No icon

பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

சாதனையாளர்களின் மறுபக்கம்

தொநூ 18:20-32 கொலோ 2:12-14 லூக் 11:1-13

லூக்கா நற்செய்திக்கு ‘இறைவேண்டலின் நற்செய்தி’ என்ற சிறப்பு அடைமொழியுண்டு. இயேசு செபித்தார் என்று லூக்கா பத்துமுறை வெளிப்படை யாகவே குறிப்பிடுகின்றார். தமது வாழ்வின் முக்கியக் காலகட்டங்களில் தம் பணியில் தெளிவு பெறவும், தம் வாழ்வுக்கும் பணிக்கும் ஊட்டம் பெறவும், இயேசு செபத்தை நம்பியிருந்தார். இயேசு கடவுளை அழைக்க அரமேய மொழியில் ‘அபா’ (ஹbயெ) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஒரு குழந்தை தம் தந்தையை உள்ளார்ந்த அன்புடனும் பாசப்பிணைப்புடனும் அழைக்கும் வார்த்தை இதுவாகும். எந்தவொரு சாதனை யாளனுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.
நாம் அவர்களை வெற்றி வீரர்களாகவும் சாதனைச் சிற்பிகளாகவும் மகாத்மாக்களாக வும் வள்ளல் பெருமான்களாகவும் இசைப்புயல்களாகவும் காண்கின்றோம். ஆனால் நமது புறக்கண்களுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும் பக்கம் ஒன்று உண்டு. அதாவது, அவர்கள் அனைவருமே செப மனிதர்கள். மனிதன் தம் சொந்த ஆற்றலைக் கொண்டு ஒரு சில செயல்களைச் சாதிக்கலாம். ஆனால் செயற்கரிய செயல்கள் செய்யும் வல்லமை கடவுளிடமிருந்தே வரும் (2 கொரி 4:8)
என்பதை அவர்கள் தங்கள் வாழ்வில் உய்த்துணர்ந்தவர்கள். அவர்கள் ஒவ் வொரு நாளும் சில மணித்துளிகள் தங்களுக்கே உரித்தான முறையில் கடவுளுடன் கலந்துரையாடினர். இறைவேண்டலே அவர்களது வெற்றியின் இரகசியம் என்று அவர்களே ஒத்துக்கொள் கின்றனர். இந்திய விடுதலைப் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்ட வேளையிலும் காந்தி ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரமாவது செபித்ததாக தமது வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.  
இயேசுவைக் காணவரும் பக்தர்
ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் ஒருவர் கோவிலுக்கு வந்து செல்வதைத் தமது அறை சன்னல் வழியாகப் பங்குதந்தை கவனித்தார். ஒருவேளை கோவிலில் உள்ள பொருட்களைத் திருடும் நோக்குடன் அவர் வருகின்றாரோ? என்ற சந்தேகம் வலுத்தமையால், தமது கோவில் பிள்ளையை அழைத்து அவரைக் கண்காணிக்க வேண்டினார். கோவில்பிள்ளை அவரிடம் நேரடியாக வெளிப்படையாகவே கேட்டபோது அவர் செபிக்க வருவதாகச் சொன்னார். பீடத்தின் வரைக்கும் சென்று திரும்பி விடுகின்றீர்களே, இது என்ன செபம்? என்று கோவில்பிள்ளை வினவ, அவரோ, “எனக்கு நீண்ட செபம் செய்யத் தெரியாது. எனவே,  நான் பீடத்தின்முன் வந்து நின்று, இயேசுவே இதோ சைமன் உன்னைக் காண வந்தேன் என்று சொல்கின்றேன். கடவுள் என் செபத்தை உண்மையாகவே கேட்கின்றார் என்பதை உணர்கின்றேன்” என்றார். சில