Namvazhvu
திருத்தந்தையின் மறைக்கல்வி தூய உள்ளத்தோர் கடவுளைக் காண்பர்
Monday, 06 Apr 2020 02:53 am
Namvazhvu

Namvazhvu

கொரோனா தொற்றுக்கிருமியால் உலகம் துயர்களை அனுபவித்துவரும் வேளையில், மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் நோக்கில், புதன் மறைக்கல்வி உரைகளையும், மூவேளை செப உரைகளையும் சமூகத்தொடர்புச் சாதனங்கள் வழியாக தன் நூலக அறையிலிருந்து வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும் அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி புதன்கிழமை தன் மறைக்கல்வித் தொடரின் ஒரு பகுதியாக, ஆறாவது பேறு  குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அன்பு சகோதர சகோதரிகளே! இயேசு தன் மலைப்பொழிவில் எடுத்துரைத்த பேறுகள் குறித்த நம் புதன் மறைக்கல்வித் தொடரில் இன்று, ஆறாவது பேறாகிய, ’தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்என்பது குறித்து நோக்குவோம்

கடவுளைக் காண்பது என்பது, அவரோடு தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பதாகும். அவரோடு தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பது என்பது, நம் இதயத்தை அழமாக உற்று நோக்கி, இறைவனுக்கு நம் இதயத்தில் ஓர் இடத்தை உருவாக்குவதாகும்.

இறைவா, எனது  மிக ஆழமான நிலையைத் தாண்டி, நீர் இன்னும் ஆழமாக என்னில் ஊடுருவியிருக்கிறீர்என உரைக்கிறார் புனித அகுஸ்தினார் ( கன்பெஷன்ஸ்  ஐஐஐ, 6, 11).  இருப்பினும் நம் இதயங்கள், எம்மாவுஸ் நோக்கிச் சென்ற பாதையில் சந்தித்த இயேசுவின் சீடர்களைப்போல், மந்தமானதாகவும், அறிவற்றதாகவும்  இருக்கின்றன.

தங்கள் அருகிலேயே இருந்த இயேசுவை அவர்களால் முதலில் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. இறைவனைக் காண்பதற்கு, நமக்குள் தூய்மைப்படுத்தும் செயல்முறை தேவைப்படுகின்றது.

இறைவனின் பிரசன்னத்தை நாம் கண்டுகொள்வதிலிருந்து நம்மை குருடாக வைத்திருக்கும் நம் பாவநிலைகளிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டியுள்ளது.

ஆம்! இதன் வழியாக, நாம் தீமைகளை மறுதலித்து, தூய ஆவியார் நமக்கு அறிவுறுத்தவும், நம்மை வழிநடத்தவும் நாம் அனுமதிக்கும்போது அவர் நம்மை வழிநடத்திச் செல்ல இயலுகிறது. கடவுளைக் காண்பதற்குரிய மற்றொரு முக்கியக் கூறு என்பது, படைப்பிலும், திருஅவையின் திருஅடையாளங்களிலும், நம் சகோதர சகோதரிகளிலும், குறிப்பாக ஏழைகள், மற்றும், உதவித் தேவைப்படுவோரிலும் அவரைக் கண்டுகொள்வதாகும். இறைவன் நம் இதயங்களைத் தூய்மைப்படுத்த நாம் அனுமதித்தால்,   அழகு நிறைந்த காட்சி நோக்கி நம்மை வழிநடத்திச் செல்வார், அங்கு நாம் விண்ணுலக அரசின் அமைதி மற்றும் மகிழ்வின் முழுமையை அனுபவிப்போம்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாக தன் உரைக்கு செவிமடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.