இயேசு இறைவனின் மெய்நிகர் வெளிப்பாடாக இவ்வுலகில் தோன்றி மறையவில்லை, மாறாக, நம்மைப்போல ஒரு மனிதப்பிறவியாக உருவெடுத்து, நம்மைச் சந்தித்தார்; இன்றும் அவர் நம்மைச் சந்திக்க விழைகிறார் என்று, வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர், இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.
"நெருக்கடி நிலையின் நாளேடு" (Diary of the crisis) அல்லது, "நெருக்கடியையும் தாண்டி வாழ்வது" (Living beyond the Crisis) என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரை, வத்திக்கான் செய்தித்துறையுடன் பகிர்ந்துகொண்டு வரும் அருள்பணி லொம்பார்தி அவர்கள், இத்தொடரின் அடுத்த பதிவாக, நம் சந்திப்புக்களைக் குறித்த சிந்தனைகளைக் கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.
கோவிட் 19 தொற்றுக்கிருமியினால் சுமத்தப்பட்ட முழு அடைப்பு, சமுதாய விலகல் என்ற வரைமுறைகள் தளர்த்தப்படும் வேளையில், அடுத்து வரும் நாள்களில் நாம் எவ்வாறு ஒருவரையொருவர் சந்திக்கப்போகிறோம் என்பதைக் குறித்த சிந்தனைகள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
முழு அடைப்பு காலத்தில், கணிணி வழியே நாம் கொண்டிருந்த தொடர்புகள், ஓரளவு பயனுள்ளவையாக இருந்தாலும், அவை, உண்மையான, நிறைவான உறவை வளர்ப்பதில்லை என்பதை உணர்ந்துள்ள நாம், இனி வரும் நாள்களில், உண்மையான உறவுகளை எப்படி வளர்க்கப்போகிறோம் என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடுகளின் எல்லைகள் மூடப்பட்ட நிலையில் வாழ்ந்த நாம், இனிவரும் நாள்களில் இந்த எல்லைகளைக் கடந்து, உண்மையான மனித குடும்பத்தைச் சந்திக்கவும், அங்கு குடும்ப உணர்வை வளர்க்கவும் ஆர்வம் கொண்டுள்ளோம் என்பதை அருள்பணி தன் கட்டுரையில் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார்.
டிஜிட்டல் உலகம் எவ்வளவுதான் தொடர்பு கருவிகளை வளர்த்திருந்தாலும், முகமுகமாய் ஒருவரைப் பார்த்து, உண்மையான புன்னகை செய்து வளர்த்துக்கொள்ளும் தொடர்பை எந்தக் கருவியாலும் ஈடுசெய்ய முடியாது என்பதை, நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளோம் என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள், இக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.