ஒரு வாரத்தில் ஹாங்காங்கில் இரண்டு பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள். இவற்றை முன்னெடுத்துச் சென்றவர்கள் பெரும்பாலும் 17 வயது முதல் 21 வயது வரையிலுள்ள இளையோர் தான். அவர்கள் ஏன் இதில் ஈடுபடவேண்டும்?
இதுநாள் வரையிலும் ஹாங்காங் இளைஞன் படிப்பிலும், பணம் பண்ணுவதிலுமே குறியாக இருந்தான். அவனுக்கு அரசியலிலும், படைப்புச் சிந்தனையிலும் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தான். ஆனால் சென்ற வாரத்தில் ஹாங்காங்கின் தெருக்களில் இளையோர் முகமூடி
யணிந்து, எதிர்ப்புத் தட்டிகளை நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் மேல் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. வீசப்பட்ட குண்டுகளைப் பிடித்துக் காவலர் மேல் எரிந்துள்ளார்கள் காவல்துறை வன்முறைத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. பலர் காயமுற்றனர். பலரைக் காவலர்கள் கைது செய்தார்கள். காவலர்கள் கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சிப் பலர் ஓடினார்கள். பல்கலைக் கழக வளாகங்களில் காவலர்கள் புகுந்து தாக்குவார்களோ என்ற அச்சம் பரவிற்று.
இளையோரின் பெற்றோர் முதலில் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தராவிட்டாலும், தங்கள் குழந்தைகள் அடிபடுவதைப் பார்த்துக் கொண்டு தாய்மார்கள் இருக்க முடியவில்லை. அவர்களும் போராட்டக் களத்தில் குதித்து விட்டார்கள். “எங்கள் குழந்தைகளைச் சுடாதீர்கள்” என்ற பதாகைகளை ஏந்திப் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணம் நம்மைப் பொறுத்தவரையில் பெரிதாகத் தோன்றவில்லை. ஹாங்காங்கில் குற்றம் சுமத்தப்படுவோரை சீனாவிற்கு நாடு கடத்து என்ற சட்ட முன்வரைவினை தலைவர் கேரி லேம் சட்டமன்றத்தில் கொண்டுவரப் போவதாக அறிவித்தார். இதுதான் போராட்டம் வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தது. நீதித்துறை ஹாங்காங்கின் உரிமை. நீதிமன்றத்தில் குற்றவாளிகளை விசாரிப்பதும் தண்டனை வழங்குவதும் ஹாங்காங் ஒப்பந்தத்திற்கு உட்பட்டது. ஆனால் இப்போது இதனை டைஜிங்கிற்குக் கையளிக்க நினைக்கிறது ஹாங்காங் அரசு. இதனை எதிர்த்துதான் கிளர்ச்சி இளையோரெல்லாம் தங்கள் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக உணர்ந்தார்கள். தாங்கள் இத்தனை நாள் அனுபவித்த உரிமையை இழக்க நேரிடும் என்பதற்கு இது முதல் அடையாளம் என்றும் அஞ்சினார்கள். அதே சமயம் காவலரும் போராட்டம் வன்முறையில் முடிந்துவிடும் என்பதாலேயே போராட்டக்காரர்களைத் தாக்கி னார்கள் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது.
ஹாங்காங்கிற்கென்று தனி வரலாறு உண்டு. 1842 ஆம் ஆண்டு சீன அரசு அபின்போரில் தோற்கடிக்கப்பட்டது. அதன் விளைவாக சீனா ஹாங்காங்கை பிரிட்டனுக்குக் கொடுத்தது. தொடக்கத்திலிருந்தே ஹாங்காங் பன்னாட்டு வணிக மையமாகத் திகழ்ந்தது. 20 ஆம் நூற்றாண்டின் குழப்பங்களால் நகரத்திற்கு அகதிகள் வருகை அதிகமாயிற்று. சீனர்கள் அதிக அளவில் குடியேறினார்கள். தொழில் வளர்ச்சியும்,
பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டன. பிரிட்டனோடு சீனர் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, ஹாங்காங் 1997 ஜூன் 1 முதல் சீனாவின் சிறப்பு ஆளுமைக்கு உட்பட்டது. தன்னாட்சி, முதலாளித்துவ அமைப்பு, சுதந்திரமான நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திர வணிகம், பேச்சுரிமை ஆகியவை ஹாங்காங் நகருக்கு வழங்கப்பட்டன. ஆனால் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தச் சிறப்பு நிலை 2047 ஆம் ஆண்டு முடிவிற்கு வருகிறது. அதன்பிறகு என்ன நடக்கும் என்ற யாருக்கும் தெரியாது.
2047க்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் இன்றைய இளையோருக்கு அதிகமதிக தூரத்தில் இல்லை. இப்போதுள்ள உரிமைகள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படும் நிலை வந்துவிடும் என்ற அச்சத்தின் வெளிப்பாடு இது. ஏனென்றால் இளைஞர்களிடம் இப்போது அரசியல் விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது. 18 வயது முதல் 35 வயது வரையிலுள்ள இளைஞர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்திருப்பது கடைசி இருபது ஆண்டுகளில் மிகவும் உயர்ந்திருக்கிறது. எனவே ஹாங்காங்கில் வருவதால் மிக முக்கிய பிரச்சினையாக அரசியல் விழிப்புப் பெற்ற இளைஞர்களுக்குத் தோன்றுவது வியப்பில்லை.
2014 ஆம் ஆண்டு நடந்த குடை இயக்கத்தின்போது மக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளானார் கள். எனினும் புரட்சியால் நன்மை எதுவும் விளைய வில்லை. தேர்தல் சீர்திருத்தங்களைச் சீன அரசு கொண்டு வந்து விட்டது. அதுபோலவே இப்போதும்
குற்றவாளிகள் சீனாவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்ற சட்ட வரைவு நிறைவேற்றப்படு மானால், தங்கள் அடிப்படை உரிமை போய்விடும் என்று இளைஞர் அஞ்சுவது நியாயம்தான்.
போராட்டம் வலுவடைவதைக் கண்ட ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஜூன் 18 அன்றுதான் கொண்டு வரவிருந்த சட்ட வரைவினை நிறுத்தி வைத்ததாக அறிவித்திருக்கிறார். ஆனால் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று உறுதியினை தரவில்லை. எனவே போராட்டம் தொடர்கிறது. சிறை செய்யப்படும் அச்சத்தால் போராடும் மக்கள் அஞ்சுகிறார்கள். என்ன நடக்குமோ என்ற அச்சம் இளையோர் மத்தியில் இருக்கிறது. போராட்டத்தின் முடிவு...?