Namvazhvu
தவக்காலச் சிந்தனைகள் (கொரோனா பின்னணியில்) தொற்று நோய்க்கான ஆன்மீக வளங்கள்
Saturday, 04 Apr 2020 09:47 am
Namvazhvu

Namvazhvu

இறையேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

கொரோனா வைரஸ் உடனான போரில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். ஏப்ரல் 02 ஆம் தேதி நிலவரப்படி 203 நாடுகளில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு  47 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் பன்னாட்டு அரசியல் தலைவர்களும் மருத்துவர்களும் இப்போர் இன்னும் வீரியமாகும் என்று தங்கள் அச்சத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றனர். 144 ஊரடங்கு உத்தரவு சமூக தனிமைப்படுத்துதல் இயல்பு வாழ்க்கை முடக்கம் நாடுகளின் எல்லைகள் மூடல் என பல்வேறு நடவடிக்கைகள் உலகெங்கும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. இச்சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நமது அறிவியல் பொருளாதார அரசியல் சமூக மற்றும் மனித வளங்களை ஒருங்கிணைத்து மானுடம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த பேராபத்திலிருந்து நம்மையே விடுவித்துக் கொள்ள வழிதேடிக் கொண்டிருக்கின்றோம். எனினும் இப்போராட்டத்தில் இன்னொரு அத்தியாவசியமான பயனுள்ள உதவியாய் இருப்பது நமது ஆன்மீக வளமும்தான். எனவே இந்த ஒருசில வரிகளில் கோவிட்-19க்கு எதிரான நம்முடைய போராட்டத்தில் நாம் பயன்படுத்தக்கூடிய ஆன்மீக ஆயுதங்கள் என்ன என்பதைப் பற்றி ஒருசில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

1. பயனுள்ள  பலவீனம்:

நம்முடைய மனித வாழ்வின் நிலையற்ற தன்மை அதன் தற்காலிகத் தன்மை அதன் பலவீனம் ஆகியவற்றை இப்பேரிடரில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நமக்கு நம்மையே சக்தி உள்ளவர்களாக அழிவுக்கு அப்பாற்பட்டவர்களாக  வலிமை பொருந்தியவர்களாக பரிணாம வளர்ச்சியின் மணிமகுடமாக நம்மையே சித்தரித்துக் கொள்ளும் வழக்கம் இன்றைக்கு கேள்விக்குறியாய் இருக்கின்றது. நம்மைப் பற்றிய அளவுக்கு மிஞ்சிய சித்தாந்தங்களும் சித்தரிப்புகளும் கேள்விக்குள்ளாகி இருக்கும் இந்நிலையில் நமது சிறுமைத்தனம் இப்பேரிடரில் நம்மைச் சந்திக்க வந்திருக்கின்றது. இந்த இயலாமை உணர்விற்கான மாற்று மருந்து எது? நம்முடைய பாரம்பரிய ஆன்மீகங்களிலும்  மரபுகளிலும் பொதுவாகக் காணப்படும் மறைபொருள் யாதெனில் ‘நமது இயலாமையின் அனுபவமே ஆன்மீக எழுச்சியின் துவக்கம்.’ எனவேதான் ஒவ்வொரு திருப்பலியையும் நாம் பாவமன்னிப்பு வழிபாடோடு துவங்குகின்றோம். கடவுளுக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் முன்பாக நம்மை நாமே சிறியவர்கள் என மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம். இந்த ஏற்றுக்கொள்ளுதலில்தான் திருப்பலியில் இறை சங்கமம் நிகழ்கின்றது. புனித பவுல் அறிக்கையிடுவது போல (2 கொரி 12: 10) புனித குழந்தை தெரசம்மாள் வலியுறுத்துவது போல ~உங்கள் பலவீனம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்க விடாதீர்கள். ஏனெனில் இந்த பலவீனங்களின் வழியாகத்தான் உங்கள் வாழ்கையின் மிகப்பெரும் சக்தியான இயேசுவின் மீதான நம்பிக்கையை கண்டடைவீர்கள்” நாம் நம்மையே பலவீனர்களாக உணரும் போது தான் இயேசுவின் மீதான நம்பிக்கை நமக்கு மிகப்பெரும் சக்தி என்பதை நாம் உணர்கின்றோம். ‘உர்பி எத் ஓர்பி’ என்னும் தனது சிறப்பு ஆசீர்வாத மறையுரையில் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழகாக குறிப்பிட்டது போல நாம் தன்னிறைவு பெற்றவர்கள் அல்ல் நமக்கு மீட்பு தேவையாய் இருக்கிறது என்ற உணர்வில்தான் நம்பிக்கை பிறக்கிறது.

