No icon

SUNDAY HOMILY

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு மறையுரை

கூண்டுப்புழு வண்ணத்துப் பூச்சி யாவதும், முட்டை குஞ்சாகி, குஞ்சு கோழியா வதும், குழந்தை சிறுமியாகி, தாயாவதும், பனிக்கட்டி நீராகி, நீர் ஆறாகி, ஆறு கடலாகி பின் மேகமாவதும், மொட்டு பூவாகி, பூ காய் கனியாவதும், பாம்பு பலமுறை சட்டையை உரித்துக்கொள்வதும், மரம் தன் பட்டையை உதிர்ப்பதும் வாழ்வில் நாம் காணும் பரிமாணங் கள். காந்தி மகாத்மா ஆவதும், தெரசா அன்னையாவதும், பிரான்சிஸ் மக்கள் பாப்பரசர் ஆவதும், அப்துல்கலாம் மக்கள் ஜனாதிபதி ஆவதும், ரகுமான் இசைப்புயல் ஆவதும், மனிதர்கள் மாமனிதர்கள் ஆவதும், பையன் தொண்டனாவதும், கடைமனிதன் கல்வித் தந்தை ஆவதும் சிலரின் வாழ்க்கைப் பயணத்தில் வெளிப்பட்ட வெளிச்சங்கள். இந்த அடைமொழிகள் அவர்களைப் பற்றிய ஒரு சில உண்மைகள். இன்று இயேசு உருமாற்றம் அடைகின்றார். இந்த உருமாற்றம் மாறுவேடம் அல்லது வெளிவேடத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மாறுவேடம் உண்மையான ஒன்றைத் திரையிட்டு மறைக்கின்றது. ஆனால் உருமாற்றத்தில் இயேசுவின் உள்மை மேலெழுந்து நிற்கின்றது. இறப்பிற்குப்பின் கிடைக்கப்போதும் மகிமையான நிலையை தன் மூன்று சீடர்களுக்கு சுட்டிக்காட்டி அவர்களை விண்ணகப் பேரின்பத்தின் முதல்படி வரை அழைத்து வந்து அனுபவிக்க வைக்கின்றார் இயேசு.

சகோ. ஜேம்ஸ் கிம்டன், அன்பு தாத்தாவாக உருமாறல் இங்கிலாந்தில் 1925 பிறந்து புனித தெலசால் சபையில் நுழைந்து இலங்கையில்தன் பணியைத் துவங்கி பின் தமிழகத்தில்வேரூன்றி, நாகமலை பாய்ஸ் டவுன்,கெங்குவார்பட்டி பாய்ஸ் கிராமம், ஜி.கல்லுப் பட்டி  அடையமுடியாதவர்களை அடைதல்‘ என்ற நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய தனியொருவர் சகோ. ஜேம்ஸ் கிம்டன். தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் அன்னைத் தெரசா அவர்.  அவர் செய்யாத பணியில்லை. அவரிட

மிருந்து உதவிபெறாத ஆள்கள் இல்லை. அவரது பாதம் படாத வீதியோ வீடோ இல்லை. அவரைக் கையெடுத்துக் கும்பிடாத கரங்களில்லை. அவர் தொட்டுத் தூக்காத அனாதைகள் இல்லை. தொழுநோய், போலியோ, காசநோய் போன்றவற்றை இந்தப் பகுதியில் இருந்து துரத்தியடித்த பெருமை அவரைச் சாரும். 65 ஆண்டுகள் நீடித்த இந்த பிறரன்பு பணியின் பலனை இலட்சக்கணக்கான மக்கள் அறுவடை செய்துள்ளனர். எனவே, இங்கு எங்கு பார்த்தாலும்‚ தாத்தாவின்‘ எக்காளம். இவரின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் நம் தலையே சுற்றிவிடும். அந்த தனியொருவன் கட்டிக்கொடுத்துள்ள வீடுகளின் எண்ணிக்கை மட்டும் 8800. கட்டிக்கொடுத்த அரசு பள்ளிகள் மட்டும் 100க்கும் மேல். அவர் அமைத்துக் கொடுத்துள்ள ஆழ்குழாய் கிணறுகள் 2500க்கும் மேல்; இத்துடன் நீர் நிலைகள் வேறு. நான்கு பள்ளிகள், எல்லாவசதிகளும் கொண்ட நான்கு குழந்தை கிராமங்கள், 8 தங்கும் விடுதிகள், 8 பால்வாடிகள், 1 மருத்துவமனை, 3 நடமாடும் மருந்தகங் கள், 3 நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள், 3 நடமாடும் தையல் பள்ளிகள், 129 பெண்கள் சுய உதவிக்குழுக்கள், எச்.ஐ.வி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்கள் குடும்ப பராமரிப்பு, 11 மாலைநேரப் படிப்பகங்கள், முதியோர்

