Namvazhvu
400க்கும் அதிகமானோருக்கு மின்வசதி கொடுத்த கர்தினால் கொன்ரார்டு கிராஜூவ்ஸ்கி
Wednesday, 26 Jun 2019 06:52 am

Namvazhvu

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கர்தினால் கொன்ரார்டு கிராஜூவ்ஸ்கி, அண்மையில், உரோம் நகரில், 400க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்த ஒரு கட்டடத்தில், மனிதாபிமான முயற்சிகளை மேற்கொண்டார். உரோம் நகரில் உள்ள ஒரு கட்டடத்தில், குழந்தைகள் உட்பட, 400க்கும் அதிகமானோர், மின்வசதியின்றி இருந்ததை அறிந்த கர்தினால் கிராஜூவ்ஸ்கி, அக்கட்டடத்தின் மின் துண்டிப்பை மீண்டும் சரிசெய்து, அம்மக்களுக்கு உணவு, மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்தார்.
அக்கட்டடத்தில் வாழ்ந்தவர்கள், மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், அங்கு மின் வசதி துண்டிக்கப்பட்டதை அறிந்த கர்தினால் கிராஜூவ்ஸ்கி, இந்த மனிதாபிமான முடிவை எடுத்ததாக, ஹசூளுஹ எனப்படும் இத்தாலிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். உரோம் நகரின் மையத்தில், ஏறத்தாழ 500 பேர், ஒரு தீவில் இருப்பதுபோல், தனித்து விடப்பட்ட நிலையில் வாழ்வது, பெரும் வேதனை என்று கூறிய கர்தினால் கிராஜூவ்ஸ்கி, இப்பிரச்சினையில், குழந்தைகள் சிக்கியிருந்ததால், தான் இந்த முடிவை, உடனடியாக எடுத்ததாகக் குறிப்பிட்டார்.
தன்னுடைய இச்செயலால், அபராதங்கள் விதிக்கப்பட்டால், அவற்றைத் தான் சந்திக்கத் தயார் என்றும், கர்தினால் கிராஜூவ்ஸ்கி, தன் பேட்டியில் குறிப்பிட்டார். கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் வாழும் சிறார்களுக்கு உதவும் நோக்கத்தில், ஒரு இலட்சம் டாலர்களை, திருத்தந்தையின் பெயரால், கர்தினால் கிராஜூவ்ஸ்கி, கடந்த வாரம், நன்கொடையாக வழங்க அத்தீவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.