Namvazhvu
ஆணவக்கொலை - தேசிய அவமானம்!
Wednesday, 17 Jul 2019 07:36 am

Namvazhvu

தமிழகம் ஆணவக்கொலைகளின் கூடாரமாக மாறிவருவது சமூக சீர்த்திருத்தக் கருத்துகளும் திராவிடமும் திளைத்த இந்த மண்ணிற்கு மிகப்பெரிய அவமானமாக விளங்குகிறது.  தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கௌசல்யாவைத் திருமணம் செய்த காரணத்தால் பட்டப் பகலில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் படுகொலை செய்தது ஆணவக் கொலையின் கோர முகத்தை உலகிற்கு காட்டியது.
திருச்சி பாலக்கரை பசுமடத்தைச் சேர்ந்த சத்தியநாராயணாவை நிவேதாவைக் காதலித்ததற்காகக்  கொன்ற அவர்தம் அண்ணன் வினோத்.. கர்நாடகா மாநிலம் பிஜபூர் குண்டகனாலா கிராமத்தைச்சேர்ந்த சரணப்பாவைத் திருமணம் செய்ததற்காக பானுபேகத்தைக் கொலைசெய்த அவர்தம் குடும்பத்தார், கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த கெவின் ஜோசப்பை கொலை செய்த நீனுவின் தந்தை ஜான் சாக்கோ, ஆந்திரா சித்தூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த கேசவலுவைத் திருமணம் செய்து குழந்தை பெற்ற ஹேமாவதியைக் கொலைச் செய்த பாஸ்கர் நாயுடு, குஜராத் மாநிலம், குட்ச் மாவட்டம் காந்திதம் பகுதியைச் சேர்ந்த  பட்டியலின ஹரேஷ்குமார் சோலங்கியைக் கொன்ற ஊர்மிளாவின் உறவினர்கள்.. தெலுங்கானா மாநிலம் மன்சரியல் மாவட்டத்தில் உள்ள காலமாடுகு கிராமத்தைச் சேர்ந்த லக்ஷ்மனைத் திருமணம் செய்த அனுராதாவை எரித்துக் கொன்று சாம்பலை ஆற்றில் கரைத்த அனுராதாவின் தந்தை,  ...இப்படி ஆணவக் கொலைக்காரர்களின் பட்டியல் நீளும். ஆணவக்கொலைகள் ஒரு தேசிய அவமானம்.
ஓசூரைச் அடுத்த சூடகொண்டபள்ளி நித்திஷ்-சுவாதி தம்பதியினரைக் கொலை செய்த சுவாதியின் குடும்பத்தார், இம்மாதம் மேட்டுப்பாளையத்தில் கனகராஜூவையும் வர்ஷினி பிரியாவையும் படுகொலை செய்த கனகராஜின் சகோதரர் வினோத்.. என்று   கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 185ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன என்று மனித உரிமைப்போராளி எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் குறிப்பிடுகிறார்.  இலைமறை காயாக காலங்காலமாக இருந்துவந்த ஆணவப்படுகொலை சாதியத் திமிரின் கொடுமுடியாகக் கடந்த இருபது ஆண்டுகளில் மாறிபோனது தமிழ்ச்சமுதாயத்தின் சாபமாகும். சமூக சீர்த்திருத்தத்தின் தோல்வியுமாகும். 
சாதியத்தின் விரசம் அதன் அனைத்து அடுக்குகளிலும் உள்ளது என்பதை மேட்டுப்பாளையம் படுகொலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உட்சாதி அமைப்புகளும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அது நிருபித்துள்ளது.   சாதியத்தை மறுக்கும் இஸ்லாத்திலும், சாதியத்தைத் தழுவிய கிறிஸ்தவத்திலும் இந்த ஆணவப் படுகொலைகள் மதரீதியாகவும் சாதிய ரீதியாகவும் நடந்தன என்பதற்கு சாக்கோவும் பேகமும் நமக்கு உதாரணங்கள்.  ஆந்திராவில் பிரணய்யைக் கொன்ற அமிர்தாவின் அப்பா, அரசியல் செல்வாக்குமிக்கவர். உடுமலை சங்கரைக் கொன்ற கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி செல்வச் செல்வாக்குமிக்கவர்.  தர்மபுரி இளவரசன் இறக்கக் காரணமானவர்கள் சாதிச் செல்வாக்குமிக்கவர்கள்.  இப்படி சாதியமும் பணமும் அரசியலும் ஆணவப் படுகொலையில் பின்னிப் பிணைந்துள்ளன. இவைமட்டுமல்ல.. சமூகத்தின் மனநிலையும் இதற்கு காரணமாகும். அவர்களைச் சுற்றியுள்ளவர்கள்,  ‘போயும் போயும் அந்தச் சாதி பையனையா உன்பொன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டா’ என்ற ஏச்சும் அவர்களின் கோபத்தைத் தூண்டுகிறது. மேலும் பெண்ணின் உடலை தன் சாதியின் சொத்தாக பார்க்கிற சமூக மனநிலையும் ஆணாதிக்க மனப்பான்மையும் இதற்குக் காரணம். தன் சாதியின் இரத்த வாரிசு என்று பெண்களைப் பார்க்கிற மனோபாவமும்  இதற்கு காரணம்.