உதவித்தொகை, கல்வி உதவித்தொகை... என்று அவரது பேரரசு பரந்துவிரிந்து கிடக்கின்றது. பிறப்புமுதல் இறப்புவரை ஏழைகளுக்குத் தேவையான அனைத்தும் இங்கு இலவசம். சுருக்கமாக, அன்பு செய்வதில் யாவே கடவுள், குற்றம் பொறுப்பதில் இயேசு கிறிஸ்து. மன்னிப்பதில் மகான். கற்றுத் தருவதில் அவர் ஆசிரியர், புரிந்து செயலாற்றுவதில் சாலமோன் அரசன், தியானத்தில் புத்தன், அள்ளிக்கொடுப்பதில் பாரிவள்ளல், மக்கள் தன்னிறைவு பெறுவதில் ஒரு குட்டி எம்ஜிஆர், ஏழைகளை அரவணைப்பதில் ஓர் அன்னைத் தெரசா, சொன்னதை நிறைவேற்றும் சுனாமி, முகம் பார்த்து தீர்ப்பிடாது அகத்தின் ஆற்றலை உணரும் நீதிதேவன். வீதிகளில் வரும் மிட்டாய்கடை. அவரின் தலை முழுவதும் கண்கள். உடல் முழுவதும் இதயம். அவர் 2017 அக்டோபர் 5 இல் இறந்தபோது, 1,00,000 மேற்பட்ட மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இப்படியும் வாழலாம் என்று காட்டிய அவரின் இருகண் மூடியபோது இந்தப் பகுதியே அழுதது. சகோ. கிம்டனைத் தாத்தாவாக உயர்த்தியது பிறரன்பு பணியில் வெளிப்பட்ட அவரது கடவுள் குணங்களே.

செபம் தரும் ஜெயம்

                                விவிலியத்தில், கடவுளும் மனிதனும் சந்தித்துக் கொள்ளும் இடம், வானமும் பூமியும் உரசிக்கொள்ளும் இடம் மலையாகும். மலையில் கடவுள் தம்மை வெளிப்படுத்துகின்றார் என்ற யூத இறையியல், நமது சிந்தனையிலிருந்து வேறுபட்டதல்ல. மலைகள் அருளின் நீரூற்றுகள் என்பது பல மதங்களின் போதனை. பல ஆறுகள் மலைகளில்தான் தோன்றுகின்றன. மறுநாள் இயேசுவும் அவரின் சீடர்களும் மலையிலிருந்து கீழே இறங்குவதால் (லூக் 9:37) இயேசு அந்த நாள் முழுவதையும் செபத்தில் கழித்திருக்க வாய்ப்புண்டு. செபத்தில் விண்ணை நோக்கி எண்ணங்கள் உயர்த்துகின்றார். உலகில் இருளைப்போக்க வந்தவரின் பிரகாசமான உள்ளம் பிரகாச மான முகத்தில் வெளிப்படுகின்றது. மோசே சீனாய் மலையில் இருந்து இறங்கும்போது அவரது முகம் ஒளி வீசியது (விப 34:29). உண்மையான செபம் நம்மை உலகப் பற்றுக்களிலிருந்து விடுதலை கொடுத்து மேலுலகில் உள்ளவற்றை நாடச் செய்கின்றது என்று இரண்டாம் வாசகம் கூறுகின்றது.

புதிய ஏற்பாடும் பழைய எற்பாடும் ஒன்றாதல்திருமுழுக்கில் தான் தொடங்கிய பிறரன்புப்பணியை முடித்துவிட்டு எருசலேம் செல்ல விருக்கும் இயேசுவுடன், தாபோர் மலையில் மோசேவும் எலியாவும் எருசலேமில் அவருக்காகக் காத்திருக்கும் சிலுவைகள், கொடுமைகள், இறப்பு, உயிர்ப்பு பற்றி உரையாடுகின்றனர். மோசேதிருச்சட்டங்களின் நிறைவு. எலியா இறைவாக்கு, களின் நிறைவு. இறைவாக்கும் திருச்சட்டமும் இயேசுவில் நிறைவு நிலையை எட்டுகின்றன. படைப்பின்போதே கடவுள் முன்மொழிந்த, மோசேவும் எலியாவும் வழிமொழிந்த மீட்புத் திட்டம் இயேசுவில் விரைவில் நிறைவேறப் போகின்றது. சாவுக்குப்பின் முடிவில்லா பேரின்பத்தின் முன்சுவையை உணர்த்தும் வண்ணம் அவரின் உடை வெண்மையாய் ஒளி வீசுகின்றது. இவை அனைத்தையும் நேரடியாகக் கண்டு அனுபவிக்கும் பேறு பெறும் மூன்று சீடர்களும், இயேசு தம் பாடுகளுக்குப்பின் அடையவிருக்கும் மகிமையையும், அதனால் அவர்களுக்கும் (உலகிற்கும்) கிடைக்கும் மீட்பையும் புரிந்துகொண்டு இயேசுவுடன் தொடர்ந்து கல்வாரிப் பாதையில் உடன் நடக்க வேண்டும். அவற்றின்

