Namvazhvu
Vatican News கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கு உயிர்ப்புவிழா வாழ்த்துக்கள்
Tuesday, 21 Apr 2020 10:23 am
Namvazhvu

Namvazhvu

ஏப்ரல் 19, ஞாயிறன்று, இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை, இறை இரக்க ஞாயிறைச் சிறப்பித்தவேளை, உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்த, கீழைவழிபாட்டுமுறை மற்றும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

 ஏப்ரல் 19 ஆம் தேதி ஞாயிறு உரோம் நேரம் பகல் 11 மணிக்கு, உரோம் நகரின் உரோம் தூய ஆவியார் ஆலயத்தை  (Santo Spirito in Sassia) இறை இரக்க திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில் ஆற்றியஅல்லேலூயா வாழ்த்தொலி உரையில், கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கு உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், உரோம் தூய ஆவியார் ஆலயத்தை, இறை இரக்க திருத்தலமாக அறிவித்தார் என்றும், தனது முந்தைய திருத்தந்தை இறை இரக்க  விழாவை உருவாக்கிய இருபது ஆண்டுகளுக்குப்பின், இத்திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றுவது பொருத்தமாக உள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வாழ்வு மற்றும், வரலாற்றின் புயல்களுக்கு கிறிஸ்தவர்களின் பதில் இரக்கமே என்றும், நம் மத்தியிலும், அனைவர் மத்தியிலும், குறிப்பாக, துன்புறுவோர் மற்றும், கைவிடப்பட்டோர் மத்தியிலும் காட்டப்படவேண்டியது அன்பிரக்கம் என்றும் திருத்தந்தை கூறினார்.

அன்பிரக்கம் என்பது, வெறுமனே பக்தியில் காட்டப்படுவதோ அல்லது வெறும் உதவிகள் ஆற்றுவதிலோ அல்ல, மாறாக, அது இதயத்திலிருந்து எழும் கருணையாகும் என்றும், இறை இரக்கம், உயிர்த்த கிறிஸ்துவின் இதயத்திலிருந்து வருகின்றது என்றும், அவரின் மன்னிப்பும் ஆறுதலும் எப்போதும் தேவைப்படும் நமக்காக எப்போதும் திறக்கப்பட்டுள்ள, அவரின் விலாக் காயத்திலிருந்து சுரக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

உலகம், கோவிட்-19 கொள்ளை நோயை எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு தோழமை உணர்வில் உதவ, கிறிஸ்தவ இரக்கத்திலிருந்து தூண்டுதலைப் பெறுவார்களாக என்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரையை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவு செய்தார்.

இறுதியில் எல்லாருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் ஆசீரை அளித்தார்.