Namvazhvu
May 13- Our Lady of Fatima விசுவாசிகளின்றி போர்த்துக்கல் பாத்திமா அன்னை விழா
Tuesday, 12 May 2020 05:02 am
Namvazhvu

Namvazhvu

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காரணமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஊரடங்கால், போர்த்துக்கல் நாட்டு பாத்திமா அன்னை விழா, விசுவாசிகள் மற்றும், திருப்பயணிகளின் பங்கேற்பின்றி நடைபெறும் என்று, அந்நாட்டு கர்தினால் ஒருவர் அறிவித்துள்ளார்.

போர்த்துக்கல் ஆயர் பேரவையின் உதவித் தலைவரும், லெய்ரா பாத்திமா (Leiria-Fatima) மறைமாவட்ட ஆயருமான கர்தினால் அன்டோனியோ மார்த்தோ ( António Martoஅவர்கள், மே 13, புதன்கிழமையன்று, சிறப்பிக்கப்படும் பாத்திமா அன்னை விழா பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

கோவிட்-19 காரணமாக, மக்கள் பெருமளவில் கூடுவது, தடைசெய்யப்பட்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், இவ்வாண்டு பாத்திமா அன்னை விழாவுக்கென ஏற்கனவே திட்டமிட்டிருந்த 350 திருப்பயணிகள் குழுக்கள் இரத்து செய்துள்ளன மற்றும், இவ்வாண்டில் இத்திருநாள் நிகழ்வுகளில் திருப்பயணிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று, கர்தினால் அன்டோனியோ மார்த்தோ அவர்கள் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் மே 13 ஆம் தேதி முதல், அக்டோபர் 13ஆம் தேதி, பாத்திமாவில் திருப்பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் என்று கூறிய கர்தினால் ஆயசவடி அவர்கள், இவ்வாண்டு இவ்விழாத் திருவழிபாடுகளை, வானொலி, தொலைக்காட்சி மற்றும், டிஜிட்டல் ஊடகங்கள் வழியாகப் பங்குபெற்று, அன்னையின் ஆசீரைப் பெறுமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

போர்த்துக்கல் நாட்டில் மே 30 ஆம் தேதி முதல், விசுவாசிகளின் பங்கேற்புடன் திருப்பலிகள் ஆரம்பமாகும் என்றும், அருங்காட்சியகம், மே மாதம் 19ஆம் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1917ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி முதல், அக்டோபர் 13ஆம் தேதி வரை, அன்னை மரியா பாத்திமாவின், மூன்று சிறார்க்கு, ஆறு முறைகள் காட்சியளித்தார்.

இத்தாலியில் திருப்பலி மே18

மேலும், இத்தாலியில், மே 18ம் தேதி முதல் விசுவாசிகளின் பங்கேற்புடன் திருப்பலிகள் ஆரம்பமாகும் என்று கூறியுள்ள ஆயர்கள், அதில் பங்குகொள்ளவேண்டிய விதிமுறைகள் குறித்தும் விவரித்துள்ளனர்.