வழியாகத்தான் அவரும் சீடர்களும் மகிமையடைய முடியும் என்பதையும் ஏற்கனவே சீடர்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டார்: என்னைப் பின்பற்ற விரும் பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்... (லூக் 9:23தொ). சிலுவை என்பது இவ்விடத்தில் (இவ்வுலக வாழ்வில்)

பிறர் நல்வாழ்வுக்காக நாம் மேற்கொள்ளும், நாட்டின் நன்மைக்காக தலைவர்கள் மேற்கொள்ளும், கொல்கத்தா வீதிகளின் கேட்பாரற்றுக்கிடந்த குழந்தை களைக் காக்க அன்னைத் தெரசா மேற்கொண்ட, இந்திய விடுதலைக்கு காந்தி மேற்கொண்ட துன்பங்களைக் குறிக்கின்றது.

கூடாரமும் மேகமும்

கடவுளின் பிரசன்னத்தை முழுமையாக அனுபவித்தமையாலும் மோசே மற்றும் எலியாவின் பிரசன்னம் தொடர்ந்து பூமியில் தங்க வேண்டும் என்பதாலும் பேதுரு மூன்று கூடாரங்கள் அமைக்க விரும்புகின்றார். பழைய ஏற்பாட்டில் சந்திப்புக் கூடாரத்தின் கீழ் கடவுளின் பிரசன்னமான உடன் படிக்கை பெட்டகம் வைக்கப்பட்டிருந்தது. கூடாரம் மனிதர் கையால் செய்யப்பட்டது. இங்கு மேகம் அவர்கள் மேல் நிழலிடுகின்றது. எங்குசென்றாலும் அவர்களை வழிநடத்தும் கடவுளின் பிரசன்னமான மேகம் (விப 40:34,35, 1 அர 8:10) அவர்களைவிட்டு என்றும் விலகாது. இந்தக் கடவுளின் உடனிருப்பு துன்பத்தை முழுமையாக விலக்கிவிடுவதில்லை. மாறாக, அது துன்பத்தைத் தாங்கும் சக்தி தருகின்றது. ஆனால், இயேசுவுடன் சீடர்கள் துன்புற்ற பின்புதான் இந்த மகிமை அவர்களுக்குக் கிடைக்கும். யோவான் நற்செய்தியில் இயேசு சிலுவையில் உயர்த்தப்படுவதும் விண்ணகத்திற்கு உயர்த்தப்படுவதும் இரு வேறுபட்ட செயல்கள் அல்ல. ஆகவே, இயேசு மலையிலிருந்து கீழே இறங்க அவர்களைப் பணிக்கின்றார். பெரிய வெள்ளி இன்றி உயிர்ப்பு ஞாயிறு இல்லை. இறக்காமல் யாரும் உயிர்க்க முடியாது. அவர்கள் தலையில் முள்முடி ஏறினால்தான் அவர்களுக்கு வெற்றிக்கீரீடம் கிடைக்கும். அதையே கடவுள் விண்ணிலிருந்து ... இவருக்குச் செவிசாயுங்கள்“ என்று கூறுகின்றார். இயேசுவின் பாதை பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்ட பாதையல்ல. ரோஜா மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட பூப்பாதையும் அல்ல. கல்-முள் நிறைந்த கரடு-முரடான சிலுவைப் பாதை. இயேசு மட்டுமல்ல மோசேவும் எலியாவும் கடினமான பாதையில் வழிநடந்துதான் தங்களின் மகிமை நிலையை அடைந்தனர்.

