Namvazhvu
Fr.Gnani Raj Lazar நம்பிக்கை பிறந்துள்ளது...
Monday, 18 Feb 2019 13:00 pm
Namvazhvu

Namvazhvu

கஜா புயலுக்குப் பிறகு, கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் நல்லுள்ளங்கள் செய்த உதவியால் மீண்டும் நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்

திருஅவையும் அரசும் எடுத்த முயற்சியால், மிக வும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள்  அவற்றின் பாதிப்புகளிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டெழுந்து கொண்டிருக்கின்றன. கடும் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரளா

மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளது. அழிவின் விளிம்பில் நம்பிக்கை பிறந்துள்ளது. சாவின் நிழலில் வாழ்வு துளிர்த் துள்ளது. இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் எதிர்காலம் பற்றிய புதிய நம்பிக்கைபிறந்துள்ளது. அதேபோன்று மதச்சார்பின்மை,வன்முறை, பெரும்பான்மைவாதம், ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் தற் கொலை, சிலை அரசியல், ஜனநாயகமின்மை, பொருளாதார வளர்ச்சியின்மை, பணமதிப்பிழப்பு, சிறுபான்மை வெறுப்பு அரசியல் என்று பாரதியஜனதா கட்சியின் பாசிச தீவிரவாத இந்துத்துவக்கொள்கைகளாலும், கோட்பாடுகளாலும் கடந்த ஐந்து ஆண்டுகாலமாக சீரழிந்த இந்தியாவில், நடந்து முடிந்து வெளிவந்துள்ள ஐந்துமாநிலத் தேர்தல் முடிவுகளும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் உயிரளித்துள்ளது; சிறுபான் மையினராகிய நமக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. 

அரசை எதிர்த்து யார் பேசினாலும் தேசத் துரோகிகள், அரசுக்கு எதிராக யார் கட்டுரை எழுதினாலும் அர்பன் நக்ஸல்கள், அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து யார் போராடினாலும் அவர்கள் அந்நிய நாட்டுக் கைக்கூலிகள்... பா.ஜ.க.வினர் பயன்படுத்திய முத்திரைகள் ஒவ்வொன்றும் அணுகுண்டு ரகம். ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்தது: அரசியல் சாசனத்தின் கைகள் கட்டப்பட்டிருந்தன: எதிர்க்கட்சிகளின் இயங்குதளம் பாரபட்சமின்றி முடக்கப்பட்டிருந்தது. ஒரே இந்தியாவை உருவாக்கக் காவிகளின் கொட்டம் கொடி கட்டிப் பறந்தது. கோடிகோடியாய் பணம் கொட்டப்பட்டு, அரசின் சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. பத்திரிகையாளர் களைச் சந்திக்கத் துணிச்சல் இல்லாத பாரதப் பிரதமர் ’மன்கி பாத்’ வழியாக திரைமறைவில் உரையாடினார்.  பெட்ரோல் பங்குகளில் மக்களின் கோபத்திற்கு மத்தியில் மோடி விளம்பரப் பலகையில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்.  மோடிகளும் மல்லையாக்களும் வங்கிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். யோகிக்களும் ஆதித்யநாத்களும் வெறுப்பு

அரசியலை முன்வைத்து, இந்தியாவிற்குக் காவியடிக்க முற்படுகின்றனர். ’சுவட்ச் பாரத்’ என்ற பெயரில் காந்தியம்தோற்கடிக்கப்பட்டது. காந்தியைக் கொன்றவர்கள் தேசபக்தர்களாக்கப்பட்டனர். ’காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி நாடுநகர்த்தப்பட்டது. ’கர்வாப்சி’ என்ற பெயரில் கிறிஸ்த வர்களும், முஸ்லீம்களும் கட்டாய மதமாற்றம் செய்யப் பட்டு இந்துக்களாக்கப்பட்டனர். பணமதிப்பிழப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமானது. நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்தங்கியது.

