இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது: இந்தியாவை இந்துக்களின் ராஷ்டிரமாக அறிவிப்பது என்பதெல்லாம் இந்துத்துவர்களின் அடிப்படை நோக்கம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோமே அது உண்மையா? இந்தியா வின் அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை சமய சார்பற்ற நாடாக அறிவித்திருப்பதனால், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாகவே திகழ்வதாக நாம் நம்புகிறோமே! அது உண்மையா? மதசார்பற்றத் தன்மை என்பது அரசியல் சாசனம் தரும் மிகப்பெரிய மதிப்பீடு! இது ஓர் அறம்! இம்மதிப்பீடுதான் இந்தியாவின் மிகப்பெரிய பண்பாக (ஐனநய) இருந்து வருவது போலவும், இந்துத்துவர்கள் தாம் இதை மாற்றி சமயம் சார்ந்த ஒரு மதவாத நாடாக இந்தியாவை உருவாக்க நினைக்கின்றனர் என்றெல்லாம் நம்புகிறோமே இது உண்மையா?
இந்தியத் தலைவர்கள் இந்தியாவை ஒரு சனநாயக நாடாக சோசலிச சித்தாந்தம் நிலவும் நாடாக, சமய சார்பற்ற நாடாக, இவையெல்லாம் கூடிய இறையாண்மை எனும் மகுடம் சூடிய நாடாகக் கண்ட கனவை, சாசனமாக, இந்தியப் பண்பாக வடித்தனர்.
ஏறத்தாழ 300 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபை 165 முறை கூடி இந்தியாவை குடியரசு நாடாக அறிவிக்கிறது; இவ்வரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவராக, இந்திய இந்துச் சமூகம் தாழ்த்தப்பட்டவன் என்று ஒதுக்கி வைத்திருந்த அறிவர் அம்பேத்கர் தலைமையேற்கிறார். நான் இந்துவாக பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன் என்று சபதமெடுத்துக் கொண்டவர். நிச்சயமாக இந்து நாடு என்ற கொள்கையுடைய இவர் கொஞ்சம் கூட இந்து ராஷ்டிரத்தை ஏற்றிருக்க முடியாது. கடந்த 70 ஆண்டு காலமாக இந்த அரசியல் சாசனம் தான் இந்தியாவின் கட்டமைப்பைக் காத்து வருவதாகவும், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கூற்றில் எவரும் கை வைக்க முடியாதென்றும் கூறி வருகின்றோம். இந்திய சமய சார்பற்ற அரசியல் சாசனத்தில் கிஞ்சித்தும் நம்பிக்கையற்ற மோடி கூட்டம் இதே அரசியல் சாசனத்தின் மீது கை வைத்து தான் உறுதிமொழி ஏற்கிறது. அரசியல் சாசனத்தைக் கொண்டாடும் வகையில், அரசியல் சாசன நாள் என்று அறிக்கையிட்டு நினைவுபடுத்துகிறது. இந்திய அரசியல் சாசனமே, தனது வேதம் எனவும் மோடி பொய்யுரைக்கிறார்.
அப்படியென்றால் இந்தியா அரசியல் சாசன நியதிப்படி ஒரு சமய சார்பற்ற நாடு தானா? பல் சமயங்களையுடைய நாட்டில் நாம் சமயங்கடந்துதான் சிந்திக்கிறோமா? அரசின் அனைத்து நடவடிக்கைகளும் சமயங்கடந்துதான் நடக்கின்றனவா? சமய சார்பற்ற கொள்கையில் நாம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளோம்.
