No icon

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு

நற்செய்தி அறிவிப்பில் பங்கெடுக்கும் உலகம்

மத்தேயு, மாற்கு போல் ஏற்கெனவே 12 திருத்தூதர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்புவதைப் பற்றிப் பேசிய லூக்கா (லூக் 9:1தொ), இயேசு 72 பேர்களை அனுப்புவது குறித்து இன்றைய நற்செய்தியில் பேசுகின்றார். சில ஏடுகள் 72 ஐ 70 என்று குறிப்பிடுகின்றன. 72 என்ற எண்ணை ‘அனைவரும்’ என்று அடையாளமாகப் பொருள்கொள்வதே பொருத்தமானது (விப 18:21, 24:1, எண் 11:16). தொநூ 10 இன் அடிப்படையில் பூமியில் 70 வகையான இனத்தவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. எனவே, பூமியின் மேல்பரப்பில் வாழும் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் நற்செய்தியை அறிவிக்கும் கருவியாக அனுப்பப்படுகின்றான். தன்னகத்தே உயிருள்ள (உரோ 1:16) இந்த வார்த்தைகளைக் கேட்போரால் அறிவிக்காமல் இருக்க இயலாது (1 கொரி 9:16).
இயேசுவைப் பின்பற்றுபவன் (னளைஉiயீடநள) அதை அறிவிக்கும் திருத்தூதனாக வேண்டும் ஹயீடிளவநட - அனுப்பப்பட்டவன்). "உலகின் கடையெல்லைவரை நற்செய்தி அறிவித்து" (திப 1:8), ஆதாமின் சந்ததி அனைத்தையும் கடவுளிடம் கரை சேர்க்க வேண்டும் என்ற தம் நோக்கத்தை லூக்கா ‘அறுவடையோ மிகுதி’ என்ற வாக்கியத்தில் சுருக்குகின்றார். இயேசு மற்றும் பன்னிரெண்டு சீடர்களின் பணியில் அறுவடை துவங்கிவிட்டது. ஆனால் அது இன்னும் தன்னிறைவு நிலையை எட்டவில்லை. எனவே, முதல் அனுப்புதலைத் தொடர்ந்து இரண்டாம் அனுப்புதல் நிகழ்கின்றது. உலகத்திற்கு அடித்தளமிட்டபோது துவங்கிய இந்த அனுப்புதல் அறுவடை முடியும்வரை தொடரும் என்ற சிந்தனை லூக்கா நற்செய்தியாளர் எழுதிய திருத்தூதர்கள் பணிகள் நூலில் இழையோடுகின்றது. தொடக்கத் திரு அவை அனைத்துக் கிறிஸ்தவர்களையும் திருத்தூதர்கள் என்றே அழைத்தது (திப 6:7, 9:26, 14:21-22). யூதர்களுக்கு நற்செய்தி எழுதிய மத்தேயு (மத் 10:6) எல்லா இனத்தாரும் சீடராக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் (மத் 28:19). நற்குணங்களின் நாற்றங்கால்களாக இருக்கும் அனைவரும் (மற்ற மதத்தாரும்) கிறிஸ்துவின் ஒளியிலேயே செயல்படுகின்றனர் என்பது திருஅவையின் போதனையாகும். 
