Namvazhvu
# Covid 19 & Women கோவிட் 19 சூழலில் பெண்களின் பணிகள்
Tuesday, 14 Apr 2020 08:16 am
Namvazhvu

Namvazhvu

தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், அன்றைய நற்செய்தி வாசகத்தை (மத்.28,8-15) மேற்கோள்காட்டி, பெண்கள் வழியாகவே சீடர்கள் இயேசுவின் உயிர்ப்பு குறித்த செய்தியை அறிந்தனர் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய கொள்ளை நோய்ச் சூழலில் பெண்கள் ஆற்றிவரும் சிறப்புப் பணிகள் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

நலப்பிரச்சனை எழுந்துள்ள இன்றைய காலக்கட்டத்தில், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள், அடிப்படைத்தேவைகளை விற்கும் கடைகளில் பணியாற்றுவோர், தங்கள் குடும்பத்தோடும், குழந்தைகளோடும், முதியோரோடும், மாற்றுத்திறனாளிகளோடும் விட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோர் என அனைத்துப் பெண்டிரையும் இந்நேரத்தில் நினைவுகூர்வோம் என திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

குடும்பச் சுமைகளை அதிக அளவு சுமந்துகொண்டிருக்கும் இப்பெண் குலத்தினர், பலவேளைகளில் குடும்ப வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களுக்காக சிறப்பான விதத்தில் செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

உங்களுக்காகச் செபிக்கின்றேன், உங்கள் அருகில் இருக்கின்றேன்

மேலும், இந்த உயிர்ப்பு வாரத்தில், கொரோனா தொற்றுக்கிருமி பரவல் பிரச்சனையால் துன்புறும் அனைத்து நாடுகளுக்கும், தன் பாசத்தையும், அருகாமையையும் மீண்டும் தெரிவிக்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, இஸ்பெயின், பிரான்ஸ் என, இந்நாடுகளின் பட்டியல் நீள்கிறது, இந்நாடுகளுக்காகச் செபிக்கின்றேன், திருத்தந்தை உங்களுக்காகச் செபிக்கின்றார், உங்கள் அருகில் இருக்கின்றார் என்பதை மறக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.

அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், மீண்டும் எல்லாருக்கும் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, ‘செபத்தில் ஒன்றித்திருங்கள், சகோதரர், சகோதரிகளாக, ஒருவர் ஒருவருக்காக உதவி செய்வதற்கு அர்ப்பணியுங்கள்என்றும் கூறினார்.

பின்னர், வத்திக்கான் மாளிகையின் ஜன்னல் வழியாகவே, காலியான வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தை எட்டிப்பார்த்து, உரோம் நகரை திருத்தந்தை பிரான்சிஸ்  ஆசீர்வதித்தார்.