முன்னாள் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், ஆப்ரிக்க கண்டத்தில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதன் 40 ஆம் ஆண்டு நிறைவு, மே மாதம் 10 ஆம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதை அல்லேலுயா வாழ்த்தொலி உரைக்குப்பின், நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாஹேல் பகுதியில் எடுக்கப்பட்டுவரும் ஒன்றிணைந்த முயற்சிகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சாஹேல் பகுதியில், இளையோரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுவரும் துயர்துடைப்புப் பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1980ம் ஆண்டு, திருத்தூதுப்பயணத்தின்போது, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் விடுத்த அழைப்பை ஏற்று, எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து, தன் மகிழ்சசியையும் வெளியிட்டார்.
வறட்சியாலும், பட்டினிச்சாவுகளாலும் தொடர்ந்து துயர்களை அனுபவித்து வரும் சாஹேல் பகுதி நாடுகளுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கத்தில், ’ Laudato மரம் நடும் திட்டம்’ என்பதன் கீழ், அப்பகுதி இளையோர் 10 இலட்சம் மரங்களை நட்டு வருவதையும் மகிழ்ச்சியுடன் திருத்தந்தை குறிப்பிட்டார்.
ஆப்ரிக்காவில் பெரும் பசுமை சுவரை கட்டியெழுப்பும் முயற்சியில் சாஹேலையும் உள்ளடக்கி, அங்கு 10 இலட்சம் மரங்களை நட அப்பகுதி இளையோர் எடுத்துவரும் முயற்சிகள் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் கூறினார்,.