Namvazhvu
Pope Francis and French President பிரெஞ்சு அரசுத்தலைவருடன்  தொலைப்பேசியில் உரையாடிய திருத்தந்தை
Friday, 24 Apr 2020 13:42 pm
Namvazhvu

Namvazhvu

ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை பிற்பகல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பிரெஞ்சு அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன் அவர்களும், தொலைப்பேசியில் 45 நிமிடங்கள் உரையாடினர் என்று, பிரான்ஸ்அரசுத்தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது.

கோவிட்19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவல் காலத்தில், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவேண்டிய பதிலிறுப்பு, மற்றும், வறுமைப்பட்ட நாடுகளின் கடன்களை இரத்து செய்வது அல்லது குறைப்பது குறித்த விடயங்கள் இந்த உரையாடலில் இடம்பெற்றன என்று கூறப்பட்டுள்ளது.

பிரெஞ்சு நாட்டில் நிலவும் தொற்றுக்கிருமியின் தாக்கம் குறித்து தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டோருக்காக தான் செபித்து வருவதாகவும் திருத்தந்தை கூறினார் என்று, பிரெஞ்சு அரசுத்தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது

இந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து சிறப்பான எந்த செய்தியையும் வெளியிடாத திருப்பீட செய்தித்துறை அலுவலகம், திருத்தந்தைக்கும், அரசுத்தலைவர்களுக்கும் அவ்வப்போது தொலைப்பேசி  அழைப்புகள் நிகழ்வது வழக்கம் என்று கூறியுள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தியில், வறிய நாடுகளின் கடன் சுமைகள் மன்னிக்கப்படாவிடினும், அவை குறைக்கப்படுவதற்கு, செல்வம் மிகுந்த நாடுகள் முன்வரவேண்டும் என்று விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஆப்ரிக்க நாடுகளின் மீதுள்ள கடன் சுமையை தள்ளுபடி செய்வதாக, பிரெஞ்சு அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன் அவர்கள், ஏப்ரல் 14ம் தேதி அறிவித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.