2.  அத்தியாவசியத்திற்கான  மனமாற்றம்:

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாய் நாம் இன்று நம் அகத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். நமது உள் அகத்தினின்று நம்முடைய பார்வையை திசை திருப்ப நம்முடைய மனசாட்சியின் குரலை மழுங்கச் செய்ய நம்மைச் சுற்றி இருப்போரிடமிருந்து நம்மை பிரித்து விட இந்த உலகம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பலவகையான பலதரப்பட்ட கவனச்சிதறல் நுட்பங்கள் இன்றைக்கு குறைந்து விட்டன. வாழ்க்கையின் அத்தியாவசியத்தை நோக்கி நமது கவனம் திரும்பி இருக்கின்றது. வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்திற்கு நாம் விடுப்பு கொடுத்திருக்கிறோம். நம்மைச் சுற்றிப் பார்க்க நமது தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய நம்முடைய கனவுகளை மறுமதிப்பீடு செய்ய நம்முடைய வாழ்க்கைமுறையை பகுப்பாய்வு செய்ய இக்காலம் நம்மை நிர்பந்தப்படுத்தி இருக்கிறது. ஒரு வைரஸ் தொற்றுநோயின் வழியாக கிறிஸ்துவ பாரம்பரிய மதிப்பீடுகளில் ஒன்றான அகத்திற்கு நம் பார்வை திரும்பி இருப்பது முரண்பாடுதான். ஆரம்பத்திற்கான நம்முடைய தேடலை நிறுத்தி நம்முடைய கவனங்களை ஒருமுகப்படுத்தி ‘என் வாழ்க்கையில் முக்கியமானவை எவை?’ என்ற கேள்வியை நாம் சந்திக்கின்றோம். என் குடும்பத்தின் உறுப்பினர் என் அண்டை வீட்டார் என் குடும்பத்தின் ஒற்றுமை என்னிடம் உள்ளதை பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் தார்மீகக் கடமை எளிமையின் அழகு இவையே அத்தியாவசியத்தை நோக்கிய மனமாற்றம். புனித அகுஸ்தினார் கூறுகின்ற வார்த்தைகள் இன்று புதுப்பொருள் பெறுகின்றன. ‘தாமதமாகவே உம்மை நேசித்திருக்கிறேன். பழமையும் புதுமையும் மிக்க அழகே! தாமதமாகவே உம்மை நான் நேசித்திருக்கிறேன். பாரும் நீர் என்னுள் இருந்திருக்கிறீர். நானோ வெளிஉலகில் இருந்தேன். புறத்தில் உம்மைத் தேடினேன். அன்பற்ற நிலையில் படைத்தவற்றில் என்னை இழந்தேன். நீரோ என்னுள் இருந்தீர். நானோ நீர் இல்லாமல் இருந்தேன். நீர் படைத்த இந்த அழகு வாய்ந்த பொருட்கள் என்னை உம்மிடம் இருந்து பிரித்து வைத்தன. ஆம் நம் வாழ்க்கையில் நாம் தேடித் திரிந்து கொண்டிருப்பவை உண்மையில் நம்மிலே இருக்கின்றன. நம்மைச் சுற்றி இருக்கின்றன. அவையே உண்மையான அத்தியாவசியங்கள்.

3. புதிய  திருஅவை  வாழ்வியல்:

இன்று நம்முடைய ஆலயங்களும் திருக்கோவில்களும் மூடியிருக்க திருவழிபாடுகளும் திருவருள்சாதனங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்;டிருக்க கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் புதிய திருஅவை வாழ்வியலை கண்டுணர்ந்து கொண்டிருக்கின்றோம். நம்மில் பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து செபிக்கும் மகிழ்ச்சியை இறைவார்த்தையை வாசித்து அதை ஒன்றாக சிந்திக்கும் அனுபவத்தின் அழகை அதன் மேன்மையை இறைவனுக்கான நம்முடைய பொதுவான தாகத்தை இன்று மீண்டும் கண்டுணர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த தனிமைப்படுத்துதல் காலம் நம்முடைய குடும்பங்களின் உண்மையான ஆன்மீக நிலையை நமக்கு அடையாளப்படுத்தியிருக்கின்றது. நாம் பல நூற்றாண்டுகளாக வலியுறத்தி வருவது போல திருஅவையின் அடிப்படையும் முக்கியமுமான அங்கம் நமது கிறிஸ்துவ குடும்பங்கள். திருஅவை என்பது கட்டிடமோ குரு என்னும் தனி மனிதரோ அல்ல. விசுவசிக்கும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்தவளும் இணைந்துதான் திருஅவை. குழந்தைகளாக பெற்றோராக நாம் இணைந்து குடும்பம் எனும் திருஅவையைக் கட்டி எழுப்புகின்றோம். இந்த குட்டித் திருஅவைகளின் ஒருங்கிணைந்த சங்கமமே கத்தோலிக்க திருஅவை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‘உர்பி எத் ஓர்பி’ ஆசீர்வாதத்தின் மறையுரையில் குறிப்பிட்டதுபோல இச்சோதனை காலம் என்னும் சிலுவையை நாம் அரவணைத்துக் கொண்டு நம்முடைய விருந்தோம்பல் பண்பு சகோதரத்துவ பண்பு மனித தோழமை ஆகிய பண்புகளை புதிய தனித்துவமிக்க வழிகளில் வாழ்வதற்கரிய வாய்ப்புகளை நாம் தேடும் தைரியத்தை பெற வேண்டும். ஆம்! நம் புதிய திருஅவையின் வாழ்வியல் முறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் இக்காலங்களில் திருஅவையாக ஊடகங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களுடைய சக்தியை நாம் உணர்ந்திருக்கின்றோம். நாம் ஒருவர் மற்றவரிடமிருந்து தொலைவில் இருந்தாலும் ஒன்றாக இணைந்து செபிக்க ஒருவர் மற்றவரோடு தொடர்பு கொள்ள ஒன்றாய் இணைந்து சிந்திக்க நம்பிக்கையை பரப்ப இவை உதவுகின்றன. இவ்வாறு இணையதளத்தில் நடைபெறுகிற செப வழிபாடுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிற திருப்பலிகள் செபங்கள் ஆராதனைகள் இன்றைக்கு நமக்கு ஆன்மீக வாழ்க்கைக்கும் பலன் உள்ளதாய் அமைகின்றன.

 

எனவே இறை இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே நம்முடைய தலைவர்கள் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களோடு ஒத்துழைக்க நாம் பெற்றிருக்கும் கடமையை நான் வலிறுத்த இங்கு விரும்புகின்றேன். நாம் நம்முடைய இல்லங்களில் தங்கியிருந்தவர்களாக இந்த நோய் பரவுதலைத் தடுக்கவும் நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் நம்மைச் சுற்றி இருப்போருக்கு உதவவும் அழைக்கப்படுகின்றோம். இந்த கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் நாம் உணர்ந்திருக்கும் பலவீனத்தின் ஆன்மீக பலனையும் வாழ்வின் அத்தியாவசியங்களையும் திருஅவையின் புதிய வாழ்வியல் முறைகளையும் தொடர்ந்து நம்முடைய ஆன்மீக சக்தியாக மாற்றுவோம். மேலுமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் இந்த நோயினால் இறந்தவர்களுக்காகவும் ஊரடங்கு உத்தரவினால் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பவர்களுக்காகவும் பொதுநன்மைக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து நமக்காக சேவை செய்கின்ற மருத்துவர்கள் காவலர்கள் பொதுபணித்துறையினர் வியாபாரிகள் உட்பட்ட அனைவருக்காகவும் நாம் செபிக்க கடமைப் பட்டிருக்கின்றோம். உயிர்த்த இயேசு நம்மைத் தம் உயிர்ப்பு நம்பிக்கையால் நிலைப்படுத்துவராக! நமது பரிந்துரையாளரான அன்னை மரியாள் இத்துன்ப வேளையில் நம்மோடு உடனிருந்து புதிய விடியலை நோக்கி நம்மை வழிநடத்துவராக!

 

அனைவருக்கும் இறையாசீர்!