பனாமாவில் நடைபெறவுள்ள உலக கத்தோலிக்க இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் உலக இளையோர், இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பால் நிரப்பப் படுவார்கள், கடவுளின் அழைப்பிற்குத் தங்கள் செபங்கள் வழியாக, துணிச்சலுடன் பதில் சொல்வார்கள் என்று தான் நம்புவதாக, பானமா நகர் பேராயர் ஜோஸ் டோமிங்கோ கூறினார்.
கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்ற செபத்துடன் கூடிய தகுந்த தயாரிப்பிற்கு பிறகு, திருத்தந்தை புனித 2 ஆம் ஜான் பால் அவர்களின் விழா நாளான ஐனவரி 22 ஆம் தேதியை, இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள் தொடங்கும் தேதி யாக தேர்ந்து கொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
முன்தயாரிப்பு
பனாமாவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு முன்தயாரிப்பாக, அந்நாட்டின் டேவிட் மறைமாவட்டத்தில் நடைபெற்ற, பூர்வீக இன இளையோர் மாநாட்டுக்கு, ஐனவரி 18 ஆம் தேதி அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ், தலைமுறை தலைமுறைகளாக, வளமையான பூர்வீக இனக் கலாச்சாரங்களில் காக்கப்பட்டு வந்த, இயேசு கிறிஸ்து மீதுள்ள விசுவாசம் பற்றிச் சிந்திக்கவும், அதைக் கொண்டாடவும் வேண்டுமென அழைப்பு விடுத்தார். மேலும், ஒரு மரம் விருட்சமாவது, அதற்கு அடியில் உள்ளதை வைத்தே அமையும் என்ற ஒரு கவிஞரின் கூற்றைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வேர்கள் வருங்காலத்தைக் கொணரும், அவை வருங்காலத்தை நோக்கி இருக்கும் என்றுரைத்து, பூர்வீக இளையோர் தங்களின் மூலங்களைக் கண்காணித்து, அவற்றிலிருந்து வளர்ந்து கனிதர வேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
பனாமா ஆயர் பேரவையின் கீழ் செயல்படும் பூர்வீக இனப் பணிக்குழு இதற்கு ஏற்பாடு செய்தது. இது ஜனவரி 17, வியாழனன்று தொடங்கி ஜனவரி 21 திங்கள் வரை நடைபெற்றது.