அவனை நாங்கள் ‘இடி’ என்று அழைப்போம். ‘இடியட்’ என்பதன் சுருக்கம் அது. என்னதான் முட்டாளாய் இருந்தாலும், ஒருவரை நேரடியாக ‘முட்டாள்’ என்று அழைப்பது முட்டாள்தனம் இல்லையா? எங்கள் கல்லூரியில் அவனை முதலில் ‘முட்டாள்’ என அழைத்தவர் அவன் அப்பாதான். அவன் ஓரளவு நன்றாகப் படிப்பவன்தான். 90 சதவிகிதம் வாங்கமாட்டான்; ஆனால், 70 சதவிகிதம் வாங்கிவிடுவான். எனவே, அவன் அறிவில்லாத முட்டாள் அல்ல; அறிவுள்ள முட்டாள்தான். யாருக்கும், எந்த நிலையிலும் உதவி செய்வான். இதுதான் அவன் முட்டாள் பட்டம் பெறக் காரணம்.
‘இடி’ கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்போதே கவனித்திருக்கிறேன்; அங்கு வந்திருந்த அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருந்தான். எல்லாருக்கும் உதவி செய்து விட்டு, கடைசி நேரத்தில் ஓடிச்சென்று தன்னுடைய விண்ணப்பத்தைக் கொடுத்தான். அன்றிலிருந்து அவனைக் கவனித்து வருகிறேன். அவனிடம் உண்மையாக உதவி பெற்றவர்களுக்குச் சமமாக, அவனை ஏமாற்றுபவர்களும் இருந்தார்கள். ஆனால், அவன் சளைக்காமல் மீண்டும் மீண்டும் சென்று உதவுவான். போகும், வரும் வழிகளில் யாராவது விபத்தில் அடிபட்டால், உடனே அங்கு முதல் ஆளாய்ப் போய் நிற்பான். அவர்களை வீடு சேர்ப்பது வரை விடமாட்டான். ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை, கடந்த இரண்டு வருடங்களில் இருபது முறையாவது இப்படிச் செய்திருப்பான்.
ஒருமுறை நான் அவனுடன் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கும்போது இப்படித்தான் தூரத்தில் ஒரு விபத்தைப் பார்த்தான். சைக்கிளை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடிச்சென்றான். நான் திரும்பி வந்துவிட்டேன். பிறகு இரத்தக் கறையுடன் வகுப்புக்கு வந்தான். இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வுக்கான கட்டணம் கட்ட வரிசையில் நின்றிருந்தபோது, அவனைப் பலமுறை ஏமாற்றியிருந்த ‘சாண்டி’ எனப்படுகிற சாந்தகுமார் வந்தான். கல்லூரிக்கு வரும் வழியில் தன் மணிப்பர்சை யாரோ திருடிவிட்டார்கள் என்றும், தேர்வுக் கட்டணத்துக்குப் பணமில்லை என்றும் ‘இடி’யிடம் கேட்டான். ஒரு நொடிகூட யோசிக்காமல் ‘இடி’ அவனுக்குத் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தான். அடுத்த வாரம் அவனது அப்பா வந்தபோதுதான், அவன் செய்திருக்கும் வேலை வெளிவந்தது. அவன், தான் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தைதான் சாண்டிக்குத் தந்திருக்கிறான். அவன் தேர்வுக்குப் பணம் கட்டவில்லை என்று பிரின்சிபல் அவன் அப்பாவை அழைத்திருந்தார். அன்றைக்குத்தான் பல மாணவர்களுக்கும் முன்புவைத்து அவன் அப்பா அவனை ‘முட்டாள்’ எனத் திட்டினார்.