பழங்குடிகளும் பட்டியலின மக்களும் இந்துத் துவத்தால் ஜீரணிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். பசுபாதுகாப்புக்கென்று அமைச்சரவையைக் கூட உருவாக்கி, பசுவின் பெயரால் பட்டப்பகலில் மனிதர்களைக் கொல்லும் பாசிசம் வளர்ந்திருந்தது. இளைஞர்களின் மனத்தில் ஆர்.எஸ்.எஸ். ஷகாக்கள் வழியாக வெறியூட்டப்பட்டது. ஷர்ஜிக்கல் ஸ்ட்ரைக் உள்ளிட்ட இராணுவத்தின் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும் மோடி அரசால் அரசியலாக்கப்பட்டன. பத்தொன்பது மாநிலங்களை நேரடியாகவும் மீதி மாநிலங்களைத் தாங்கள் நியமிக்கும் சுயம்சேவக் ஆளுநர்களைக் கொண்டு மறைமுகமாகவும் பா.ஜ.க. வினரே ஆட்சி செய்தனர். தான்மை பொருந்திய அமைப்புகளான மத்திய ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, உச்சநீதி மன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட சுயாட்சி நிறைந்த அமைப்புகள் அனைத்தும் கபளிகரம் செய்யப்

பட்டன. இதுவரை இல்லாத வகைளில் ஆர்.பி.ஐயின் உள் இயக்குநராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமிக்கப் பட்டார். வரலாற்றில் முதன்முறையாக ஆர்.பி.ஐ.யின் இயக்குநர் உர்ஜித் ராஜினாமா செய்தார்.

 

துப்பாக்கிகளின் சத்தத்தில் கௌரி லங்கேஷ்களும் புகாரிகளும் மௌனியாக்கப்பட்டனர். தபோல்கரின்

பேனாக்களில் மைகளுக்குப் பதிலாக இரத்தம் நிரப்பப்பட்டது. இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சி அட்டூழியங்களைவிட, மோடியின் காலத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அட்டூழியங்களும் நெருக் கடிகளும் மிக அதிகம். மோடியின் ஆதிக்கத்தை அவர்தம் அமைச்சர்களும் உபேந்திர குஷ்வாலாக்களும் விரும்பாத நிலை. நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பில் பங்கேற்க நேரமுள்ள பிரதமர் மோடிக்கு, கஜாபுயல் பாதித்த தமிழ்நாட்டைப் பார்க்க நேரமில்லை. டிவிட்டரில் நேரம் செலவிடும் பிரதமருக்கு நிர்வாணத்தோடு போராடும் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை. வெளிநாட்டுப் பயணங்களுக்கு விமானங்களில் செலவிட்ட நேரத்தைவிட நாடாளுமன்றத்தில் மோடி செலவிட்ட நேரம் மிகக் குறைவு.

ஐனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் நேசிக்கும்நாட்டின் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந் திருந்தனர். இந்த நிலையில் தேசமெங்கும் நடைபெற்ற 13 தொகுதிகளுக்கான பாராளுமன்ற இடைத் தேர்தலில் மூன்றே முன்றை மட்டும் வென்று பாஜக மண்ணைக் கவ்வ, நம்பிக்கை மக்களுக்கு வந்தது. குஜராத் தேர்தலில் சம பலத்தோடு காங்கிரஸ் மீண்டெழ இந்துத்துவத்தின் கோட்டைக்குள் விரிசல் விழுந்தது.

இந்த நிலையில்தான் நடந்து முடிந்த மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிகரமான வெற்றியைப் பெற்று பாஜகவின் முகத்திரையைக் கிழித்துள்ளது. இந்துத்துவத்தின் வேர்கள் நிரம்பிய மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் சத்திஸ்கரிலும் ஆட்சியைப் பிடித்து மோடிக்கு மாற்று யார் என்பதை நிருபித்துள்ளது. ஒரு மாநில முதல்வரைவிடவும் அதிகமாக பிரச்சாரக் கூட்டங்களிலும் பறந்து பறந்து பங்கேற்ற பிரதமர் மோடியின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. அவர்தம் 56 இஞ்ச் மார்பளவு சற்றே விடைச்சல் குறைந்துள்ளது. மிதவாத இந்துத்துவவாதியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது சிறுபான்மையினர், விவசாயிகள், குறுந்தொழில் முனைவோர், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள், பெண்கள்,தலித்துகள், பழங்குடியினர் மற்றும் அன்றாடங்காய்ச்சிகள் மத்தியில் இப்போதுதான் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறந்துள்ளது. இயேசுவின் பிறப்பு எப்படி ஏரோதுக்கு கலக்கத்தையும், இடையருக்கும் ஞானியருக்கும் எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கும்  நம்பிக்கையும் தந்ததோ, அதுபோல் நமக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது. அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! பிறக்க இருக்கும் புத்தாண்டில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலும் அதன் முடிவுகளும்  இந்தியர் அனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரட்டும்! 

பிறந்துள்ள பாலன் இயேசுவால் நம்பிக்கை பெருகட்டும்!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!