குடியுரிமை திருத்தச்சட்டம் குடிமக்களுள் இசுலாமியரைப் பாகுபடுத்துவது; இச்சட்டம் சனநாயகத்துக்கும் இந்திய மதச்சார்ப்பின்மைக்கும் எதிரானது என்பது உண்மையாயினும் மோடி அரசு ஏன் அசையவில்லை மிகப்பெரிய அளவில் மதக்கலவரம் என்ற பெயரில் இசுலாமியர் பெரும் பான்மையராக வாழும் பகுதியில் கொலை எனும் கோரத்தாண்டவத்தை நடத்திக் கொண்டிருப் பதற்கான தைரியம் இந்துத்துவ சக்திகளுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? ஐந்து லட்சம் பேர் இசுலாமியர் என்ற பெயரில் கூடினால் 5 கோடிப்பேர் இந்துக்கள் என்ற பெயரில் கூடுவர் என்ற நம்பிக்கைதானே. பிணவேட்டையினுள் நுழைந்திருக்கும் அரசியலை எப்படிப் புரிந்து கொள்ளப் போகிறோம்? குடிமக்களாக இணைந்து நடத்தப் பெறும் போராட்டத்தை குடிமக்களை மதரீதியாக பாகுபடுத்தலுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை, மதங்களுக்கிடையிலான போரட்டமாகக் காட்டுவதனால் இந்துத்துவ சக்திகள் தம் மதஉணர்வை ஆழப்படுத்திக் கொள்ள முனைகின்றன; குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானோரை மதச் சிறுபான்மையினராகச் சித்தரித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாளர்களை இந்துக்களாகக் காட்டுவதில் பா.ச.க. வெற்றி கண்டுள்ளது. இந்த ஆதரவாளர்கள் அனைவரும் இந்துக்கள் இல்லையென்றாலும், இந்துப் பெரும்பான்மை ஒருங்கிணையும் என்ற நம்பிக்கையில்தான் போராட்டத்திற்கு எதிராக
அணிதிரள்வதும் அணிதிரண்ட சிறுபான்மை யோரை தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்துவதும் இந்துத்துவ தந்திரமாகிறது; குடிமக்களின் போராட்டத்தை மதச் சிறுபான்மையினரின் போராட்டமாக அதுவும் சுயநல நோக்கில் தூண்டி விடப்பட்டு நடத்தப்பெறும் போராட்டமாகச் சித்தரிப்பதில் பின்னுள்ள அரசியல் என்ன?
திராவிடப் பாரம்பரியத்துள் நம்பிக்கை கொண்டதாக இன்று சொல்லிக் கொள்வதெல்லாம் பொய் என்பதை அனைவரும் அறிவர். தம் சமய அடையாளங்களை இந்துத் துறவிகளைக் காட்டிலும் மிகவும் வெளிப் படையாகக் காட்டிக் கொள்ளும்நம் தமிழக அமைச்சர்கள், மிகப் பெரிய சமய நம்பிக்கையாளர் களாகக் காட்டிக் கொள்ளும்நம் தமிழக திராவிட இயக்கக் கட்சித் தலைவர்கள், பெரியாரையும் கைவிட்டனர். கடவுள் மறுப்பும் இவர்களுக்கு இல்லை; இந்திய அரசியல் சாசனத்தின் மதச் சார்பின்மையிலும் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. இவைகளெல்லாம் இவர்களுக்குத் தேவையில்லை. இந்து என்னும் மதப் பெரும்பான்மையும், அது மதப் பெரும் பான்மைவாதமாக வளர்ந்து விட்டிருக்கும் அரசியல் சூழலமைவு இவர்களுக்குச் சாதகமாக உள்ளது என்பதை மறந்துவிடலாகாது. எனவேதான் சிறு பான்மையினர் நலத்துக்கு ஆதரவாக இருப்பதாக ஒருபக்கம் சொல்லிக் கொள்கிறார்; இன்னொரு பக்கம் அமித் ஷாவின் உறுதிமொழியை நம்புவதாகக் கூறுகிறார். "அவரே (அமித் ஷா) சொல்கிறாரே பின் ஏன் அஞ்ச வேண்டும்" என்று எடப்பாடியார் கூறுகிறார்: சிறுபான்மை இசுலாமியர் மீது ஒரு தூசி விழுவதைக்கூட அனுமதிக்க மாட்டோம் என்று மதுரை விமான நிலையத்தில் திருவாய் மலர்ந்தருளியபோது, முகம் நிறைந்த தாடியோடும் நெற்றி நிறைந்த திருநீறோடும் தன் மத அடையாளத்தைக் காட்டி நிற்கிறார். பெரும் பான்மைவாதம் தரும் நம்பிக்கையில், மதச் சிறுபான்மையினரின் காப்பாளராகக் காட்டிக் கொள்ளும்சிறுமைத்தனத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? இவர்கள் ஒரு சமய நம்பிக்கையாளர்களாக இருப்பது அவர்கள் உரிமை; அதை நாம் கேள்வி கேட்க விரும்பவில்லை. மதம் வேறு; மதவாதம் வேறு. பெரும்பான்மை மதவாதம் மாற்று மத நம்பிக்கைகளை அந்நம்பிக்கைக்குரியரை ஒதுக்குவது ஓரங்கட்டுவது, தமிழக ஆளும் கட்சியினர் இந்துக்களாக இருப்பதில் நமக்கு முரணில்லை? மத்தியில் ஆளும் பாரதிய சனதா மதத்தினடிப் படையில் வெறுப்பரசியல் செய்வதை நன்கறிந்தும், மத்திய அரசைத் துதிப்பது ஏன்?
