No icon

Editorial

உருவான கூட்டணியும் உருவாகாத அரசியல் மாண்பும் 


மக்களவைத் தேர்தல் நெருங்க, நெருங்க மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் அணியமாகி நிற்கின்றன. தங்கள் கட்சிக்கென்று கொண்ட கொள்கைகளை குப்புறப் போட்டுப் புதைத்துவிட்டு, பயன்படுத்திய தடித்த வார்த்தைகளை தண்ணீரில் எழுதி வைத்துவிட்டு, மாட்டுச் சந்தையில் துண்டுக்குள் பேரம் பேசுவதுபோல விடிய விடிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் கூடாரமிட்டு அரசியலில் ஜனநாயகத்தைக் குழித்தோண்டி புதைக்கின்றனர். கீரியும் பாம்புமாக மாறி மாறி சண்டைப் போட்டுக் கொண்டவர்கள் சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு நோபல் பரிசுக்காக காத்திருக்கின்றனர். 
தேர்தல் நெருங்க நெருங்க பாரதிய ஜனதா கடந்த ஐந்து ஆண்டுகளில் விதைத்து, வளர்த்த பெரும்பான்மைவாத, சந்தர்ப்பவாத அரசியலை முன்வைக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டுமல்ல மத்தியிலும் நாங்கள் எதிரிகள்தான் என்று கூப்பாடு போட்ட சிவசேனாவும் பாரதிய ஜனதா கட்சியும் பேரம் படிந்து மகாராஷ்டிரத்திற்குட்பட்ட மக்களவைத் தொகுதிகளை பங்கீடு செய்துள்ளன. இனி அவர்கள் சேரவே மாட்டார்கள்; சேருவதற்கான வாய்ப்பே இல்லை என்றுதான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை "சாம்னா" என்ற சிவசேனைப் பத்திரிகை சத்தியம் செய்தது. 
பாஜகவும் சிவசேனாவும் முறையே 25:23 என்ற வகையில் 48 தொகுதி களையும் பிரித்துள்ளன. கூட்டணியாக வெள்ளிவிழாவைக் கொண்hடாடும் இந்த கொள்ளைக் கூட்டணி சமயத்திற்கேற்றார்போல் மதத்தையும் மராட்டிய வெறிiயும் கையிலெடுத்து வாக்குகளைப் பிரிக்கும்.  இன்று பெரும்பான்மைவாதம் என்ற புள்ளியில் ஆர்எஸ்எஸ்-ன் வழிகாட்டுதலில் இரண்டு கட்சிகளும் இணைந்து நிற்கின்றன. மகாராஷ்டிர விவசாயிகளுடைய வாழ்வாதாரம் பறிபோன நிலையில் அவற்றைப் பற்றியெல்லாம் இந்தக் கட்சிகளுக்கு கவலையில்லை.  காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலைத் தாக்கும் பாஜக, தாக்கரேக்களின் வாரிசு அரசியலைப் பற்றி பேசத் தயங்கும். தங்களுடைய சுய நலத்திற்காக இந்தக் காவிக் கட்சிகள் நாடகமாடுகின்றன.  மத அரசியலை முன் வைக்கும் இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி இந்தியாவிற்குப் பேராபத்து. உத்திரப்பிரதேசத்தில் எதிரும் புதிருமான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும்  கூட்டணி அமைத்துத் தொகுதிகளைப் பங்கீடு செய்துள்ளன.
தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. மோடியா? லேடியா? என்று கொக்கரித்தது இறந்த காலம். அது அம்மா இறந்த காலத்தோடு முடிவடைந்துவிட்டது என்று அதிமுகவினர் அறிவித்துவிட்டனர். பேரம் படிந்து பாஜகவும் பாமகவும் அதிமுகவும் தாங்கள் யார்? என்பதை தங்கள் கூட்டணி மூலம் அறிவித்துள்ளன. 
