Namvazhvu
HOMAGE நல்லடக்கம் செய்யப்பட்ட வேலூர் ஆயர் சவுந்தரராஜூ
Monday, 06 Apr 2020 04:54 am
Namvazhvu

Namvazhvu

தமிழகத்தின் வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தரராஜூ பெரியநாயகம் அவர்கள், மார்ச் 21, சனிக்கிழமை அதிகாலையில் கடுமையான மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தால் ஆயர் சவுந்தரராஜூ அவர்களின் உடலானது, மார்ச் மாதம் 24 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை பத்து மணி அளவில் வேலூர் மறைமாவட்டப் பேராலயமான விண்ணரசி பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எழுபது வயது நிரம்பிய சலேசிய சபையைச் சேர்ந்த ஆயர் சவுந்தரராஜ் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், கொழப்பலூர் என்னும் கிராமத்தில், 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்து சலேசிய சபையில் சேர்ந்த இவர், 1970 ஆம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி முதல் வார்த்தைப்பாட்டை கொடுத்தார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 1983 ஆம்ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி வேலூர் மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராக நியமிக்கப்பட்ட இவர், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

மறைந்த வேலூர் ஆயர் சவுந்தரராஜ் அவர்கள், திருப்பத்தூர் இயேசுவின் திருஇதய கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளங்கலைப்பட்டமும், சென்னை இலொயோலா கல்லூரியில், முதுகலைப்பட்டமும் பெற்றவர்.

பிரித்தானியாவில் துர்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஊஷ்ஷா கல்லூரியில் இறையியலில் முதுகலைப்பட்டமும், திருச்சி புனித யோசேப்பு தன்னாட்சி கல்லூரியில் பொருளாதாரயியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், திருப்பத்தூர் இயேசுவின் திருஇதய கல்லூரியில், பேராசிரியர் மற்றும், உதவி முதல்வராகவும் (1983-1988, 1991-1994), அதே கல்லூரியில் முதல்வராகவும் (1994-2000), சென்னை பெரம்பூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் அதிபர் மற்றும், பங்குத்தந்தையாகவும் (2001-2004), வேலூர் காந்தி நகர் தொன்போஸ்கோ மையத்தில் தலைவராகவும் (2004-2006) பணியாற்றியுள்ளார்.

வேலூர் மறைமாவட்டத்தின் ஆயராக பதிமூன்று ஆண்டுகள் திறம்பட வழிநடத்திய இவர், தமிழக ஆயர் பேரவையில் பல்வேறு இளைஞர் பணிக்குழு, மாதா தொலைக்காட்சி உட்பட பல்வேறு பணிக்குழுக்களுக்கு தலைவராக இருந்து தமிழகத் திருஅவைக்கு சிறப்பான விதத்தில் பங்களிப்புச் செய்துள்ளார். தமிழக ஆயர் பேரவையின் பொருளாளராகவும் இருந்து பணிக்குழுக்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆயர் அவரது மரணம் வேலூர் மறைமாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழகத் திருஅவைக்கும் உலகத் திருஅவைக்கும் சலேசிய சபைக்கும் பேரிழப்பாகும். ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஆயர் அவர்களின் இறுதிச் சடங்கில் திரளான எண்ணிக்கையில் இறைமக்கள் பங்கேற்க முடியவில்லை என்பதை வருத்தத்திற்குரியதாகும். ஆயர் அவர்களின் இறுதிச் சடங்கை மாதா தொலைக்காட்சி நேரடியாக ஒளி பரப்பி உதவியது.