கல்வி எனும் கரையிலாக் கடல்
“படிக்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே மேல்”
பண்டைய காலத்தில் மக்கள் ஒருவருக் கொருவர் பார்த்துப் பேசி, கதை சொல்லி தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் மூதாதையர்களும், முன்னோர்களும் பண்டைய காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதிப் படித்தனர். இப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த கல்வியை இன்றைய ஊடக உலகில் நாம் (online) வலைதளம் மூலமாகப் படிக்கின்றோம். அதிலும் ‘கோவிட்-19’ பெருந் தொற்றுக் குப் பிறகு, வலைதளக் கல்வி அதிக மாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கல்வி என்ற ஒன்று மட்டும்தான் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை முழுவதும் வருகிறது. ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ - என்ற ஒளவையாரின் கூற்று நமக்கு உணர்த்துவதும் அதுவே. வாழ்க்கையில் எவ்வளவு வறுமை நிலை நமக்கு ஏற்பட்டாலும், கல்வி கற்பதை மட்டும் நாம் நிறுத்திவிடக்கூடாது.
“படிக்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே மேல்” என்றார் பிளாட்டோ. ஒரு மனிதன் கல்வியைக் கற்காமல் இருப்பானாயின், அவனது பிறப்பிற்கே அர்த்தமில்லை.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
என்றார் திருவள்ளுவர். பணம், பொருள், செல்வம் ஆகிய மூன்றும் காலத்தால் அழியக்கூடியவை. ஆனால், கல்விச் செல்வம் மட்டுமே காலத்தால் அழிக்க முடியாதது என அறிவுறுத்துகிறார் ஐயன் திருவள்ளுவர். மற்ற அனைத்துச் செல்வங் களும் கள்வர்களால் திருடுபோகக் கூடியது; ஆனால், கல்விச் செல்வத்தை மட்டுமே யாராலும் திருட முடியாது.
ஒருவன் தான் பெற்ற கல்வியின் இன்பத்தை முழுமையாக அவனது வாழ்வில் அனுபவிக்க, மீண்டும் மீண்டும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான், மிகப் பெரிய அறிஞர்கள் எல்லாம் தமது வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கின்றனர். அவர் களது வீட்டிலும்கூட சிறிய நூலகங்கள் இருக்கின்றன.
கல்வி என்ற ஒன்று மட்டும் தான் நாம் செய்கிற அல்லது இனி மேல் செய்யப்போகிற தொழிலுக்கு மிகச்சிறந்த வழி காட்டும் கருவி. கல்வி என்பது, ஒவ்வொரு மனித னின் வாழ்க்கையையும் வாழ்வதற் காக உதவும் மிகப்பெரிய ஆயுத மாகும். ஆகவே, அறிவியலின் துணைகொண்டு இந்தச் சமு தாயத்தையும், வாழ்க்கையையும் நெறிப்படுத்த கல்வி கற்க வேண்டும். இந்தக் கல்விப் பயணத்தில் நமது வாழ்க் கையின் ஆகச்சிறந்த நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு, அதற்கேற்றார்போல் நாம் கல்வி கற்க வேண்டும். ஒருவன் சான்றோனாக விளங்கு வதற்கும், வாழ்க்கையின் முழு அர்த்தத்தை முழுமை யாக வாழ்வதற்கும், பிறர் நம்மைப் பார்த்து வியந்து பாராட்டும்படி வாழ்வதற்கும் மிக முக்கியமான காரணம் இந்தக் கல்விதான். ஏனென்றால், கல்வி கற்றவரிடம் ஒழுக்கம், பண்பு, நேர்மை இவைகள் மேலோங்கிக் காணப்படும்.
“இந்த உலகத்தையே மாற்றக்கூடிய ஒரு மிகச்சிறந்த ஆயுதம் கல்வி” என்கிறார் நெல்சன் மண்டேலா. “படிப்பால் மட்டுமே பாரதத்தை பாராளச் செய்யலாம்” எனும் அப்துல் கலாமின் கூற்று கல்வியின் முக்கியத்துவத்தையும், அவசியத் தையும் உணர்த்துகின்றது. அவ்வாறே, நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும்போது, “பெற்ற பிள்ளை நம்மைக் கைவிட்டாலும், கற்ற கல்வி நம்மை ஒருபோதும் கைவிடாது” என்றார்.
