Namvazhvu
"இணக்கத்தைக் கொணர்வது இறைவனின் அமைதி" - திருத்தந்தை
Wednesday, 26 Jun 2019 09:03 am

Namvazhvu

உயிர்த்த இயேசுவைக் கண்டு, அவரோடு அமர்ந்து உணவருந்திய பின்னரும், வருங்காலம் குறித்த சந்தேகங்களுடனேயே வாழ்ந்த சீடர்களிடையே, தூய ஆவியார் இறங்கி வந்த பின்னரே, அவர்களின் கவலைகள் அனைத்தும் களையப்பட்டன என்று, திருத்தந்தை பிரான்சிஸ், பெந்தக்கோஸ்தேப் பெருவிழா அன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப்
பேராலய வளாகத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் மரணத்திற்குப் பின், தங்கள் உயிர் குறித்து கவலைப் பட்டுக் கொண்டிருந்த சீடர்கள், தூய ஆவியாரின் வருகைக்குப் பின் தங்கள் உயிரையும் கையளிக்கத் தயங்காத துணிவு பெற்றுள்ளதைக் காண்கிறோம் என்றார்.
அச்சத்தில் வாழ்ந்த சீடர்கள், தூய ஆவியாரின் வருகைக்குப்பின் தங்களுள் இளம் இரத்தம் பாய்ச்சப்பட்டவர்களாக உணர்ந்தனர், அதே தூய ஆவியானவர்தாம் இப்போதும் நம் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்கிறார் என்று  திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். 
சீடர்களின் வாழ்வை இலகுவான தாகவோ, அவர்களின் வாழ்வில் பெரிய அற்புதங் களையோ, அவர்களின் துன்பங்களையும் எதிரிகளையும் அகற்றிவிடும் பணியையோ, தூய ஆவியார் நிகழ்த்தவில்லை, மாறாக, அவர்களின் வாழ்வில் குறைவுபட்டிருந்த இணக்கத்தைக் கொணர்ந்ததன் வழியாக, அருஞ்செயல்கள் ஆற்ற உதவினார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த இயேசுவைக் கண்டால் மட்டும் போதாது, அவரை நம் இதயத்தில் பெற்று, அவரைப்போல் நாமும் உயிர்த்தவர்களாக, மனிதர்களுடன் இணக்கத்தில் வாழ வேண்டியது அவசியம் என்றார்.
நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள அமைதி என்பது ஆழமான இணக்க வாழ்வாகும். அது நமக்குள் மட்டு மல்ல, நம்மிடையேயும் இணக்கத்தைக் கொணர்வதாகும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் உரைத்தார். பல்வேறு விதமான கொடைகளை வழங்கும் தூய ஆவியார், அவற்றின் அடிப்படையில் ஒன்றிப்பைக் கட்டி யெழுப்புகிறார், ஏனெனில், இணக்க வாழ்வை உருவாக்கு
வதில் அவரே வல்லுனர் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
இணக்க வாழ்வின்மையாலேயே பிரிவினைகள் அதிகரிக்கின்றன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ், அகந்தைக்குத் தாழ்ச்சியினாலும், தீமைக்கு, நன்மையாலும், கோபக்குரல்களுக்கு, அமைதியாலும், புறஞ்சொல்வோருக்கு, செபத்தாலும், தோல்விகளுக்கு, ஊக்கமளிக்கும் வார்த்தைகள் வழியாகவும் பதிலளிப்போம், என கேட்டுக்கொண்டார்.