மேகதாது அணை விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கியதுபோல பாவ்லா செய்தவர்கள், குட்கா விவகாரத்தில் தலை கவிழ்ந்து கிடந்தவர்கள், ஒக்கிப் புயலில்  மத்திய அரசிடமிருந்து எதுவும் கிடைக்கவில்லை என்று ஒப்பாரி வைத்தவர்கள், கஜா புயலில் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை என்று கையைப் பிசைந்தவர்கள்,  ஷாவின் குச்சிக்கு பொட்டி பாம்பாக அடங்குகின்றனர். வீர ஆவேசம் பேசிய தம்பிதுரைகளெல்லாம் நமக்கு எதற்கு வம்பு? என்று பதுங்குகின்றனர். புல்வாமா தாக்குதலில் நாடே அல்லோலப்பட்டுக்கொண்டிருக்க பிளாசாக்களில் கூட்டணி பேரம் நடைபெற்றுக் கொண்டிருந்ததுதான் கொடுமை.  ஊழல் கட்சி என்று முத்திரை குத்தி உரக்கப் பேசிய அமித்ஷாவே இறங்கி வந்து பேரம்  பேசுகின்றார்.
அ.தி.மு.க. அரசை "குரங்கு கையில் பூமாலை" என்று குத்திக் காட்டிய அன்புமணியின் தந்தை ராமதாஸோ தன் பெயருக்கேற்ப வேஷம் போடுகிறார். ஒவ்வோர் அமைச்சர் மீதும் ஊழல் பட்டியலைக் கொடுத்து நடவடிக்கை எடுங்கள் என்று கவர்னர் மாளிகையை கலங்கடித்தவர், தினம் தினம் விடும் அறிக்கையாலேயே தைலாபுரத்தின்மீது மீடியாக்களின் கவனத்தைத் திருப்பியவர் ஏழு தொகுதிகள் கிடைத்தவுடனே அந்த முழுப் பூசணிக்காயை தன் மாங்கனிக்குள் மறைக்கப் பார்க்கிறார். பாட்டாளி என்ற அடைமொழியுடன் கட்சியின் பெயரில் மட்டுமே சாதியைத் திணிக்காதவர், முழுக்க முழுக்க தன் சாதிப் பலத்தால் பேரம் முடித்திருக்கிறார். பாஜக-வின் மதவாத அரசியலும் பாமக-வின் சாதிய அரசியலும் அதிமுகவின் இலவச அரசியலும் இந்திய ஜனநாயகத்தைக் கேலி செய்கின்றன. பச்சைமுத்து உள்ளிட்ட சில சாதியத் தலைவர்களை ஒருங்கிணைக்கவும் சாதிச் சங்கங்களை கொம்பு சீவிவிடவும் இவர்கள் தயாராகிவிட்டனர்.  இலை, தாமரை, மாங்கனி என்ற இந்த ‘தாவர கூட்டணி’ ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியே. 
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பப் புறப்பட்டுள்ள கமலும் ரஜினியும் தமிழக அரசியலில் கத்துக் குட்டிகள்.  ஒரு நிலைப்பாடு எடுக்கத் தெரியாமல் குழம்பிய குட்டையில் கும்மாளம் போடுபவர்கள். இவர்களுக்கு மீன் பிடிக்கத் தெரியாது. அறிக்கைகளாலும் டிவிட்டர் களாலும் தங்கள் இருப்பைத் தெரிவிப்பவர்கள். 
திமுகவும் காங்கிரசும் அதோடு ஒத்த மதச்சார்பற்ற கொள்கையுடைய விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட
கட்சிகளும் மதச்சார்பின்மையைக் காக்கும் பொருட்டு அணியமாகியுள்ளன. ஆக இத்தேர்தல் மதச்சார்பின்
மைக்கும் மதச்சார்புடைமைக்கும் இடையிலானது என்பது
தெளிவாகியுள்ளது. ஜனநாயகத்திற்கும் பெரும்பான்மை வாதத்திற்கும் இடையிலானது என்பது சுட்டிக்
காட்டப்படுகிறது. எனவே சிறுபான்மையினருடைய நிலைப்பாடு தெளிவாக மதச்சார்பின்மைக்கும் ஜன நாயகத்திற்குமானதாகவே இருக்கவேண்டும். நம் விரல்
மை நாட்டின் இறையாண்மைக்கு வலிமை சேர்க்கும். விற்பனைக்கில் லாத நம் வாக்கு சில கற்பனைவாதிகளின் கனவை கலைத்துப் போடும். காவியின் கொட்டத்திற்கு முடிவு கட்டும். ஊழலை அப்புறப்படுத்தும்.
 

Comment