No icon

Pope Francis

திருத்தந்தையின் புனித வாரத் திருவழிபாடுகள்

திருத்தந்தையின் புனித வாரத் திருவழிபாடுகள்

2019ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல், 21ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் புனித வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருவழிபாட்டு நிகழ்வுகளை, திருப்பீடம், மார்ச் 20 ஆம் தேதி வெளியிட்டது.அதன்படி
ஏப்ரல் 14, குருத்தோலை ஞாயிறு மற்றும், 34வது உலக இளையோர் நாள் ஆகிய இரு தருணங்களை இணைத்து, நடைபெறும் குருத்தோலை பவனியையும் திருப்பலியையும், ஞாயிறு காலை 10 மணிக்கு திருத்தந்தை முன்னின்று நடத்துகிறார்.

ஏப்ரல் 18, புனித வியாழன் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் வழிபாட்டையும், அருள்பணித்துவத்தை கொண்டாடும் திருப்பலியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

ஏப்ரல் 19, புனித வெள்ளியன்று, மாலை 5 மணிக்கு ஆண்டவரின் பாடுகள் மற்றும் திருச்சிலுவை வணக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி நடைபெறும் திருவழிபாட்டை திருத்தந்தை நடத்தியபின், இரவு 9.15 மணிக்கு, உரோம் நகரில் அமைந்துள்ள கோலோசேயம் திடலில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியையும் முன்னின்று நடத்துகிறார்.

ஏப்ரல் 20 புனித சனிக்கிழமை இரவு 20.30 மணிக்கு, பாஸ்கா திருவிழிப்பு வழிபாட்டை நடத்தும் திருத்தந்தை, ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று, காலை 10 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்றியபின், நண்பகலில், வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து ‘உர்பி எத் ஓர்பி’ என்ற சிறப்புச் செய்தியை வழங்குவார்.

Comment