Namvazhvu
Church fights against COVID 19 திருப்பீட செயலர் : உலகளாவிய ஒருமைப்பாட்டுக்கு அழைப்பு
Monday, 06 Apr 2020 03:14 am
Namvazhvu

Namvazhvu

கொரோனா தொற்றுக்கிருமியால் துன்புறும் எல்லாருடனும் திருஅவை நெருக்கமாக இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, இந்நெருக்கடியான நேரத்தில் உலக அளவில் ஒருமைப்பாட்டுணர்வு இன்றியமையாதது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தற்போதைய கோவிட்-19 தொற்றுக் கிருமி நெருக்கடியையொட்டி, வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்ததிருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ‘மற்றவரிடமிருந்து தங்களையே தனிமைப்படுத்தி வாழ்வதற்கு இதுவல்ல நேரம்என்று கூறியுள்ளார்

இந்த நெருக்கடி காலத்தில் திருத்தந்தையும், திருப்பீடத் தலைமையகமும் எவ்வாறு வாழ்கின்றது? குடும்பங்களிலும், மக்களின் வாழ்விலும், ஏன் பொருளாதாரத்திலும்கூட கடுமையான விளைவுகளை உருவாக்கியுள்ள இந்தச் சூழல் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன? ஆகிய இரு கேள்விகளுக்கு கர்தினால் பரோலின் முதலில் பதில் அளித்தார்,.

இந்த அச்சுறுத்தும் நேரத்தில், நோயாளிகள், வயது முதிர்ந்தோர், இறப்போர், அவர்களின் குடும்பங்கள் போன்றோரைச் சிறப்பாக நினைத்துப் பார்க்கிறேன்உயிர்ப்புக் காலத்திற்கு முந்தைய இந்த திருவிழிப்புக் காலத்தில், திருஅவை, ஒவ்வொருவரோடும் ஒன்றித்துள்ளது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இயலக்கூடிய அனைத்து வழிகளிலும் உலகோடு ஒன்றித்திருக்கிறார் என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலி நேரடியாக ஒளிபரப்பப்படுவதே இதற்கு தெளிவான ஒரு சான்று என்றும், கோவிட்-19ஆல் தாக்கப்பட்டவர்கள், குடும்பங்கள், மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகிய எல்லாருக்காகவும் திருத்தந்தை செபிக்கின்றார், அவர் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் திருஅவைகளோடு தொடர்பில் இருப்பதற்கு, அவரோடு ஒத்துழைக்கும் நாங்கள் அனைவரும் உதவுகிறோம் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

நம் முழு இதயத்தோடு கடவுள் பக்கம் திரும்புவதற்கு, இந்நெருக்கடி நிலை ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது என்றும், இதனை, திருத்தந்தை மார்ச் 27ம் தேதி நடத்திய செபம் மற்றும் மார்ச் 25ம் தேதி கிறிஸ்தவர்கள் அனைவரோடும் சேர்ந்து செபித்த, இயேசு கற்றுக்கொடுத்த செபம் ஆகியவற்றின் வழியாக நினைவுபடுத்துகிறார் என்றும் கர்தினால் பரோலின் கூறினார்,.

இந்நெருக்கடியான காலக்கட்டத்தில் திருப்பீடத் தலைமையகத் துறைகள், தலத்திருஅவைகளோடு தொடர்புகொண்டுள்ளன என்றும், விசுவாசிகளின் பங்கேற்பின்றி திருப்பலிகளும், மற்ற பொது வழிபாடுகளும் நடத்தப்படும் முறை பற்றியும், புனித வார வழிபாடுகள் பற்றியும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

கொரோனா தொற்றுக் கிருமி உலகையே பாதித்துள்ளவேளை, நாம் அனைவரும் உண்மையிலேயே செபிக்க வேண்டும் என்றும் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள்அச்ச உணர்வு இருந்தாலும், மற்றவரிடமிருந்து நம்மையே ஒதுக்கி வாழ்வதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்றும், உலக அளவில் ஒருமைப்பாட்டுணர்வு அவசியம் என்றும் கூறினார்.