சாதியத் தலைவர்களின் எழுச்சியும் சாதியக் கட்சிகளின் வேர்ப்பிடிப்பும் சாதிய அமைப்புகளைப் பலப்படுத்தும் அரசியல் புலமும் ஆணவப் படுகொலையை பரவலாக்கியுள்ளன. பள்ளியில் படிக்கிற காலங்களிலேயே வண்ண வண்ண கயிறு கட்டி சாதியத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் அவலத்தை தமிழகத்தில்  காண்கிறோம்.  தீண்டாமை ஒரு பாவம் என்று பாடப்புத்தகத்தில் அறிக்கையிடுகிற அரசே இங்கே வேடிக்கைப் பார்ப்பதுதான் நகை
முரண். சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட இந்தச்
சமூகத்தில் சாதிமறுப்புத் திருமணத்தை ஆதரித்து ஊக்கப்படுத்திய திராவிடமும் திராவிடக் கட்சிகளும்
அரசியல் லாபத்திற்காகத் தற்சமயம் ஊனமாகிக்
கிடக்கின்றன. அரசும் அரசியல் கட்சிகளும் சாதியத்தின் அடிப்படையிலேயே இயங்குவதாலும் கட்டமைக்கப்படுவதாலும் சாதியப் படுகொலை களையும் ஆணவப் படுகொலைகளையும் வேடிக்கைப் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை.
இது அரசின் ஊனம் என்பதைவிடவும் அரசியல் கட்சிகளின் குறைபாடு என்பதைவிடவும் சமூகத்தின் நோய் என்றே பார்க்க வேண்டும். சாமியைவிட சாதியைத் தூக்கிப்பிடிக்கிற மனப்பான்மை அண்மைக்காலமாக வேரூன்றியுள்ளது. இது தமிழ்ச்சமூகத்தின் வேர் அழுகல்நோய் எனலாம். எப்போதாவது ஓர் ஆணவப்படுகொலை என்றால் அதிhச்சிஅடையலாம். ஆனால் ஆண்டுக்கு மூன்று ஆணவப்படுகொலைகள் என்கிறபோது அவமானம் தான் அடையவேண்டியுள்ளது. ஒரே சாதிக்குள் திருமணம் செய்வதன் மூலம் சாதியைப் புதுப்பித்துக்கொள்கிற இந்தச் சாதியச் சமூகம்,  ஆணவக் கொலைகள் மூலம் இந்நடைமுறையை தக்கவைக்கப் பார்க்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குழந்தைகள் திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் ஆதரிப்பதன் பின்னணியில்  இந்தச் சாதியவெறித்தனம் மறைந்திருக்கிறது.  
உச்சநீதிமன்றமே இது குறித்து கடுமையான கண்டனத்தையும் தீர்ப்பையும் வழங்கியுள்ள நிலையில், இந்திய சட்ட ஆணையம் இயற்றியுள்ள இந்தச் சட்டத்தை  ‘ஞசடிhibவைiடிn டிக ஐவேநசகநசநnஉந றiவா ஆயவசiஅடிnயைட ஹடடயைnஉநள ஐn கூhந சூயஅந டிக ழடிnடிரச யனே கூசயனவைiடிn க்ஷடைட’ மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி, மாநில அரசுகளுக்குப் பரிந்துரைத்து,  கடுமையான தண்டணைக்குரிய விதிகளோடு அமல்படுத்த வேண்டும்.  ஆணவப் படுகொலையில் ஈடுபடுவோர் ஜாமின் பெறமுடியாதபடி கடுமையான விதிகள் அச்சட்டத்திற்குள் இடம்பெற வேண்டும். ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ என்பதைவிட ‘ஒரே நாடு-ஒரே சுடுகாடு’ என்று சாதியத்தைச் சுட்டெரிக்க வேண்டும்.