ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியூ யார்க் பேராயர், கர்தினால் டிமோத்தி டோலன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, நியூ யார்க் பகுதியில் வாழும் அனைவருக்காகவும் தான் சிறப்பான முறையில் செபித்து வருவதாகக் கூறினார்.
செவ்வாய், நியூ யார்க் நேரம் பிற்பகல் 2 மணிக்கு, திருத்தந்தை தன்னை அழைத்ததாகவும், நியூ யார்க் நகரில் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும் தன்னிடம் கூறினார் என்றுரைத்த கர்தினால் டோலன் அவர்கள், புருக்ளின் மற்றும் குயின்ஸ் மறைமாவட்டத்தின் மக்களுக்கு தான் மிகச் சிறப்பாக செபிப்பதாக ஆயர் நிக்கோலஸ் டிமார்சியோ அவர்களுக்குக் கூறும்படி திருத்தந்தை சொன்ன செய்தியை, தான் ஆயருக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நெருக்கடியானச் சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டிவரும் உண்மையான தலைமைத்துவப் பண்புக்கு நன்றியையும், அவருக்கு, தன்னுடைய மற்றும் நியூ யார்க் மக்களுடைய செபங்களையும் தெரிவித்ததாக கர்தினால் டோலன் அவர்கள் கூறினார்.