Namvazhvu
Covid 19 -Second Phase-Vatican கோவிட்-19ன் 2வது கட்ட நிலை குறித்து திருப்பீட அதிகாரிகள்
Friday, 24 Apr 2020 13:37 pm
Namvazhvu

Namvazhvu

கோவிட்-19 நெருக்கடியின் இரண்டாவது கட்டநிலையில், திருஅவை சிறப்பாக ஆற்றவேண்டிய பணிகள் குறித்து கலந்தாலோசிக்க, திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், ஏப்ரல் 22, இப்புதனன்று, அசாதாரண கூட்டம் ஒன்றை நடத்தினர் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியுள்ளது.

வத்திக்கானில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வருகிற மே மாதம் நான்காம் தேதிக்குப்பின் கடைப்பிடிக்கப்படவுள்ள, கொரோனா தொற்றுக்கிருமி பரவல் நெருக்கடியின் இரண்டாவது கட்ட சூழல் குறித்து கலந்துரையாடினர்.

இந்த இரண்டாவது கட்டக்காலத்தில், இத்தாலிய அரசு விதிமுறைகளை தளர்த்தவுள்ளவேளை, அக்காலக்கட்டத்தில் திருஅவையின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடிய திருப்பீடத் தலைவர்கள், திருத்தந்தைக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் ஆற்றும் பணிகளை உறுதிசெய்யும் முறையில், திருப்பீடத்தின் வழக்கமான பணிகளைப் படிப்படியாக மீண்டும் துவங்குவதற்குத் தீர்மானித்தனர்.

அதேநேரம், இத்தொற்றுக்கிருமி, பரவாமல் தடைசெய்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கும், அத்தலைவர்கள் தீர்மானித்தனர்

இக்கூட்டத்தில் தன் கருத்துக்களைத் தெரிவித்த, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், கோவிட்-19ன் பின்விளைவுகளை எதிர்கொள்வது பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்றும், அதன்வழியாக, நாம் அவற்றுக்குத் தயாராக இல்லை என்ற உணர்வு மேலிடாது என்றும் கூறினார்.

இதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, ஒரு செயல்திட்டக்குழுவை உருவாக்கியுள்ளது என்றும், இத்திட்டக்குழு, ஐந்து பணிக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கர்தினால் டர்க்சன் எடுத்துரைத்தார்.

இந்த ஐந்து பணிக்குழுக்களின் பணிகளையும் விளக்கிய கர்தினால் டர்க்சன் அவர்கள், கோவிட்-19ஆல் உருவான நெருக்கடி காலத்தில், கடும் வறுமையில் வாழும் மக்களின் வாழ்வைக் காப்பாற்றவும், அவர்களுக்கு உதவவும், தலத்திருஅவைகளுக்கு ஆதரவாக, இவை செயல்படும் மற்றும், அக்காலத்தில், திருஅவையின் பிறரன்பு, நலவாழ்வு, சமூகத்தொடர்பு உட்பட பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கிணைக்கும் என்றும் விளக்கினார்.

மக்கள், குறிப்பாக வறியோர், கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்ளவும், வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்கவும் இந்தக் குழுக்கள் உதவும் என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள், அக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.