சவால் நிறைந்த பணி
இயேசு இயக்கத்தின் பல கோட்பாடுகள் அன்றைய சமுதாயத்திற்கு முற்றிலும் புதியவை. சாத்தானின் சதிராட்டங்களுக்குப் பலிகடாவாகிக் கிடந்த சமுதாயத்தை (லூக் 10:17-18) விடியலின் வீதிகளுக்கு இழுத்து வருவது கடினமான செயலாகும். பரிசேயர்களின் மரபுகள் பலரைப் பாவிகளாகக் கருதிய வேளையில் சீடர்களும் இயேசுவைப்போல் பாவிகளுடன் உணவருந்தி அவர்களின் உரிமை வாழ்வுக்கு வித்திட வேண்டும். புனிதம் தனித்திருக்கின்றது என்று கருதப்பட்ட அந்தக் காலத்தில் முழுமையான விடுதலை தரும் (லூக் 4:18-20) ஈடுபாட்டு ஆன்மிகத்தில் இனிமை காண வேண்டும். குருவாகிய இயேசுவையே சிதைத்து சின்னாபின்னமாக்கிய சமூகம் சீடர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப் போவதில்லை. எதிப்புகள் மட்டுமே எஞ்சியிருக்கும் வரலாற்றுச் சூழலில் நற்செய்தி நாற்று நட்டு பலன் தரும்வரை பக்கத்தில் இருந்து பாதுகாப்பது எளிமையான செயல் அல்ல. நற்செய்தி அறிவிப்புப் பணி வெற்று அரசியல் பரப்புரையிலிருந்து வேறுபட்டது. மாறாக அது சவால்களின் சங்கமம் என்பதைச் சுட்டிக்காட்டவே “ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போல்” என்ற உருவகம் இடம்பெறுகின்றது. சீடன் தாம் அறிவிக்கும் நற்செய்தியோடு தம்மையே ஐக்கியப்படுத்திக்கொள்கின்றார். வாய்ச் சொல்லில் மட்டும் வீரன் என்ற பழி அவன் பங்காகிவிடக்கூடாது. நற்செய்திப் பணியில் தம் வாழ்வு முழுவதும் போராட்டக் களமானதை பவுல் 2 கொரிந்தியருக்கு எழுதிய  திருமுகத்தில் மட்டும் நான்குமுறை குறிப்பிடுகின்றார் (4:7-10, 6:3-10,
11:21-30, 12:7-10).
எந்தக் கடினமான சூழலிலும் கடவுள் ஒப்படைத்த பணியை விட்டுவிலகாத பேராற்றல் அவரிடம் கொட்டிக் கிடந்தது. எரோது அக்கிரிப்பா முன் விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது, தாம் அறிவிக்கும் கடவுள், அக்கிரிப்பாவின் தாய் மொழியாகிய எபிரேயத்தில் பேசினார் (திப 26:14) என்று சாதூர்யமாக அவரை நம்ப வைத்து தண்டனையிலிருந்து தப்பியது மட்டுமின்றி, அவரையே மனமாற்றம் செய்ய முயற்சித்தார் (திப. 26:27). 
பணியில் கடவுள் தரும் உயிராற்றல்
எந்தச் சூழலிலும் கடவுள் நம்பிக்கையாளர் களைக் கைவிடுவது இல்லை. இஸ்ரயேல் மக்களைச் சின்னாபின்னமாக்க முயன்ற அத்தனை வல்லரசுகளையும் தோற்கடித்து, தாய் தம் பிள்ளைகளைத் தேற்றுவதுபோல் அவர்களைத் தமதாக்குவார் என்பது இன்றைய முதல் வாசகத்தின் முதன்மையானச் செய்தியாகும். எசா 66:10 மட்டும் மகிழ்ச்சியுடன் தொடர்புடைய நான்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றது. பணியில் கிடைத்த வெற்றி தங்கள் இதயத்திற்கு இதமாக இருந்ததை சீடர்கள் அறிக்கையிடுகின்றனர் (10:17-20). அனுப்பப்பட்டோரை நிறைத்து நிற்கும் கடவுளின் ஆற்றலால் அனைத்தும் சாத்தியமானது. 10:17-20 வசனங்களுக்குள் ‘பேய்கள்’ ‘சாத்தான்’ ‘பகைவன்’ ‘தீய ஆவிகள்’ என்று பல்வேறு பெயர் களுடன் குறிப்பிட்டு இயேசுவின் பெயர் மொத்த தீமையையும் முழுமையாகத் தோற்கடித்தது என்று சீடர்கள் சான்று பகர்கின்றனர். லூக்கா நற்செய்தியில் சாத்தான் தூய ஆவிக்கு எதிர்மாறாகச் செயலாற்றுகின்றார். யூதாசுக்குள் புகுந்த சாத்தானே இயேசுவைக் காட்டிக்கொடுக்கத் தூண்டினான் (லூக் 22:3) என்று குற்றப்பழியை சாத்தான் மீது லூக்கா சுமத்துகின்றார். 
