Namvazhvu
கவிதை ஆழமாய் உழுது விதைத்தவர் யார்?
Friday, 01 May 2020 07:17 am
Namvazhvu

Namvazhvu

ஊருக் கெல்லாம் சோறு போடும்

உழவ னொருவன் ஊரில் இருந்தான்

வஞ்சகம் எதுவும் செய்த தில்லை

வம்புக்கு எங்குமே சென்ற தில்லை

 

உழைப்பை மட்டுமே நம்பி வந்தான்

உவப்பும் பொங்கிட வாழ்ந்து வந்தான்

கையகம் இருந்த சிறு நிலமோ

கரடு முரடு வகை யதுவாம்

 

பெருத்த முற்செடி ஒரு புறமாம்

கனத்த பாறைகள் மறு புறமாம்

போக்கு வரத்துக்கு மிக உதவும்

பாதை தடங்களும் இடை வருமாம்

 

வானம் பார்த்த பூமி என்பதால்

வாய்ப்பு பார்த்தே காத் திருந்தான்

தருணம் மழையும் பொழிந் ததனால்

தகையாய் நிலமும் அமைந் ததுவாம்

 

ஆழவே உழுது பதம் அமைத்தான்

கூடவே நன்றாய் எரு சமைத்தான்

கொழித்த விதைகளை நிலம் விதைத்தான்

செழித்து வளரவே தளம் அமைத்தான்

 

பாறையில் அருகே விழுந்த சில

பாதியில் கருகி மடிந் தனவாம்

செடியின் நிழலில் விழுந் தவையோ

சிக்கி நெறிந்து சரிந் தனவாம்

 

நல்ல நிலத்தில் விழுந்த பல

நாற்பது மடங்கு பலித் தனவாம்

அறுபது மடங்கும் கொடுத்து தனவாம்

ஐம்பதிரு மடங்கும் கொழித் தனவாம்

 

ஆழமாய் உழுது விதைத்தவர் யார்?

அகன்றமாய் விழுந்த விதைகளும் யார்?

கொழித்து விளைந்த பலன்களும் யார்?

அழிந்து மடிந்த மணிகளும் யார்?

 

ஆராய்ந்தால் நோக்கம் புரிந்து விடும்

அமர்ந்தால் நடக்கத் தெரிந்து விடும்

ஆண்டவர் வார்த்தைக்கு செவி மடுப்போம்

ஆயிரம் மடங்கு பலன் கொடுப்போம்