ஞானத் துறவி விவேகானந்தரும் “மனிதன் தன் கல்வியின் மூலமாக அவனது அறிவை மேம்படுத்த வேண்டும்” என்கிறார். படிப்பினுடைய மேன்மையை நன்றாக உணர்ந்ததால்தான் பேரறிஞர் சாக்ரடீஸ், அவருடைய வாழ்நாளினுடைய கடைசி காலக் கட்டத்தில் நஞ்சு கொடுக்கப்படும் நேரம் வரை, கிரேக்க நாட்டுக் கவிதைகளை மிக உன்னிப் போடும், கவனம் சிதறாமலும், எந்தவிதக் கவலையும் கொள்ளாமலும் படித்துக் கொண்டி ருந்தார் என்பது வரலாறு. அவரைப் போலவே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்வரை ஆவலோடு படித்துக் கொண்டிருந்தார் என்பதும் நாம் அறிந்ததே. அகில உலகமே வியந்து கொண்டாடக்கூடிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், வெளிநாட்டில் படித்துக் கொண்டி ருந்தபோது, படுக்கின்ற இடம்கூட படிப்பகத்தின் அருகாமையில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஆகவே, கல்வியாண்டின் தொடக் கத்தில் குழந்தைகளே! மாணவச் செல்வங்களே! அதிகமான அறிவைப் பெறவேண்டும் என்றால், ஏராளமான புத்தகங்களைப் படிக்க வேண்டும். கல்வியைவிட சிறந்த ஆயுதம் வேறொன்றுமில்லை. ஆகையால், என்றைக்கும் கஷ்டப்பட்டு படிக் காதே; இஷ்டப்பட்டுப் படி! உங்கள் வாழ்க்கை எந்த நிமிடம் வேண்டுமானாலும் மாறலாம். அந்த நிமிடம் இந்த நிமிடமாகக் கூட இருக்கலாம்.
படிக்கிற மாணவர்களுக்கு நேரம் என்பது மிக முக்கியம். வாழ்க்கை என்பதே நேரத்தால் ஆனது தான். இந்தியர்களாகிய நாம் கடிகாரத்தைப் பார்க்கும் போது, மணியை மட்டுமே பார்க்கிறோம். அமெரிக்கர் கள் மணியோடு சேர்த்து நிமிடத்தையும் பார்க்கிறார் கள். ஜப்பானியர்களும், ஐரோப்பியர்களும் நிமிடத் தோடு சேர்த்து வினாடியையும் பார்க்கிறார்கள் என்பார்கள். ஓய்வு பெற்ற IPS அதிகாரி கலியமூர்த்தி அருமையாகச் சொல்வார்: “காலையிலேயே படுக்கையை விட்டு எந்த மாணவன் சீக்கிரமாக எழுந்திருக்கின்றானோ, அவன்தான் உலக ஓட்டப்பந்தயத்தில் ஓர் அடி முன்னால் எடுத்து வைக்கிறான்.” இதைப்பற்றி அவர் மேலும் தெளி வாக விளக்கும்போது இவ்வாறு கூறுகிறார்: “அதிகாலை மூன்று மணிக்கு எழுபவன் முனிவன்; நான்கு மணிக்கு எழுபவன் ஞானி; ஐந்து மணிக்கு எழுபவன் அறிஞன்; ஆறு மணிக்கு எழுபவன் மனிதன்; ஏழு மணிக்கு எழுபவன் எருமை!” இதில் நீங்கள் மாணவர்களாக இருந்தால், எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறீர்கள் என்று உங்களையே நீங்கள் பரிசோதனை செய்து பாருங்கள்.
கல்வியில் சிறந்தது தமிழ்நாடு; புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு! ஆகவே, கல்வியை நாம் போற்றுவோம். இந்தக் கல்வியால் நாம் உயர்வோம்! உங்கள் கல்வி ஆண்டு சிறக்க வாழ்த்துகள்.
Comment