வெளிநாடுகளில் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆற்றும் நோக்கத்துடன், 170 ஆண்டு களுக்கு முன்னர், இத்தாலியின் மிலான் நகரில், அயல்நாடுகளில் மறைபரப்புப்பணியாற்ற உரு வாக்கப்பட்ட ஞஐஆநு என்ற பாப்பிறை மறைப் பணிக் கழக அமைப்பைச் சார்ந்தவர்களை, மே 20 ஆம் தேதியன்று திருப்பீடத்தில் சந்தித்து பாராட்டினார்.
திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களின் விருப்பத்தின்படி, ஆயர் ஆஞ்சலோ ரமாஸோட்டி என்பவரால், அருள்பணி பயிற்சிக்கென, ஓர் இல்லமாக துவக்கப்பட்ட இந்த அமைப்பு, முதலில் ஓசியானியா, இந்தியா, பங்களாதேஷ், மியான்மார், ஹாங்காங், சீனா ஆகிய இடங்களிலும், பின்னர், பிரேசில், அமேசான், அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான், கினி பிசாவ், பிலிப்பீன்ஸ், காமரூன், ஐவரி கோஸ்ட், தாய்லாந்து, கம்போடியா, பாப்புவா நியூ கினி, மெக்சிகோ, அல்ஜீரியா, சாடு ஆகிய நாடுகளிலும் மறைப்பணியாற்றியதைக் குறிப்பிட்டு பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த அமைப்பினால் பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாடுகளில் மறைப் பணியாற்றியபோது, 19 பேர் மறைசாட்சிகளாக உயிரிழந்துள்ளதையும் குறிப்பிட்டார்.
வெளிநாடு களுக்குச் சென்று மறைப்பணி யாற்றுவதை துறவுசபைகளே ஆற்றிவந்த நிலையில், இவ்வமைப்பை உருவாக்கி, நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆற்றத் துவங்கி 170 ஆண்டுகளை கடந்து வந்துள்ள இந்த அமைப்பு, ‘நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு’ என்று கூறிய புனித பவுலின் வார்த்தைகளை மையக்கருத்தாக எடுத்து, தங்கள் இன்றைய பணிகளையும், வருங்காலப் பணிகளையும் குறித்து விவாதிக்க உரோம் நகரில் கூடியிருப்பது குறித்து திருத்தந்தை பாராட்டினார். நற்செய்தி அறிவிப்பின் தேவையை வலியுறுத்தி, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், மேக்சிமும் இல்லியூட் என்ற திருத்தூது ஏட்டை வெளியிட்ட 100ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில், வரும் அக்டோபரில், ‘திருமுழுக்கு வழங்கி அனுப்பப்படுதல் : உலகில் இயேசுவின் திருஅவையின் பணி’ என்ற தலைப்பில் சிறப்பு மறைப்பணி மாதம் அறிவிக்கப்பட்டுள்ளதையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.