No icon

சுமுலேயு சியுக் அன்னை மரியா திருத்தலம்

மிர்கியூரியா சியுக் கருக்கு அருகிலுள்ள, சுமுலேயு சியுக் அன்னை மரியா திருத்தலம், டிரான்சில்வேனியா  மாநிலத்தில் உள்ளது. இப்பகுதி, 1919 ஆம் ஆண்டுக்கு முன் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்திருந்தது. சிஸ்கோசோமில்யோ கிராமத்திலுள்ள பிரான்சிஸ்கன் துறவு இல்லமும், அன்னை மரியா திருத்தலமும், 1442க்கும், 1448 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டன. ஹங்கேரி நாட்டு அரசர், சிகிஸ்முண்ட் ஜாப்போல்யா  2 ஆம் ஜான், சிஸ்கேலி மக்களை, பிரிந்த கிறிஸ்தவ சபைக்கு மதம் மாற்ற முயற்சித்தவேளையில், அவர்கள் கத்தோலிக்க விசுவாசத்தை மறுதலிக்க மறுத்து எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால், அந்த இடத்துக்கு அருகில், 1567 ஆம் ஆண்டு, பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு முந்தைய சனிக்கிழமையன்று போர் நடைபெற்றது. அதில் சிஸ்கேலி மக்கள் வெற்றியடைந்தனர்.
எனவே, இந்த வெற்றியை, பிரான்சிஸ்கன் துறவியர், அன்னை மரியா ஆசீர் அருளுவதன் அடையாளம் எனக் கருதி, அந்த இடத்தை, திருப்பயண இடமாக மாற்றினர். அதிலும், பெந்தக்கோஸ்து பெருவிழாவிற்கு விசுவாசிகள் கூடியிருக்கையில், இந்நிகழ்வு நினைவுகூரப்பட்டது. இதனால் இங்கு, பாரம்பரியமாக, பெந்தக்கோஸ்து பெருவிழாவின்போது, ஆண்டுத் திருப்பயணம் நடைபெறுகின்றது. டிரான்சில்வேனிய வரலாற்று சிறப்புமிக்க மாநிலத்திலும், அதற்கு வெளியேயும் வாழ்கின்ற ஹங்கேரி நாட்டு மக்களை, ஆன்மிக அளவில் ஒன்றிணைப்பதன் அடையாளமாகவும் இத்திருப்பயணம் நடைபெறுகின்றது.
ஆண்டு முழுவதும், அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும், ஒரு இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான திருப்பயணிகள் இத்திருத்தலத்தில் திருப்பயணம் மேற்கொள்கின்றனர். அன்னை மரியாவின் பரிந்துரையால் நூற்றுக்கணக்கான  புதுமைகளும் நடைபெற்றுள்ளன. 2016ஆம் ஆண்டில், ஹங்கேரி நாட்டு அரசுத்தலைவர் யானோஸ் ஏடர் அவர்களும், இத்திருப்பயணத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
பசுமையான குன்றுகள் பகுதியில் அமைந்திருக்கும் இத்திருத்தலத்திற்கு 55 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே, திருப்பயணிகள் சிலுவைப்பாதை பக்திமுயற்சியுடன் செல்கின்றனர். மேலும், இக்குன்றுகளில் தாதுப்பொருள்கள் நிறைந்த நீர் ஊற்றுகள் மக்களின் உடல்நலத்திற்கும் பயனளிக்கின்றன. இரும்பு சத்தைவிட, கார்பன் அதிகமாகக் கலந்த நீராக, இவை சுவை தருகின்றன.
227 செ.மீ. உயரமுடைய மரத்தாலான இந்த அன்னை மரியா திருவுருவம், “சூரியனில் ஆடையணிந்த பெண்” எனப் போற்றப்படுகின்றார். அன்னை மரியா திருவுருவம், 1515க்கும், 1520 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மரத்தால் உருவாக்கப்பட்டது. இது, 1661ஆம் ஆண்டில் இடம்பெற்ற கோர தீ விபத்தில் சேதமாகாமல் இருந்தது.

Comment