின் வாழ்க்கை மறையுண்மைகளைச் சிந்திக்கும் ஒரு கிறிஸ்து மைய வேண்டுதலும்கூட என்பதே முழு உண்மை. இது சிலருக்கு வியப்பைத் தரலாம். ஆனால், இதுவே செபமாலை பற்றிய முழுமையான பார்வை. செபமாலையில் நம் உதடுகள்அருள் நிறைந்த மரியே வாழ்கஎன்று உச்சரித்தாலும், நம் உள்ளம் இயேசுவின் வாழ்வு மறையுண்மைகளையே சிந்திக்கிறது. எனவேதான், அது ஒருகிறிஸ்து மைய மன்றாட்டுஎன அழைக்கப்படுகிறது.

கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (எண்:971) மரியன்னை வணக்கம் என்பது கிறிஸ்தவ வழிபாட்டின் இன்றியமையாப் பங்கு என்கிறது. முற்காலத்திலிருந்தே திரு அவை அன்னை மரியாவைக் கடவுளின் தாய் என்று வணங்கி வந்துள்ளது என்றும், மரியன்னை வணக்கம் என்பது இறைவழிபாடு, ஆராதனையிலிருந்து வேறுபட்டது என்றும் தெளிவுபடுத்துகிறது. மேலும், மரியன்னை வணக்கம் மரியன்னை விழாக்கள், செபமாலை போன்ற மரியன்னை மன்றாட்டுகள் வழியாக வெளிப்படுகிறது என்கிறது. சிறப்பாக, ‘செபமாலை நற்செய்தி நூலின் மிகச் சிறந்த மாதிரிஎன்றும் செபமாலையைப் புகழ்கிறது கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி.

செபமாலையைத் தங்கள் அன்றாட இறைவேண்டலில் இணைத்துக் கொண்ட பலரும் அதன் ஆசிகளைப் பற்றி சான்று பகர்ந்துள்ளனர். திருத்தந்தை 12-ஆம் பயஸ் செபமாலை மனிதரிடமிருந்து அல்ல; இறைவனிடமிருந்தே வந்தது என்று சொல்லி செபமாலை வேண்டலை ஊக்குவித்தார். அது வெறுமனே, அன்னை மரியாவிடம் மட்டும் நம்மை இட்டுச் செல்வதில்லை. செபமாலையை உளமார, உணர்ந்து வேண்டுபவர்கள் தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூவோர் இறைவனிடம் நெருங்கி வருகின்றனர் என்பதே செபமாலை அன்பர்களின் அனுபவம்.

இறைவார்த்தைக்கு முதன்மை தருகிற இன்றைய நாள்களில் செபமாலை ஒரு விவிலிய மன்றாட்டு என்பது வலியுறுத்தப்படுகிறது. ‘அருள் நிறைந்த மரியே வாழ்கஎன்னும் மன்றாட்டின் முதல் பகுதி முழுவதும் விவிலியத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது என்பது முதல் வாதம். செபமாலையின்போது நாம் சிந்திக்கின்ற கிறிஸ்துவின் வாழ்வியல் மறையுண்மைகள் அனைத்தும் விவிலியம் சார்ந்தவையே என்பது இரண்டாவது வாதம்.

செபமாலையின் தனிச்சிறப்பே அதன் எளிமைதான்; அன்னை மரியாவைப்போல! படித்தவர், பாமரர், பெரியோர், சிறியோர் என அனைவரும் மிக எளிதாக இறைவேண்டல் செய்யக்கூடிய பண்பு செபமாலைக்கு இருக்கிறது. மேலும், செபமாலையின்போது அன்னை மரியாவும் நம்மோடு சேர்ந்து மன்றாடுகிறார் என்பது அதன் கூடுதல் சிறப்பு. மரியன்னை ஓவியங்கள் பலவற்றில் அன்னையின் கையில் செபமாலை இருப்பதைக் காணலாம். நாம் செபமாலை செபிக்க நம்மை ஊக்குவிக்கவே அன்னை மரியா செபமாலையோடு காட்சி தருகிறார். லூர்து நகரில் மசபியேல் குகையில் சிறுமி பெர்னதத்துவுக்கு 18 முறை காட்சி தந்த அன்னை தனது கையில் செபமாலை ஒன்றை வைத்திருந்தார். பெர்னதத் செபமாலை செபித்தபோதெல்லாம், மரியன்னையின் கையிலுள்ள செபமாலை மணிகள் அசைந்ததைக் கண்டதாகப் பெர்னதத் சான்று பகர்ந்துள்ளார்.

திரு அவையின் நெடிய வரலாற்றில் எத்தனையோ புனிதர்கள் செபமாலையைத் தங்கள் வாழ்வோடு இணைத்துக் கொண்டுள்ளனர். புனித தோமினிக்கில் தொடங்கி, அருளாளர் ஆலன் டி லா ரோச், புனித லூயி மரிய மாண்ட்ஃபோர்ட், புனித இராபர்ட் பெல்லார்மின், புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார், புனித அன்னை தெரசா, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், இன்றைய திருத்தந்தை பிரான்சிஸ் என திரு அவையின் புனிதர்கள், மாமனிதர்கள் அனைவரின் மனம் கவர்ந்த மன்றாட்டாகச் செபமாலை இருக்கிறது.

செபமாலையின் நிறைவான தனித்துவச் சிறப்பு அது ஓர் ஆழ்நிலைத் தியான வேண்டல் (Contemplative prayer) என்பது. நமது இறைவேண்டல் சொற்களிலும், சிந்தனையிலும் தொடங்குகிறது. அடுத்து அது தியானம் என்னும் நிலைக்கு உயர்கிறது. தியானத்தில் சிந்தனை, கற்பனை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இவை அனைத்தையும் கடந்த அமைதியே ஆழ்நிலைத் தியானம் என்பது. இறைவேண்டலின் சிகரமே ஆழ் நிலைத் தியானம் என்றும் சொல்லலாம். செபமாலையை நாம் பொருளுணர்ந்துமுழு ஈடுபாடு மற்றும் அர்ப்பணத்தோடு மன்றாடும்போது, அதுவே ஓர் ஆழ்நிலைத் தியான வேண்டலாக மாறுகிறது.

செபமாலையை மூன்று விதங்களில் பயன்படுத்தலாம். அதனை ஓர் எளிய மரபு வேண்டலாக மன்றாடலாம். இதுவே முதல் படி. கிறிஸ்துவின் வாழ்வு மறையுண்மைகளைத் தியானிக்கும் தியான இறைவேண்டலாகவும் பயன்படுத்தலாம். இது இரண்டாவது படி. இன்னும் சிறப்பாக, செபமாலையைத் தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூவோர் இறைவனோடு அமைதியில் ஒன்றிக்கும் ஆழ்நிலைத் தியான வேண்டலாகவும் உயர்த்தலாம். இதுவே சிறப்பான படி. செபமாலை அன்பர்கள் அனைவரும் முதல் படியிலிருந்து மூன்றாம் படிக்குப் பயணம் செல்வோமாக!               

(தொடரும்)