நாட்களுக்குப்பின் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அத்தனை வேதனைகளுடன் அவர் மகிழ்ச்சியாக இருந்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் வீழ்த்தியது. செவிலி ஒருவர் அவரிடம், “எப்படி இந்த வேதனையிலும் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது?” என்று வினவ, அவரோ, “என்னைத் தினமும் ஒருவர் சந்திக்க வருகின்றார்” என்று பதிலுரைத்தார். “செவிலி அப்படி யாரையும் நான் இதுவரைப் பார்க்கவில்லையே என்று வியப்புடன் கேட்க” அவரோ, “நான் உடல் நலத்துடன் வாழ்ந்தபோது தினமும் கோவிலுக்குச் சென்று, இயேசுவே இதோ சைமன் வந்துள்ளேன் என்று கூறிவிட்டு வருவேன். இப்போது இயேசு தினமும் மதியம் என் படுக்கைக்கு அருகில் வந்து, சைமன், இதோ இயேசு வந்துள்ளேன், நலமா என்று கேட்கின்றார்” என்று பதிலுரைத்தார். கடவுளின் பிரசன்னத்தை நம்முள்ளும், உலகம் முழுவதும் உணரும்போது நாம் என்றும் வெற்றி கொண்டவர்களாகவும் அமைதியானவர்களாகவும் இருப்போம்
என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகின்றது. கடவுள் அனுபவம் பெறாத மனிதர்களால்தான், வெறுப்பும் சண்டையும் போராட்டமும் அணுகுண்டுகளும் அதிகமாகின்றன. கடவுள் அனுபவம் பெற்ற அரசியல்வாதிகள் கண்ணியத்துடன் செயல்படுகின்றனர் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். 
முதல் வாசகம் காட்டும் செபத்தின் காரணிகள்
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் ஒரு நண்பனுடன் பேசுவது போலவே கடவுளுடன் உரையாடு கின்றார். தொடர்ந்த அவரின் வேண்டுதலின் காரணமாக, சோதோம், கொமோரா நகரங்களுக்குக் கிடைக்க விருந்த தீர்ப்பு நீக்கப்படுகின்றது. இந்த உரை யாடலில் செபத்திற்கான சில சிறப்பம் சங்களைக் காணலாம். 
1.    ஆபிரகாம் கடவுளுடன் தனித்திருக்கின்றார்: இந்த தவத்தனிமை உருவாக்கும், உயிர் கொடுக்கும். இதில் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளி குறையும். இங்கு வானம் வசப்படும். விண்ணக விருச்சங்கள் வெளிப்படும். இறைவாக்கினர்களுக்குப் பாலை
வனம் பள்ளிக்கூடமாகும். தமஸ்கு செல்லும் வழியில் மனமாற்றம் அடைந்தபின் பவுல் அரேபியா என்ற இடத்தில் மூன்று ஆண்டுகள் தனித்திருந்தார் (கலா 1:17-18). சவுல் பவுலாக மாற்றம் அடைவதில் இந்த தனிமையான நேரங்கள் சிறப்புப் பங்காற்றின. புனித அந்தோனியார் மோந்தே பவுலோ என்ற இடத்தில் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு துண்டு ரொட்டியுடனும், ஒரு டம்ளர் தண்ணீரோடும் குகைக்குச் சென்று மாலையில் துறவிகள் இல்லம் திரும்பியுள்ளார். தனிமையாகக் குகைக்குள் நுழைந்த அந்தோனியார் கடவுளோடு திரும்பினார் என்று அவரின் வரலாற்று ஆசிரியர் ரிகோல்டு குறிப் பிடுகின்றார். சிந்தனைகளைச் சீர்படுத்திக் கொள்ளவும் உள்ளம் உறுதி பெறவும் கடவுளுடன் செலவிடும் தனிமையான நேரங்கள் உதவிடும். 
