Namvazhvu
# Urbi et Orbi Tamil உயிர்ப்பு பெருவிழா - திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி
Tuesday, 14 Apr 2020 08:13 am
Namvazhvu

Namvazhvu

ஏப்ரல் 12, ஞாயிறு, பகல் 11 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில், பெருங்கோவிலின் பீடத்திற்குமுன் நின்றவண்ணம், ஊருக்கும், அதாவதுஉரோம் நகருக்கும், உலகுக்கும்வழங்கும்ஊர்பி எத் ஓர்பிசெய்தி, வாழ்த்து மற்றும், ஆசீரை வழங்கினார். திருத்தந்தை வழங்கிய அச்செய்தியின் தமிழாக்கம்:

அன்பார்ந்த  சகோதர, சகோதரிகளே, உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்!.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!” - “அவர் உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார்!” என்ற திருஅவையின் முழக்கம், இன்று உலகெங்கும் எதிரொலிக்கிறது.

 இந்நற்செய்தி, புதியச் சுடர் போன்று இரவில், அதிலும், நம் ஒட்டுமொத்த மனித குடும்பத்தையும் கடுமையாய்ச் சோதிக்கும் கொள்ளை நோயால் நசுக்கப்பட்டுள்ள இவ்வுலகின் இரவில் ஒளிர்கின்றது. “என் நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!” என, இந்த இரவில் திருஅவையின் குரல் ஒலிக்கின்றது.

இது வேறுவகையானதொற்று”, இதயத்திலிருந்து இதயத்திற்கு தொற்றிப் பரவும் செய்தி, ஏனெனில் ஒவ்வொரு மனித இதயமும் இந்த நற்செய்திக்காகக் காத்திருக்கிறது. இது, நம்பிக்கையின் தொற்று: “என் நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!”

பிரச்சனைகளை மறைந்துபோகச் செய்யும் மாயவித்தை அல்ல. கிறிஸ்துவின் உயிர்ப்பு அத்தகையது அல்ல, மாறாக, இது, அன்பு, தீமையின் ஆணிவேரின் மீது கொண்ட வெற்றியாகும். இந்த வெற்றி, தீமையை நன்மையாக மாற்றும். இதுவே கடவுளின் வல்லமையின் தனித்துவமிக்க முத்திரையாகும். உயிர்த்த ஆண்டவர், சிலுவையில் அறையப்பட்டவர் மட்டுமல்ல, அவர் தன் மகிமைமிகு உடலில், அழிக்கமுடியாத காயங்களைத் தாங்கியுள்ளார். இந்தக் காயங்கள், நம்பிக்கையின் ஜன்னல்களாக மாறியுள்ளன. நம் பார்வையை அவர் பக்கம் திருப்புவோம். அவர், கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள மனித சமுதாயத்தின் காயங்களைக் குணப்படுத்துவார்.   

கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகளுக்குச் செபம்

கொரோனா தொற்றுக்கிருமியால் நேரிடையாகத் தாக்கப்பட்டவர்கள், அதனால் இறந்தவர்கள், தங்களின் உறவுகளை இழந்து துயருறும் குடும்ப உறுப்பினர்கள்இறந்தவர்களுக்குப் பிரியாவிடைகூட சொல்ல முடியாதவர்கள் போன்ற எல்லாரையும் இன்று முதலில் நினைக்கின்றேன். இறந்தவர்களை இறைவன் தன் இறையாட்சியில் வரவேற்பாராக. இக்கிருமியால் துன்புறுவோர், குறிப்பாக, வயதானவர்கள் மற்றும், தனிமையாய் இருப்பவர்களுக்கு, இறைவன் ஆறுதலும் நம்பிக்கையும் வழங்குவாராகமருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றுவோர், இராணுவ முகாம்களில் அல்லது, சிறைகளில் உள்ளோர் போன்ற வலுவற்றவர்களிடமிருந்து இறைவன் தன் ஆறுதல் மற்றும், நம்பிக்கையை ஒருபோதும் அகற்றிவிடாதிருப்பாராக. இந்த உயிர்ப்புப் பெருவிழா நாளில், பலர், உடல் அளவிலும், பொருளாதார அளவிலும், தனிமைத் துன்பங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

நலப்பணியாளர்களுக்கு நன்றி

இந்த நோய், மனிதர்களின் அருகாமையை இழக்கச் செய்துள்ளது மட்டுமல்ல, அருளடையாளங்களிலிருந்து, குறிப்பாக, திருநற்கருணை மற்றும் ஒப்புரவு ஆகிய அருளடையாளங்களிலிருந்து பொழியப்படும் ஆறுதலைப் பெறும் வாய்ப்பையும் இழக்கச் செய்துள்ளது. பல நாடுகளில், இவற்றை அணுகிச்செல்வதே இயலாததாகியுள்ளது. ஆயினும், ஆண்டவர் நம்மை தனியே விட்டுவிடவில்லை (காண்க. தி.பா.138:5). அவர் நம்மீது தன் கரங்களை வைக்கிறார் என்பதை, செபத்தில் ஒன்றித்திருந்து உறுதிபெறுகிறோம். அஞ்சாதீர்கள், நான் உயிர்த்துவிட்டேன், நான் இன்னும் உங்களோடுதான் இருக்கிறேன் என்ற உறுதியையும் அவர் தருகிறார்.