திருத்தூதர்களுக்குள் மூவேந்தர்கள்

இந்த தாபோர் மலை அனுபவம் மூன்று சீடர்களுக்கான சிறப்புப் படிப்பினைபோல் தென்

படுகின்றது. இப்போதும் யாயிர் மகளை உயிர்ப்பிக்கும்

போதும் இந்த மூவரும் இயேசுவுடன் இருக்கின்றனர் (மாற் 5:37). இவை இரண்டும் மண்ணகத்தில் நடக்கும் விண்ணைச் சார்ந்த நிகழ்வுகள். இந்த மூவரையும் இயேசு அழைத்துச் செல்வது அவர்கள் மேலுள்ள சிறப்பான அன்பால் அல்ல. மாறாக இந்த மூவரும் இயேசுவைப் பார்த்து சவால்விட்டவர்கள். பேதுரு இயேசுவோடு உயிரையும் இழக்கத் தயார் என்று உறுதியளித்தார் (மாற் 14:31). யோவானும் யாக்கோபுவும் அவரது வேதனை என்ற கிண்ணத்தில் குடிக்க வாக்களித்தனர் (மாற் 10:39). ஆனால் இயேசு கெத்சமனியில் துன்புற்றபோது அவர்கள் மூவரும் தூங்கிக்கொண்டிருந்தனர் (மாற் 14:32). இயேசுவின் உருமாற்றம் உணர்த்தும் உண்மையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமையால், இயேசு கைதுசெய்யப்பட்டபின் தப்பித்து ஓடிவிடு கின்றனர். ஆனால் உயிர்த்த இயேசுவைக் கண்ட பின் இந்த உருமாற்றம் கற்றுத்தரும் உயரிய ஞானத்தைப் பற்றிக்கொள்கின்றனர்.

உருமாற்றம் - உயிர்ப்பின் முன்னோட்டம்

ரெய்மென்ட் மூடி என்பவர் தான் எழுதிய இறப்புக்குப்பின் வரும் வாழ்வு  என்ற நூலில், மயக்க நிலையில் இறந்துவிட்டனர் என்று கைவிடப்பட்டு மீண்டும் இயல்புநிலைக்குத் திருப்பியவர்களைச் சந்தித்து, அவர்களின் மயக்க நிலை அனுபவங்களைக் கேட்டுள்ளார். அவர்களுள் பெரும்பாலானவர்கள் இருளான பெரிய குகையைத் தாண்டி ஒளிமயமான பிரகாசம் நிறைந்த ஏகாந்தநிலையில் இருந்ததாக கூறியுள்ளனர். அங்கே இயேசுவையும் மூதாதையர்களையும் கண்டு தரிசித்ததாகச் சான்று பகர்ந்துள்ளனர். எனவே ரெய்மென்ட மூடி தனது மருத்துவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு உயிர்ப்பு என்பது முற்றிலும் உண்மை என்று போதிக்கத் தொடங்கினார். இறப்பிற்கு பின் வருகின்ற மகிமையான வாழ்வையே தன் சீடர்களுக்கு இயேசு காட்டுகின்றார்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம். வாடை போல தன்னைத் தந்து தியாகியாகலாம். உருகியோடும் மெழுகைப்போல ஒளியை வீசலாம்... என்கின்றது திரைப்படபாடல் ஒன்று. இவ்வாறு மனிதனின் உள்மை வெளிப்பட்டு அவரின் உண்மையான உருவத்தை அடையாளம் காட்டிவிடுகின்றது. இயேசு தம்முள் இருந்த கடவுள் குணத்தை பல இடங்களில் வெளிப்படுத்தி நிற்கின்றார். சிலுவையின்றி (தியாக வாழ்வின்றி) விண்ணகம் என்ற நம் தாய்நாட்டை நாம் அடைய முடியாது என்று இரண்டாம் வாசகம் கூறுகின்றது. விதைப்பதற்காக நிலத்தை உழுவதுபோல் மனிதன் தன் உள்ளத்தை உழ வேண்டும். பிரகாசிக்க தங்கம் தீயில் சுடப்பட வேண்டும். பலன்தர கோதுமை மணிமடிய வேண்டும். மண்மீது சிலையாகும் கல்; சம்மட்டி அடிகளைத் தாங்க வேண்டும். பூமியில் வாழும்போதே மனிதன் முழு மனிதனாக வேண்டும். மனித மதிப்பீடுகளின் நிறைவே புனிதம். இன்று மனிதன் சிங்கமாகி மற்றவர்களைக் கடித்துத் துன்புறுத்து கின்றான். நரியாகி மற்றவர்களை ஏமாற்றுகின்றான். பாம்பாகி மற்றவர்களைக் கொத்தி அதில் குளிர் காய்கின்றான். ஆனால் மனிதன் மனிதனாக மட்டும் மாறவில்லை என்ற தாறுமாறான தத்துவத்திற்கு முடிவுகட்டுவோம்.

 

Comment