2.    இது ஒரு நீண்ட செபமாகும். இந்த நிகழ்வு ஒரு பத்தியில் முடிந்துவிட்டாலும் ஆபிரகாம் நீண்ட நேரம் செபித்திருக்க வேண்டும். செபத்திற்குப் பொறுமையும் உழைப்பும் தொடர்ந்த முயற்சியும் விடாப்பிடியான நம்பிக்கையும் தேவைப்படுகின்றன. மனிதர்கள் சாதாரணமாக ஒரு பி.ஏ பட்டம் வாங்க குறைந்தது 15 ஆண்டுகள் உழைக்க வேண்டும். ஆனால் கடவுளிடமிருந்து வேண்டிய வரத்தைப் பெற்றுக்
கொள்ள சில மணி நேரங்கள் செபித்தால் மட்டும் போதுமா? என்பதை நாம் திரணாய்வு செய்ய வேண்டும். புனித அகுஸ்தின் மனமாற்றம் அடைய அவரது தாய் மோனிக்கா 17 ஆண்டுகள் செபித்துள்ளார். மானிட சமுதாயத்தில் ஒரு தீமை முழுமையாக அழிவதற்குச் சில தலைமுறைகள் ஆகின்றன. இன்றைய நற்செய்தியில், சாதாரண மனிதப்
பிறவியான தாயும் தந்தையும், தம் பிள்ளை களுக்கு வேண்டியதைக் கொடுக்கும்போது, முழுநிறைவாகிய கடவுள் தம் பிள்ளை
களுக்குத் தேவையான அனைத்தையும் அள்ளிக்கொடுப்பார் என்ற செய்தி அழுத்தம் பெறுகின்றது. விடாப்பிடியாய் கேட்கும் நண்பன் ஒருவனுக்குத் தொல்லை காரணமாக ஒருவர் கொடுப்பதுபோல், ‘மரத்தை வைத்தவன் கடவுள் தண்ணீர் ஊற்றும்வரைக்’ கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். விவிலியக் கடவுள் நாம் கேட்பதற்கு முன்பே நம் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவார். இருந்தாலும் கேட்பது நமது கடமையாகும். எபிரேய மொழியில் காரணம் மற்றும் விளைவு (ஊயரளந-நககநஉவ) வேறுபாடுகள் இல்லை. கடவுள் கேட்டால் கட்டாயம் பதில் கொடுப்பார். ஆகவேதான் நமது செபங்களில் ‘ஆண்டவரே எங்களை மன்றாட்டைக் கேட்டருளும்’ என்று வேண்டுகின்றோம். ‘ஆண்டவரே கேட்டுப் பதில் கொடு’ என்று யாரும் வேண்டுவதில்லை. கடவுளின் அருள் பெற இறை நம்பிக்கையுடன் விடாமுயற்சியும் தேவை. ஏழைக் கைம்பெண் தொடர்ந்து நீதி கேட்டுக்கொண்டு இருப்பதால் தலைவன் அவளுக்கு செவிமடுக்கின்றான் (லூக் 18:1-8). இடைவிடாது செபியுங்கள், என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காக கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே (1 தெச 5:17-18) என்ற பவுலின் அறிவுரை இங்கு நோக்கத்தக்கது.  செபமாலையில் மீண்டும் மீண்டும் கடவுளின் வார்த்தைகளை உச்சரிக்கும்போது அது நிறைவான செபம் ஆகின்றது. பரிசுத்த ஆவியின் செபக்கூட்டங்களில் மீண்டும் மீண்டும் கடவுளிடம் வேண்டி தங்களின் வரங்களை நம்பிக்கையாளர் பெற்றுக்கொள்கின்றனர். 
3.    இது ஒரு தாழ்ச்சி நிறைந்த செபமாகும். ஆபிரகாம் ‘தூசியும் சாம்பலுமான நான்’ என்று தமது தகுதியற்ற நிலையை ஒத்துக்கொண்டு (தொநூ 18:27) கடவுளிடம் வேண்டுகின்றார். கடவுளை நெருங்கிச் செல்லும் வேளையில் நாம் வலுவற்றவர்கள் என்பது நமக்குத் தெளிவாகும். எனக்கு இது கட்டாயம் வேண்டும் என்று நாம் கடவுளுக்குக் கட்டளை
இட இயலாது. கடவுளுடன் போட்டியிடுவது பேராபத்தில் போய் முடியும். இங்கு தாழ்ச்சி என்பது அடிமைத்தனமல்ல. எல்லாம் வல்ல கடவுளுடன் போட்டியிடாது அவரால் மட்டுமே அனைத்தும் முடியும் என்று ஏற்றுக் கொள்வதாகும். வெற்றுப்பாத்திரமாகிய நம்மை அவரால் முழுமையாக்க முடியும். அண்ட சராசரங்களைப் படைத்த கடவுளுக்குமுன் நாம் வெறும் சிறு துகளாக இருந்தாலும், அவர் நம்மைத் தம் கரங்களில் பொறித்து வைத்துள்ளார் (எசா 49:15).