தமிழகக் குடிமக்களுள் ஒருசாரார் மிகப் பெரிய அளவில் கூடி தன் கோரிக்கைகளை முன்வைத்து வருகையில், எங்கோ யாரோ எழுப்பும் குரலாகக்கருதி கண்டுகொள்ளாமைக்கு என்ன காரணம்? திராவிடக் கட்சி என்ற பெயரையும் வைத்துக் கொண்டு திராவிடத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு சித்தாந்தமுடைய ஒரு கட்சிக்கு தலைசாய்த்து நிற்பதேன்? ஒரு பெரும்பான்மை மதம் சார்ந்த கட்சி, மதத்தின் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைத்து மதவாத அடிப்படையில் ஆட்சி செய்யும் கட்சி, வெறுப்பரசியல் செய்யும் ஒரு
பாசிச அமைப்பென்பது உலகறிந்தஉண்மையா யிருக்கையில், தமிழக ஆட்சித் தலைவர்கள் பெரும்பான்மை இந்துக்கருத்தியலுக்குத் துணைநிற்கின்றனர் என்பதுதானே உண்மை. நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற் கெதிரான போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் தமிழக அமைச்சர்கள் போராடும் குடிமக்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம். இவர்களும் தமிழகத்தில் வாழும் குடிமக்களே என்ற நிலையில் ஒரு சிறுகரிசனையாவது காட்ட வேண்டாமா?
இந்தியாவில் மதச்சார்பின்மை ஒரு முழக்கமாக எழுப்படுகிறதே தவிர, இதனை ஒரு கோட்பாடாக உள்ளத்தில் ஏற்றுள்ளனர். இந்திய மதச்சார்பின்மை மதத்தை மறுக்கும் ஒரு கோட்பாடல்ல; பல்சமயங்களுடைய நாட்டில், அனைத்துச் சமயங்களையும் சமமாக மதிப்பது, அரசின் எந்த செயல்பாடும் ஒரு மதத்தின் அடிப்படையில் அமையக் கூடாது என்பதே விதி, ஆனால் மதச் சார்பற்ற நாட்டில், இன்று நடத்தப்பெறும் அல்லது துவங்கப்பெறும் அனைத்து நிகழ்வுகளும் இந்து மத போதகர்களின் வேத ஓதுதலோடுதான் நடத்தப் பெறுகின்றன. இப்போதகர்கள் பெரும்பாலோர் அந்தணர்களே, தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒரு மதம் சார்ந்த உருவங்களும் அதற்கென வழிபாடும் உண்டு. தமிழகத்தில் செயற்படும் அரசு ஆதி திராவிட நலப் பள்ளிகள்அனைத்திலும் இந்துத் தெய்வங்களின் படங்களே உள்ளன. சில பள்ளிகளில் தலித் அடையாளத்தைப் பேணவும் அவர்தம் விடுதலைக்காக பாடுபட்ட அம்பேத்கர் படம் இருக்கின்றன. இந்துக்களாக இவர்கள் இருப்பதை நாம் கேள்விக்குள்ளாக்கவில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல அது அவர்கள் உரிமை; ஆனால் இந்து மதத்தை வைத்து அரசியல் நடத்துவது அரசியல் அதிகாரத்தைப் பெறுவது என்பதெல்லாம் சனநாயகத்துக்கும் சமயச்சார்பின்மைக்கும் எதிரான போக்கு என்பதைக் கருதாமல், பாரதிய சனதா எனும் கட்சியின் அனுதாபிகளாக, ஆதரவாளராக மாறுவது ஏன்? எப்படி?