பணியில் முழுக்கவனம் செலுத்துதல்
அறுவடை குவிந்து கிடப்பதாலும் தேவையற்ற அல்லது நீண்ட உரையாடல்கள் நேரத்தைக் குடித்துவிடும் என்பதாலும் வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று இயேசு அறிவுறுத்துகின்றார். இதையே எலியா தம் வேலையாள் கேகசியிடம் கூறுகின்றார் (2 அர 4:29). ஒரு வீட்டில் கொடுப்பதை உண்டு குடியுங்கள் என்ற சிந்தனைக்குப் பின் ‘வீடுவீடாய் செல்ல வேண்டாம்’ என்பது இடம்பெறுவதால், உணவுக்காக வீடுவீடாய் அலைய வேண்டாம் என்று பொருள்கொள்வதே சிறப்பு. சோறு மட்டுமே சொர்க்கம் என்று அலைவது அவர்களின் முதன்மைப் பணியல்ல. எஸ்னீயர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் தங்கியிருந்து அங்கு வந்த மக்களின் பசிபோக்குவதைத் தம் கடமையாகவே செய்தனர். 
கடவுளை மட்டுமே சார்ந்த வாழ்வு
நற்செய்தி அறிவிப்போர் நற்செய்தியால் வாழ்வதே நியாயமானது (மத் 10:10, லூக் 10:7). கடவுள் பணியாற்றுவோர் கூலிக்கு உரிமையுடைய வனாக இருப்பதால் (1 திமொ 5:18, 1 கொரி 9:7,14) அவர்கள் எதையும் உடன் எடுத்துச் செல்ல தேவையில்லை. கடவுளின் திருத்தூதர்கள் செய்த வேலைக்குப் பலன் எதிர்பார்க்கும் போர்வீரர்கள், விவசாயிகள், மேய்ப்பர்களைவிட எந்த வகையிலும் தரம் தாழ்ந்தவர்கள் அல்ல (1 கொரி 9:7).
இணைச்சட்ட நூல் போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டத் தடை விதிக்கின்றது (இச 25:4), அதாவது உழைக்கும் மாடுகளுக்கும் தங்களின் பசியைப் போக்கிக்கொள்ளும் உரிமை உண்டு. மற்ற பணிகளைவிட சிறந்த ஆன்மிகப் பணியில் அக்கறை கொள்வோரின் அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது நம்பிக்கைக் குழுமத்தின் கடமையாகும். ஆலயப் பணியாற்றும் யூதக் குருக்கள் பலிப் பொருள்களை பங்குகளிலிருந்து உண்ண தோரா அனுமதியளிக்கின்றது. அடையாமுடியாதவர்கள் அடையும் (ஆர்டியு) நிறுவனத்தைத் வத்தலக் குண்டுக்கு அருகில் ஜி. கல்லுப்பட்டியில் தோற்றுவித்து பல நற்பணிகளோடு அந்தப் பகுதி முழுவதையும் கல்வித் தொட்டிலாக்கிய தெலசால் சபை சகோதரர் ஜேம்ஸ் கிம்ப்டன், “கடவுளின் கண்காணிப்பு உண்மையானது, பார்க்கக்கூடியது, உள்ளார்ந்தது,
அனைவரும் பார்க்கும் வண்ணம் அது நிகழும். அது ஒவ்வொரு நாளும் செயலாற்றும் தன்மை வாய்ந்தது. ஆண்டவரின் அருள் செயல் இன்றி ஒரு நாளும் கடந்ததில்லை,” என்று எழுதியுள்ளார். கடவுளுக்கும் அவர் தம் மக்களுக்கும் உண்மையாகவே உழைப்போருக்கு அவரின் களஞ்சியம் எப்போதும் திறந்திருக்கும். இன்று மானுட சேவையாற்றும் பல நிறுவனங்கள் கடவுளின் அருளையே அடிப்படையாக வைத்துத் துவங்கப்பட்டன. 
