No icon

நெருப்போடு விளையாடாதீர்!

நாட்டின் வலிமையான ஜனநாயகத் தூண்களில் ஒன்று நீதிமன்றம். இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாப்பிற்குட்பட்ட நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் தம்  பாரபட்சமற்ற தீர்ப்பாலும், தன் இருப்பாலும் இந்திய இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்பையையும் இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் பாதுகாத்து வருகிறது என்பது வெள்ளிடைமலை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதன் அமைப்பு முறையில் தாக்குதல் தொடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கொலிஜியம் அமைப்பிலான நீதிபதி நியமன முறையில் தொடங்கி, வழக்கு விசாரணை- அதன் போக்கு வரை தலையிட முயற்சித்து வருகிறது. அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் கூட சதிவலை இருப்பதாக தெரிகிறது.
ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அன்று, உச்சநீதிமன்றத்தின் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி 35 வயது நிரம்பிய பெண் ஒருவர், உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் வாக்குமூலம் ஒன்றை அனுப்பினார். அதில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களால்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் தாம் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். மேலும் தாமும் தம் குடும்பத்தினரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு உச்சநீதிமன்றத்தின் செயலர் உடனடியாக மறுப்பு தெரிவித்து, இந்தப் பெண்ணை, பின்னால் யாரோ இயக்குகிறார்கள் என்றும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி, சில மாதங்கள் மட்டுமே அந்த அலுவலகத்தில் மற்ற பெண்களோடு வேலை செய்த அவர், தலைமை நீதிபதியை நேரில் சந்தித்திருக்கவே மாட்டார். இவரது பணியிடைநீக்கமும் முறையாகவே நடைபெற்றுள்ளது. நீதிபதி மீது பொய்யான புகார் அளிக்கும் நோக்கத்துடனே சில விஷமிகள் செய்துள்ளனர்’ என்று மறுப்பு தெரிவித்தார். 
தலைமைநீதிபதி, அருண் மிஸ்ரா,  சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற விடுமுறை கால அவசர கால அமர்வு, இந்த வழக்கை,  விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. குற்றஞ்சாட்டப்பட்டவரே அமர்வில் உள்ளதால் இது சட்ட நியதிக்கு புறம்பானது என்று சொல்லப்பட்டது. 
இதற்கிடையில் இன்னொரு திருப்பமாக தலைமை நீதிபதி மீது அவதூறு பரப்ப தனக்கு ஒன்றரைகோடி பேரம்பேசப்பட்டதாக வழக்கறிஞர் உத்சவ் பெயின் பரபரப்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அதிருப்தியில் உள்ள பலர் (தீர்ப்பால் அதிருப்தி அடைந்தவர்கள், பெருமுதலாளிகள், ஊழல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகார வர்க்கத்தினர்) அவரைப் பழிவாங்குவதற்காக அவரைச் சுற்றி பல சதிகளைச் செய்தவாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண்மிஸ்ரா, நாரிமன், தீபக் குப்தா ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வு ‘பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் இயக்க முடியாது. அவர்கள் நெருப்போடு விளையாடுகிறார்கள்’ என்று எச்சரித்து, கடந்த 3,4 ஆண்டுகளாக நீதித்துறை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது’ என்று யாரையோ அவர்கள் மறைமுகமாக குற்றஞ்சுமத்தினார்கள். 
இந்த விவகாரம் சம்பந்தாக நீதிபதி பாப்டே தலைமையில் இந்திரா பானர்ஜி, இந்து மல்ஹோத்ரா (நீதிபதி ரமணாவுக்குப் பதிலாக) ஆகியோர் அடங்கிய ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, இரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகார் அளித்த பெண் மட்டுமே விசாரணை யாருக்கும் தெரியாத வகையில் விசாரிக்கப்படுவார். அவரது வழக்கறிஞருக்கும் அனுமதியில்லை.  அந்தப் பெண்ணும் எனக்கு காது சரியாகக் கேட்கவில்லை; வழக்கறிஞர் அருகில் இல்லை என்று முறையான காரணம் சொல்லாமல் தான் இந்த ரகசிய விசாரணையில் பங்கேற்க முடியாது என்று பின்வாங்கியுள்ளார்.  தலைமை நீதிபதி கோகோய் இந்த ரகசிய விசாரணையில் மே மாதம் 1 ஆம் தேதி ஆஜராகி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
மேற்கண்ட ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் வழக்கின் போக்கையும் பார்க்கிறபோது தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதியரசர்கள் குறிப்பிடுவதுபோல நீதித்துறை அச்சுறுத்தலில் உள்ளது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.  உச்சநீதிமன்றம் சில முக்கிய வழக்குகளில் வழங்க இருக்கும் தீர்ப்புகளை முடக்குவதற்கு முனைகிறார்கள்; தலைமை நீதிபதி பதவியை முடக்குவதற்கு திட்டுமிடுகிறார்கள்- என்ற ஐயப்பாடுகளை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை.  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களுக்கு பெண் உதவியாளர்களே வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் பாலியல் தொந்தரவு ஒழுங்காற்றுக் குழு இதனை விசாரித்திருக்க வேண்டும்.
குற்றம் சுமத்தும் பெண், பெண்நீதிபதிகள் இருவர் இருந்தும் ரகசிய விசாரணைக்கு ஆஜராக மறுப்பதும், வழக்கறிஞர் உத்சவ் பெயினுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததும், அக்டோபர் மாதம் நடைபெற்ற சம்பவத்தை, இந்த ஏப்ரல் மாதம் உரிய ஆதாரங்களின்றி தெரிவிப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றன. சிபிஐ முதல் தேர்தல் ஆணையம் வரை அனைத்து தன்னிச்சையான அமைப்புகளையும் ஆளும் பாஜக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சூழ்நிலையில் ஜனநாயகத்தின் சக்தி வாய்ந்த பதவியில் இருக்கும் தலைமைநீதிபதி மீது எழுப்பபட்டிருக்கும் இந்தப் புகார் மக்களையும் இந்திய ஜனநாயகத்தையும் அச்சுறுத்துவதாகவே உள்ளது.
சத்ய மேவ ஜயதே! வாய்மையே வெல்லும்.

Comment