ம.பியின் சிந்தியாவும் தமிழகத்தின் வாசனும்இன்று இந்திய ஊடகங்கள் அனைத் திலும் நிறைந்திருப்பவர் சிந்தியா. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாரதிய சனதாவில் வேகமாக இணைந்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் முதல்வராகும் வாய்ப்புத் தரப்படவில்லை மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமைப் பொறுப்பும் வழங்கப் பெறவில்லை என்ற ஆதங்கத்தில் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி யின் ஆட்சியைக் கலைக்கும் வகையில் கட்சி மாறுகிறார்.
சிந்தியா என்ற ஓர்இளைஞர் எப்படி பாரதிய சனதா எனும் கட்சிக்குத் தாவமுடிகிறது? குவாலியர் அரசு குடும்பத்தைச் சார்ந்த சிந்தியாவின் பாட்டி அன்றைய பாரதிய சனசங்கத் தின் நிறுவனருள் ஒருவர்; பெருநிலவுடைமைச்சமூகம் சார்ந்த இவர்கள் இந்துப் பழமைவாதிகள். இவருடைய ஒரு மகள் இராஜஸ்தான் முதல்வராகஇருந்தவர். இன்றும் அவர்தான் அங்கு எதிர்கட்சித் தலைவர். சிந்தியாவின் ஒரு சகோதரி ம.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர். இவர்கள் குடும்பத்து சிந்தியா, மதச்சார்பின்மை பேசும் காங்கிரசில் இருந்திருக்க முடியும்? இவர் ஒரு வைதீக இந்து. இவருக்கான கட்சி பாரதிய சனதாவாகத்தான் இருக்க முடியும்? பாரம்பரிய இந்துவான சிந்தியா நேர்மையாகவே நடந்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் பேசும்மென்மையான வகுப்புவாதம் இந்த சிந்தியா என்ற இளைஞனுக்கு ஒரு வெளியைத் (ளுயீயஉந) தந்திருக்கலாம்.
காங்கிரசுக்கு மதச் சார்பின்மையின் மேல் ஆழமான பற்றிருந்திருக்குமானால், சிந்தியா மாற்றம் பெறுவதற்கு வாய்ப்பளித்திந்திருக்கலாம். காங்கிரஸ் எனும் பெரிய கட்சிக்கு இன்று சரியான தலைமையும் இல்லை; செல்லும் திசையிலும் தெளிவில்லை. எனவே இயல்பிலேயே தன்னுள் உரையும் மதச் சித்தாந்த கட்சியில் இணைகிறார். இவர் ஒரு சாதாரண மதநம்பிக்கையுடையர் அல்லர்; தீவிர இந்து பக்தர்; அவர்க்குரிய இடம் தேடிச் சென்றுவிட்டார்.
தமிழகத்தின் வாசனும் அடிப்படையில் பாரம் பரிய இந்து நிலவுடைமையாளர். காலஞ்சென்ற மூப்பனார் மகன் என்ற பெருமையைத்தவிர வேறு எந்தச் சிறப்பும் இல்லாதவர், மூப்பனார் மகன் என்பதால் இருமுறை மேலவை உறுப்பினர்,
பத்தாண்டுகள் மத்திய அமைச்சர். இவற்றை யெல்லாம் அள்ளி வழங்கிய காங்கிரசைத் துறந்து, தமிழ் மாநில காங்கிரசுக்கு உயிர் கொடுப்பதாகச் சொல்லி நிற்கையில் அவருக்கு அவர் சார்ந்த மதம் எந்த குற்றவுணர்வையும் தரா நிலையில் அமித் ஷாவும் மோடியும் புகலிடமாகின்றனர். தேசியப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வாசனுக்கு மனச்சாட்சி மழுங்கிப் போனதா? இல்லை அதிமுகவின் ஆதரவாளராக இருந்தவர், சில நாட்களில் இந்துத்துவ சீடராக மாறுவார் என்பதை நாம் பார்க்கலாம். நம் நாட்டுப் பெரும்பான்மை இந்துக்களுக்கு இந்துத்துவம் பேசும் இந்து மதம் பெரிய வேறுபாடாகத் தெரியவில்லை.
இந்தியாவை "ஓர் இந்து நாடு" என்று அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை; ஏனெனில், பெரும்பான்மை இந்துக்களுடன் இது ஓர் இந்துநாடாக அறிவிக்கப்பட்டால் கைதட்டி வரவேற்பவர்கள் வரிசையில் வாசனும் இருப்பார். அதிமுக அமைச்சர்களும் இருப்பர்.