தங்கள் உடல்நலத்தைப் பாராது, எல்லா சக்தியும் இழந்துபோகும் அளவுக்கு, அயலவர் மீதுள்ள அன்பு மற்றும் அக்கறைக்கு, உலகெங்கும் சான்றுகளாக விளங்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, இயேசு, பாஸ்கா வலிமை மற்றும் நம்பிக்கையை அருள்வாராக. அவர்களுக்கு, நம் நன்றியையும், பாசத்தையும், தெரிவிப்போம். சமுதாயத்திற்கு இன்றியமையாத பணிகளை அயராது ஆற்றிவரும், சட்டத்துறையினர், இராணுவத்தினர் அனைவருக்கும் நம் நன்றியையும் அன்பையும் தெரிவிப்போம். இவர்கள், பல நாடுகளில் மக்களின் துன்பங்களையும், வேதனைகளையும் அகற்றுகிறார்கள்.

அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு

கடந்த சில வாரங்களில், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு, திடீரென மாற்றம் அடைந்துள்ளது. பலருக்கு, வீடுகளிலே இருந்து சிந்திப்பதற்கும், துரித வாழ்விலிருந்து விடுபடுவதற்கும், தன் அன்புள்ளங்களுடன் இருந்து அவர்களின் தோழமையை அனுபவிப்பதற்கும், வாய்ப்பாக அமைந்துள்ளது. இருந்தபோதிலும், பலருக்கு, வருங்காலம் பற்றி, வேலை பற்றி, மற்றும் தற்போதைய நெருக்கடியின் பின்விளைவுகள் பற்றி கவலையடையும் காலமாகவும் இது அமைந்துள்ளது. எனவே, அரசியல் தலைவர்கள், பொதுநலனுக்காக, தீவீரமாய் உழைக்குமாறும், மக்கள் மாண்புள்ள வாழ்வை மேற்கொள்ளத் தேவையான வளங்களையும், வழிகளையும் அமைத்துக் கொடுக்குமாறும், சூழ்நிலைகள் அனுமதித்தால், மக்கள் தங்கள் அன்றாடச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன். கொள்ளை நோயால் உலகம் முழுவதும் துன்புறும் இவ்வேளையில், இது, புறக்கணிப்பின் நேரமல்ல, மாறாக, ஒன்றிணைய வேண்டிய காலம் ஆகும்.

உலகளாவியப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட

வறியோர், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோர், புலம்பெயர்ந்தோர், வீடற்றவர் ஆகிய எல்லாருக்கும், உயிர்த்த கிறிஸ்து நம்பிக்கையை அருள்வாராக. நகரங்களிலும், புறநகர்களிலும், உலகின் ஒவ்வொரு பகுதியிலும், மிகவும் நலிந்த நிலையில் வாழும் நம் சகோதரர், சகோதரிகள் கைவிடப்படாமல் இருப்பார்களாக. நிறைய தொழில்கள் மூடப்பட்டிருக்கும் இந்த கடினமான நேரத்தில், மருந்து, நலவாழ்வுக்குத் தேவையான பொருள்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் இவர்களுக்கு உறுதி செய்யப்படுவதாக. தற்போதைய சூழல்களில், உலகளாவிய பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுவதாக. ஏனெனில், இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகள், தங்களின் குடிமக்களுக்குப் போதுமான ஆதரவு வழங்குவது கடினமாக உள்ளது. வறிய நாடுகளின் கடன் சுமைகள் முற்றிலும் மன்னிக்கப்படாவிடினும், அவை குறைக்கப்படுவதன் வழியாக, தற்போதைய மிக அடிப்படையானத் தேவைகளை அந்நாடுகள் நிறைவேற்ற இயலும்.   

தன்னலமாக இருப்பதற்கு உரிய காலம் அல்ல

தன்னலமாக இருப்பதற்கு உரிய காலம் அல்ல இது. ஏனெனில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சவால், மனிதர்களுக்கு இடையே பாகுபாடின்றி இடம்பெறுகிறது. கொரோனா தொற்றுக் கிருமியால் உலகின் பல பகுதிகள் தாக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், நான் சிறப்பாக ஐரோப்பாவை நினைக்கின்றேன். இரண்டாம் உலகப் போருக்குப்பின், அன்புக்குரிய இக்கண்டத்தால் மீண்டும் உயிர்த்தெழ முடிந்தது. கடந்தகாலப் போட்டி மனப்பான்மைகளை வெற்றிகொள்ள உதவிய ஒருமைப்பாட்டுணர்வுக்கு நன்றி சொல்கிறேன். குறிப்பாக, எக்காலத்தையும்விட இக்காலத்தில், இந்த போட்டி மனப்பான்மைகள் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதாக. அதேநேரம், அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதை ஏற்று, ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருப்பார்களாக. ஐரோப்பிய ஒன்றியம், தற்போது ஒரு யுகத்தின் சவாலை எதிர்கொள்கிறது. இது, அதன் வருங்காலத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் சார்ந்துள்ளது. எனவே, ஒருமைப்பாட்டுக்கு மேலும் சான்றுபகர்வதற்குள்ள வாய்ப்பை இழந்துவிடாதிருப்போம். அதோடு, புதுமையான தீர்வுகளை நோக்கித் திரும்புவோம். அமைதியான நல்லிணக்கம் மற்றும், வருங்காலத் தலைமுறைகளின் வளர்ச்சியைக் கடுமையாய்ச் சிதைக்கும் ஆபத்தை உருவாக்கும் குறிப்பிட்ட ஆதாயங்களின் தன்னலம் மற்றும், கடந்தகாலத்திற்குத் திரும்பும் சோதனை, நமக்கு முன்னிருக்கும் மற்றொரு வழியாகும்.

