தமிழக ஆயர் பேரவை சுற்றுமடல்
பேரன்புக்குரிய பேராயர்களே, ஆயர்களே,குருக்களே. இருபால் துறவியரே
இறைமக்களே!
கடந்த ஒரு சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நமது நாட்டிலும் குறிப்பாக நமது தமிழகத்திலும் பரவத் துவங்கி இருப்பதை நாம் நன்கறிவோம். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமது அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நமது ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டுக் கொண்டாட்டங்கள், பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் போன்றவற்றை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுத்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அதன் அடிப்படை யில் ஒருசில வழிகாட்டுதல்களை சமுதாய நலன் கருதி உங்களுக்கு வழங்குகிறோம்.
1. நோய் வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கேற்ப அரசு மற்றும் பல்வேறு சுகாதார அமைப்புகள் பரிந்துரைத்துள்ள முன்னேற்பாடு களை நமது பங்குத்தளங்களில் மற்றும் ஆலயங்களில் கடைபிடிப்போம்.
2. இறைமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வை அளிப்போம்.
3. காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் ஆலய வழிபாடுகளில் பங்கேற்காமல் இருக்கும்படி கவனித்துக் கொள்வோம்.
4. ஆலயத்தில் நுழையும்போதும், வெளியேறும்போதும் கைகளை சோப்பி னால் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள ஆவண செய்யலாம்.
5. நோய் தொற்று உள்ள பகுதிகளில் ஆலய வழிபாட்டுக் கொண்டாட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது பற்றி அந்தந்த மறைமாவட்ட பேராயர்/ஆயரின் வழிகாட்டுதல்படி முடிவு செய்து கொள்ளலாம்.
6. பங்குத் தளங்களில் நோய் தாக்குதலுக்கு யாரேனும் உள்ளாகி இருந்தால் உரிய துறையினருக்கு அறிவிப்புக் கொடுத்து அவர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொள்ள ஆவண செய்யலாம்.
7. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் விரைவில் குணம் பெறவும் சிறப்பு செபவழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்யலாம். சிறப்பு செப அட்டைகள் தயாரித்து அளித்து, வீடுகளில் செபிக்கும்படி அறிவுறுத்தலாம்.
இறையாசீர்,
+ மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி
தலைவர், தமிழக ஆயர் பேரவை.