No icon

RIP

இறுதி அஞ்சலி: ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

இறுதி அஞ்சலி: ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

               குருவாக ஆசைப்பட்டு சிறந்த அரசியல்வாதி ஆனவர் போர்க்குணத்தின் அடையாளம், சோஷலிஸக் கொள்கை கொண்ட தேசியத் தலைவர்மத்தியில் தேசிய ஜனநாயக முன்னணி அரசு உருவாக முக்கியக் காரணமானவர்...  இப்படிப் பல தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ், வயது மூப்பின் காரணமாக ஜனவரி மாதம் 29 ஆம் தேதி காலை காலமானார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஜூன்மாதம் 3 ஆம் தேதி 1930 ஆண்டு ஜோசப் - ஆலிஸ் மார்த்தா பெர்னாண்டஸ் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தோர் ஐந்து சகோதரர்கள் ஆவர். இவர் எல்லாராலும் செல்லமாக ஜெர்ரி என்று அழைக்கப்பட்டார்.  1946 ஆம் ஆண்டில் தன் தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, குருமாணவராக பெங்களூரு புனிதபேதுரு குருமடத்தில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் மெய்யியல் படித்த இவர் மேலும் தனது குருத்துவப் படிப்பைத் தொடர விரும்பாமல் குருமடத்தை விட்டு வெளியேறினார். கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, கத்தோலிக்க விசுவாசத்தில் திளைத்திருந்தாலும் ஒரு சுதந்தரப் பறவையாக மும்பைக்குச் சென்றார். 1949 ஆம் ஆண்டு மும்பை சென்ற அவருக்கு மும்பை உடுப்பி ஹோட்டல்கள்தான் அடைக்கலம் கொடுத்தன. மும்பையின் பிரபல யூனியன் தலைவர் பிளாசித்  டி மெல்லோவின் ஆதரவு கிடைத்தது. அப்போது, மும்பையில் மில்கள் அதிகம் இருந்தன. மில் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து பெரும் போராட்டங்களை நடத்தினார் பெர்னாண்டஸ். 1967 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மும்பையின் பவர்ஃபுல் மனிதர் எஸ்.கே.பாட்டீலை பெர்னாண்டஸ் தோற்கடித்தபிறகு, இந்தியாவே அவரை உற்று நோக்கத் தொடங்கியது.

தொழிற்சங்கங்களின் தலைவராக, 1970-களில் தேசிய அளவில் ரயில்வே ஸ்டிரைக்கை நடத்திப் பிரபலமானார். அனைத்து இந்திய ரயில்வே கூட்டமைப்புத் தலைவராக இருந்தபோது மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தலைமையேற்று சிறைசென்றார். இருபது நாள் நடைபெற்ற இந்தப் போரட்டத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸால் ஈர்க்கப்பட்டு 17 இலட்ச இரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஜனதா கட்சியின்மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பிறகு ஐக்கிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்திராகாந்தியின் மிசா காலத்தில் 21 மாதங்கள் சிறையில் இருந்த பெர்னாண்டஸ், சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டே, அங்கிருந்தே 1977 ஆம் ஆண்டு முசாஃபர்பூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தக் காலகட்டத்தில் முதலீடு மீறல்களைக் கண்டித்து ஐபிஎம், கோகோகோலா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டார். 1989-90 ல் விபிசிங் காலத்தில் மத்திய ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்று, மிகப்பெரிய கொங்கன் ரயில்வே திட்டத்தை நிறைவேற்றினார். ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சமதா கட்சியை 1994 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

வாஜ்பாய் தலைமையின் கீழ் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், 1998 முதல் 2004 வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். கார்கில் போரின்போதும், பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போதும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக இருந்தார். ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்டிருக்கும் சர்வதேச சோஷலிஸ அமைப்பின் ஒரே இந்திய உறுப்பினராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஹூமாயூன் கபீரின் மகள் லெய்லாவை மணந்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1984 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். ஆனால், முறைப்படி விவகாரத்து பெறவில்லை. ஆனால், அனைத்து ஆவணங்களிலும் மனைவியின் பெயராக லெய்லா வையே பெர்னான்டஸ் குறிப்பிட்டிருந்தார். 1994க்குப் பிறகு ஜெயா ஜேட்லி சமதா கட்சியில் தீவிரமாக பணியாற்றினார். ஜெயா ஜெட்லிக்கும் பெர்னான்டசுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 2010 ஆம் ஆண்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அல்ஸ்ஹைமர் என்கிற மறதி நோயால் பாதிக்கப்பட்டார். இந்தச் சமயத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, லெய்லா மீண்டும் ஜார்ஜ் பெர்னான்டஸுடன் வந்து சேர்ந்துகொண்டார்.

கடைசியாக, 2009 ஆம் ஆண்டுஆகஸ்டு மாதம் முதல் 2010 ஜூலை மாதம் வரை பீஹார் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்ஊழல் வழக்குகள், குடும்பச் சண்டைகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு இடையில், தன் உடல் நோய்களுடன்போராடி வந்தார்இவர், தமது வயது மூப்பின் காரணமாக, தன் 88 வயதில் டெல்லியில் உள்ள தன் வீட்டில் ஜனவரி 29 அன்று காலையில் காலமானார். “மக்களின் உரிமைகளைக் காப்பாற்ற எதைச் செய்தாலும் ஜனநாயகபூர்வ மானதுதான்  என்பது இவர்தம் மிகச் சிறந்த மேற்கோளாகும். ஜனநாயக வாதிக்கு இறுதி அஞ்சலி!!!

Comment