ஏப்ரல் 04, 2020. கோவை. கொரோனா என்னும் பெருந்தொற்று நோயால் உலதில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் ஏப்ரல் ஏழாம் தேதி நிலவரப்படி ஏறக்குறைய 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்கள, தமது கோவை மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு.ஜான் ஜோசப் ஸ்தனிஸ், மறைமாவட்டப் பொருளாளர் அருள்திரு. ஜோ பிரான்சிஸ், கோவை மறைமாவட்ட பல்நோக்கு சேவா சங்க இயக்குநர் அருள்திரு. அருண், மறைமாவட்டப் பேராலய பங்குத்தந்தை அருள்திரு. ஜார்ஜ் தனசேகர் ஆகியோருடன் சென்று கோவை மாவட்ட ஆட்சியர் திரு.கே.ராஜாமணி அவர்களைச் சந்தித்து, கோவிட் நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்தை காசோலையாக வழங்கி தம் கிறிஸ்தவ அன்பைக் காட்டினார். இதனைப் பெற்றுக் கொண்ட கோவை ஆட்சியர் திரு.கே.ராஜாமணி இதற்கு நன்றி தெரிவித்தார். தனித்திருத்தல் மற்றும் ஊரடங்கு வழியாக இந்தக் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டிய மேலும் கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்கள், தமது மறைமாவட்டத்தில் உள்ள நிறுவனங்களை, குறிப்பாக திருமண மண்டபங்களை அரசின் பயன்பாட்டிற்காகக் கொடுக்க வாக்குறுதி தந்துள்ளார். இதுவரை இரு திருமண மண்டபங்களைக் காவல்துறையினர் தங்குவதற்கு இம்மறைமாவட்டம் கொடுத்து உதவியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.