பிரிவினையின் காலம் அல்ல

இது, பிரிவினையின் காலம் அல்ல. போர்களுக்குப் பொறுப்பான அனைவரும், உலகின் அனைத்துப் பகுதிகளிலும், உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு விடுக்கப்படும் அழைப்புக்கு ஆதரவளிக்கும் துணிவைப் பெறுவார்களாக. மற்றவரைப் பராமரிப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டிய பெருந்தொகையை, ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பதற்கும் தொடர்ந்து பயன்படுத்தும் காலம் அல்ல இது. சிரியாவில், அதிகமான இரத்தம் சிந்துதலுக்கும், ஏமனில், பேரழிவுக்கும், ஈராக் மற்றும், லெபனானில் பகைமைக்கும் காரணமாக அமைந்த நீண்டகாலப் போரை, முடிவுக்குக் கொண்டுவரும் காலம் இது. இஸ்ரேலும், பாலஸ்தீனாவும் அமைதியில் வாழ்வதற்கு அனுமதிக்கும், நிலையான மற்றும், நீடித்த தீர்வைக் காண்பதற்கு, மீண்டும் உரையாடலை ஆரம்பிக்கும் காலமாக இது அமைவதாக. உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் துன்பங்கள் அகல்வதாக. பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் பல அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் முடிவுக்கு வருவதாக.

மறதிக்குரிய காலம் அல்ல

அனைத்தையும் மறந்துவிடுவதற்குரிய காலம் அல்ல இது. நாம் இப்போது எதிர்கொள்ளும் நெருக்கடி, பல மக்கள் துன்புறுவதற்குக் காரணமான, மற்ற நெருக்கடிகளை மறக்கடிக்கக் கூடாது. மொசாம்பிக் நாட்டின் வடக்கிலுள்ள ஊயbடி னுநடபயனடி மாநிலத்தில் நிலவுவதுபோல், ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை அனுபவிக்கும் அனைவருடன், வாழ்வின் ஆண்டவர் நெருக்கமாய் இருப்பாராக. போர்கள், வறட்சி, மற்றும், பஞ்சத்தால் புலம்பெயர்ந்துள்ள பல மக்களின் இதயங்களை ஆண்டவர், தம் இரக்கத்தால் நிரப்புவாராக. லிபியா, கிரீஸ் மற்றும், துருக்கி நாடுகளின் எல்லைகளில், ஏற்றுக்கொள்ளமுடியாத அவல நிலைகளில் வாழ்கின்றவர்கள் உட்பட, புலம்பெயர்ந்த அனைவரையும் அவர் பாதுகாப்பாராக. வெனெசுவேலாவில் அரசியல், சமுதாய-பொருளாதார மற்றும், நலவாழ்வுப் பிரச்சனைகளால் துன்புறும் மக்களுக்கு, உலகளாவிய உதவி கிடைப்பதற்கும், அந்நாட்டில் தெளிவான மற்றும் உடனடியான தீர்வுகள் காணப்படுவதற்கும் ஆண்டவர் உதவுவாராக.   

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, புறக்கணிப்பு, தன்னலம், பிரிவினை மற்றும் மறதி ஆகிய வார்த்தைகளை, இக்காலத்தில் நாம் கேட்க விரும்பவில்லை. இந்த வார்த்தைகளை நாம் என்றென்றும் தடை செய்வோமாக!. அச்சமும், மரணமும் நம்மை ஆட்கொள்கையில், அதாவது, இயேசு ஆண்டவர், நம் இதயங்களையும் வாழ்வையும் வெற்றிகொள்ள நாம் அனுமதிக்காதபோது, இவை ஆக்ரமிப்பதுபோல் தெரிகின்றது. மரணத்தை ஏற்கனவே தோற்கடித்து, நித்திய மீட்பின் வழியை நமக்கு திறந்துள்ள கிறிஸ்து, துன்புறும் மனித சமுதாயத்தின் இருளை விரட்டுவாராக. முடிவே இல்லாத அந்த மகிமையான நாளின் ஒளிக்கு நம்மை அழைத்துச் செல்வாராக.

(தமிழாக்கம் அருள்சகோதரி மேரி தெரசா, வத்திக்கான் வானொலி)