அமைதி
‘எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’ என்று அமைதிக்கும் நிறைவுக்கும் ஏங்கும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. எருசலேம் அமைதியின் நகராகி பலர் ஒற்றுமையுடன் வாழ்வதை இன்றைய முதல் வாசகம் குறிப்பிடுகின்றது. விருத்தச்சேதனம் மற்றும் இனத்தின் பெயரால் ஏற்படும் பிளவுகள் இறையரசின் எதிர் மதிப்பீடுகள் என்பதை பவுல் குறிப்பிடுகின்றார். பிரிவினை மதில்களை இயேசு தம் தியாகப்பலியால் உடைத்த பின்னரும் (பிலி 2:15-17), துன்புறுத்துவோருக்கு ஆசி கூறாமலும், தீமைக்கு நன்மை செய்யாமலும் இருப்பது ஏற்புடையதன்று (உரோ 12:14-21). இயேசு தரும் அமைதியால் தம்மை நிறைத்துள்ள சீடன் செல்லும் இடமெல்லாம் அமைதியின் தூதனாகின்றான். லூக்கா இந்த அமைதியை மீட்போடு (முழு மனித விடுதலையோடு) தொடர்புபடுத்துகின்றார் (1:79, 2:14,29, 7:50, 8:48, 12:51, 19:38). கடவுளாட்சியின் ஆசிகளை அள்ளித்தரும் இந்த அமைதி மற்றவர்களின் உள்ளத்தில் நிறைவை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வுக்குப் பொருள் தரும். ‘அமைதி விரும்புவோர்’ என்பது உலகை நோக்கி வந்துகொண்டிருக்கும் மீட்புக்காகத் திறந்த மனதுடன் தயாராக இருக்கும் மனிதர்களைக் குறிக்கின்றது (சிமியோன்: லூக் 2:25,38, பவுல், திப 16:13-15). எலியாவின் ஆவி எலிசாவின் மீது வந்து தங்கியதுபோல் (2 அர 2:25, எண் 11:25), அமைதியை விரும்புவோருக்கே அது நிறைபலன் தரும். 
அடக்குமுறையாலும் கொடுமைகளாலும் மற்றவர்களை மௌனிக்கும் ஆயுதக் கலாச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்ற சித்தாந்தத்தில் இயேசு தாம் கைது செய்யப்படும் நிலையிலும் (லூக் 22:49-51) தெளிவாக இருந்தார். அணுசக்தியைக் கண்டுபிடித்த அறிஞர்களுக்குத் தம் கண்டுபிடிப்பு இவ்வாறு அழிவுக்காகப் பயன்படுகின்றது என்பது தெரிந்தால், அடுத்த பிறவியில் கட்டாயம் அறிவியல் அறிஞர்களாகப் பிறக்கமாட்டார்கள். வன்முறையின் வழிகளைத் தடுத்து நிறுத்தி, திருஅவை 2000 ஆண்டுகளாக அமைதி வழியில் அன்புப் பணியாற்றி சரித்திரம் படைத்துள்ளது. போலந்து சோவியத் ரஷ்யாவின் ஆளுகையிலிருந்து சுதந்திரமாக செயல்பட முற்பட்டபோது ரஷ்யா அதைத் தாக்க முயன்றது. திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அன்றைய அதிபர் மிக்கேல் கார்ப்பர்சேவ் அவர்களுக்கு மடல் எழுதி, போரைத் தடுத்து நிறுத்தினார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் போர் எழும் நேரம் நெருங்கியபோது, உரோமையில் அனைத்துக் குருக்களையும் துறவறத்தாரையும் செபத்திற்கு அழைத்ததோடு, ஜி8 தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி திருத்தந்தை பிரான்சிஸ் போரைத் தடுத்தார். சூடான் நாடுகளைச் சீரழிக்கும் போரைத் தடுக்கும் நோக்குடன் அந்த அதிபர்களின் காலில் விழுந்து அமைதிக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்று போப் பிரான்சிஸ் கூறியது நாம் அறிந்ததே. 