வார இறுதியில் பார்வையற்றவர்களுக்குப் பாடம் வாசிக்கச் செல்வான். தமிழ் மீடியம் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பான். பண்டிகைக்கு முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் என்று சென்று கொண்டாடுவான். சினிமா, மால், செல்போன் என எதையும்விட இதைத்தான் கொண்டாடினான். நாங்கள் எல்லாம் வேலை கிடைக்க வேண்டும், வெளிநாடு போக வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று படித்துக்கொண்டிருந்தோம். சிலர் சோஷியல் மீடியாவில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தனர். ஆனால், இவன்?…இந்தக் காலத்தில் இப்படி ஒருவன் இருந்தா அவனை ‘இடியட்’ என்று அழைக்காமல் என்ன செய்வது? அதைத்தான் அவன் அப்பாவும் செய்தார். ஆனால், ஒருசிலர் அவனைக் கவனித்தார்கள் என்பது உண்மைதான். அவன் பரிட்சைக்குப் பணம் கட்டாமல் போனான் அல்லவா! அந்தக் கதையைக் கேள்விப்பட்ட எங்கள் கல்லூரியின் வயது முதிர்ந்த அருள்பணியாளர் அவனைக் கூப்பிட்டு பணக்காரரான தன் உறவினர் ஒருவரிடம் சொல்லி அவன் கல்லூரிப் படிப்பு முடியும் வரை எல்லாக் கட்டணங்களையும் செலுத்தச் சொல்லிவிட்டார். ஆனாலும், அவன் செய்த செயல் முட்டாள்தனமானதுதானே? அப்படித்தானே உங்களுக்குத் தோன்றுகிறது? என் தாத்தா அடிக்கடிச் சொல்வார், ‘தனக்குப் பின்தான் தானம்’, ‘ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்’. ஆனால், இப்படிக் கணக்குப் போடாமல் வாழும் ‘இடியட்’ சிலர் இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் என் வீட்டில் போய் இன்னொருவருக்கு உதவ ஐந்து ரூபாய் கொடுத்தேன் என்றால், என் அப்பா முறைப்பார்; அம்மா அறிவுரை சொல்வார். ‘ஒன்னைய ஈசியா ஏமாத்திருவாங்கடா?’ என்பார்கள்.
நேற்று ‘இடி’யிடம் ‘ஏன் இப்படிச் செய்கிறாய்?’ என நேரடியாகக் கேட்டுவிட்டேன். ‘உன்னை எல்லாரும் முட்டாள் என நினைக்கிறார்கள் தெரியுமா?’ என்றேன். அவன் ஒரு கதையைச் சொன்னான்.
ஒன்பது வயது இருக்கும்போது அவன் விடுமுறைக்குத் தன் சித்தி வீட்டுக்குச் சென்றான். அவர்கள் வீடு ஒரு சிறிய இரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் இருந்தது. அவனும், சித்தி வீட்டைச் சுற்றி இருந்த பையன்களும் அங்கு சென்று விளையாடுவது வழக்கம். அப்படி விளையாடிக்கொண்டிருந்த ஒருநாள் அவன் தவறி அங்கிருந்த கிணற்றில் விழுந்துவிட்டான். பையன்களின் கூச்சலைக் கேட்டு இரயில் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வட இந்திய இளைஞன் ஓடி வந்து கிணற்றில் குதித்து ‘இடி’யைக் காப்பாற்றினான். இருவரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் இருந்தனர். ‘இடி’யைவிட, காப்பாற்றக் குதித்தவனுக்கு அடி அதிகம். காலில் எலும்பு முறிவு.
வட இந்தியாவிலிருந்து அவன் மாமா ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். வந்தது முதல் அவனைத் திட்டிக்கொண்டே இருந்தார். அவர் அவனை என்ன சொல்லித் திட்டினார் தெரியுமா? “பேவ்கூஃப், பேவ்கூஃப்”…(முட்டாள், முட்டாள்) என்று திரும்பத் திரும்பத் திட்டிக்கொண்டிருந்தார். அவனுக்கு வேலை கிடைத்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தது. குடும்பமே அவனை நம்பிதான் இருந்தது.
‘உண்மையில் அவன் செய்த காரியம் எத்தனை முட்டாள்தனமானது என்று நான் நினைத்தேன்’ என்றான் ‘இடி’. “எனவே, நானும் ஒரு முட்டாளாக வாழ முடிவு செய்துவிட்டேன்” என்றான்.
எப்படிப்பட்ட முட்டாள்கள் பாருங்கள்! இதுபோன்ற முட்டாள்கள் இன்னும் முட்டாள்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும், மனத்தில் பொறாமை தோன்றத்தான் செய்தது. ஒருவன் புனிதனா? அல்லது முட்டாளா? என்று அறிவது எப்படி?