மனிதர்களுக்கு மீட்பளிக்க இறைவன் தன் மகனையே நமக்கு அனுப்பித் தர, மகனோ தன் பணியைத் தொடர 12 திருத்தூதர்களை அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்ப, அதன்பின் ஆயர்களின் வழியாக இப்பணி தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
சிலே நாட்டின் சந்தியாகோ தெ சிலேயின் புதிய துணை ஆயர் அல்பெர்த்தோ ரிக்கார்தோ லொரென்செல்லி ரோசி அவர்களை, ஜூன் 22, சனிக்கிழமையன்று மாலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் ஆயராக திருநிலைப்படுத்திய திருப்பலியில் மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், ஆயரின் பணி வழியாக மீட்பின் நற்செய்தியைப் பறைசாற்றுவதும், விசுவாச அடையாளங்கள் வழியாக விசுவாசிகளைப் புனிதப் படுத்துவதும், புதிய அங்கத்தினர்களைத் திருஅவைக்குள் இணைப்பதும் இவ்வுலகப் பயணத்தில் மக்களை வழி நடத்துவதும் இயேசுவே எனக் கூறினார்.
வாழ்வில் ஒவ்வோர் ஆயரும் தன் வேர்களை அறிந்தவராக இருக்கவேண்டும், அதேவேளை, அவர்கள்
மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதால்
இறைத்தொடர்புடையவற்றில் கவனம் செலுத்த வேண்டிய வர்கள் எனவும், தன் மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டார். ‘ஆயர் நிலை’ என்பது பணியின் பெயரே அன்றி, கௌரவம் அல்ல, என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், ஓர் ஆயரின் முதல் பணி என்பது இறைவேண்டல் என்பதையும் எடுத்துரைத்தார்.