குணப்படுத்துதல்
போதனையும் குணப்படுத்துவதும் ஒரு தாய் பிள்ளைகள். லூக் 13:10-17, 14:1-6, 17:11-19 போன்ற குணப்படுத்தல்களுக்குப் பின்னரே கடவுளரசு பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. குணப்படுத்துதல் என்ற பொருளுடைய தெரப்பெயோ என்ற கிரேக்கச்சொல் அன்புடன் பணியாற்றுவதுடன் தொடர்புடையது. அன்று நோயாளிகளாக கருதப்பட்ட, ஆற்றல் இழந்தோர், நெருக்கப்பட்டோர், உரிமை பறிக்கப்பட்டோர், ஏழைகள், சமுதாய அந்தஸ்தை இழந்த அனைவரையும் உரிமைக் குடிமக்களாக்குவது சீடனின் கடமையாகும் (மத் 10:7-8).
தங்கள் பணியின்போது தீமையின் மொத்த உருவமாகிய சாத்தான் வீழ்ந்து அழிந்ததைச் சீடர்கள் கண்டு சான்று பகர்கின்றனர்.  
நற்செய்திப் பணி இன்று!
இன்றைய நற்செய்தியில் சீடர்களை உருவாக்க இயேசு தம் சீடர்களை அனுப்பி வைக்கின்றார். இன்றைய கண்டுபிடிப்புகள் மனிதன் வெளிப்புறத் தேவைகளை நிறைவுசெய்தாலும், உள்ளத்தில் வெற்றிடம் நிறைந்துள்ளது. கரம்பிடித்துத் தூக்க கடவுளின் மனிதர்கள் வருவர் என்று ஏங்கும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கின்றது. பொருள்கள் கொடுக்காத நிறைவை அருள் கொடுக்கும் என்று பலர் செபக்கூடங்களை நோக்கி நகரத் துவங்கிவிட்டனர். நன்மைத்தனத்தின் பாதையை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டே அவர்கள் முன்செல்வது சீடர்களின் பணியாகின்றது. மற்றவர்கள் நமது உள்ளத்தில் நட்டு வைத்த நற்செய்தி விதையை மற்றவர்களின் உள்ளத்தில் நடுவது நமது கடமையாகும். 
இன்று நாம் இயேசுவின் ரசிகர்களா? பக்தர்களா? பின்பற்றுபவர்களா? திருத்தூதர்களா? என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். இயேசுவின் ரசிகன் அவரைப் பார்த்து அதிசயிக்கின்றார், பெருமை கொள்கின்றார் அவரைப் போதிக்கின்றார். அதன்பின் தம் பழைய வாழ்வுக்குத் திரும்பி விடுகின்றார். இயேசுவின் பக்தன், ரசிகன் செய்யும் வேலைகளைச் செய்வதோடு பக்தி ரசம் பருகுகின்றான், திருப்பலி நிறைவேற்றுகின்றான், நவநாள் நடத்தி திருவிழாக்கள் கொண்டாடுகின்றான். அத்தோடு நிறுத்திக் கொள்கின்றான். இயேசுவின் சீடன், பக்தன் என்ற நிலையைத் தாண்டி, இயேசு சென்ற இடமெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து சென்று, இயேசு செய்த நற்செயல்களில் ஈடுபடுகின்றான். சீடன் அனைத்தையும் இயேசுவிடமிருந்து கற்றபின் நற்செய்தி அறிவிக்கும் திருத்தூதனாகின்றான். தாமஸ் மெர்டன் கூறுவதுபோல் இயேசுவின் கால்தடங்களில் அவரைப் பின்பற்றுபவர் அவரின் உணர்வுகள், ஏக்கங்கள், நோக்கங்களை நோக்கி ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் தமதாக்கிக் கொள்ள வேண்டும்.
 

Comment