4.    இது பொறுமையான செபமாகும். இந்தச் செபத்தில் கடவுள் தம்மைப் பொறுத்துக்
கொள்ள வேண்டும் என்று ஆபிரகாம் ஆறுமுறை (தொநூ 18:25,27,29,30,31,32) மன்றாடுகின்றார். ஒரு மகன் கடவுளாகிய தந்தையிடம் எதை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் கேட்கலாம் (எசா 7:11). ஆனால் காலம் கனியும் வரை அவன் காத்திருக்க வேண்டும். கடவுள் பொறுமைமிக்கவர். சினம்கொள்ளத் தாமதிப்பவர். ஆனால் உலக மக்கள் அனைவரையும் கண்காணிக்கும் கடவுள் உடனே நமது விண்ணப்பங்களை நிறை வேற்ற வேண்டிய அவசியமில்லை. விவசாயி மழை கேட்கின்றார். உப்பளம் வைத்திருப்பவன் மழை வேண்டாம் என்று மன்றாடுகின்றார். ஏழைகள் பணத்திற்காகவும், பணம்படைத்தோர் மன அமைதிக் காகவும் மன்றாடுகின்றனர். ஆனால், எல்லாவற்றையும் சரியான நேரத்தில் சரியான முறையில் கடவுள் செய்துமுடிப்பார். எனவேதான் “உம் விருப்பம் மண்ணில் நிறைவேறுக" என்று செபிக்கின்றோம். ஒரு குழந்தை தம் தந்தைமுன் காத்திருப்பதைப்போல் அவர்கள் காத்திருக்க வேண்டும். பணம் செலுத்தியவுடன் வேண்டிய பொருள்கள் கிடைக்கும் ஒரு தானிங்கிக் கருவியல்ல கடவுள். 
5.    அனைவருக்குமான செபம். ஆபிரகாம் தம் உறவினன் லோத்துவுக்காக மட்டுமல்ல. அந்த நகரில் வாழும் அனைவருக்காகவும் கடவுளிடம் மன்றாடுகின்றார். ’கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்’… என்று இயேசு வாக்களித்தாலும், பல நேரங்களில் நாம் கேட்பது கிடைப்பதில்லை. ஏனெனில் பெரும்பாலும் நாம் தவறாகக் கேட்கின்றோம். பல நேரங்களில் நமது செபம் சுய நலத்தின் சூதாட்டமாக உள்ளது. பிறர் நலம்பெற நாம் உள்ளம் உருகிச் செபிக்கும்போது கடவுளே முன்வந்து நமது தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகின்றார். இதையே, “அடுத்தவன் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம் பிள்ளை தானாகவே
வளரும்” என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். குழந்தைகள் மீன் கேட்கும்போது அவர் பாம்பைத் தர மாட்டார். கடவுள் தம் குழந்தைகளுக்கு மிகச்சிறப்பானதைச் செய்து முடிப்பார். விண்ணகத்தில் இருப்பவர் நம் அனை
வருக்கும் தந்தை. எனவே அனை வருடைய தேவைகளையும் நிறை வேற்றும் கடமை அவருக்கு உண்டு. 
6.    இறுதியில் ஆபிரகாமின் செபம் வெற்றி பெறுகின்றது. பத்து நல்லவர்களுக்காக அந்த நகர் அழிக்கப்படாது என்று கடவுள் உறுதியளிக்கின்றார். தொடர்ந்த வேண்டுதலுக்குக் கடவுள் பதில் தராமல் விடுவதில்லை என்று லூக்காவும் கூறுகின்றார். 
இறைவேண்டலின் வகைகள்
வார்த்தைகள் மட்டுமல்ல, பாடல்களும் இசையும் பல்வேறு உடல் அசைவுகளும் செபத்தின் வெளிப்பாடுகளேயாகும். செபம் நன்மையான வாழ்வுக்கு வழிகாட்டுகின்றது. நன்மைத்தனத்துடன் வாழ அழைப்பு விடுக்கின்றது. பல வார்த்தை களைப் பயன்படுத்து வதால் செபம் உண்மையாகிவிடும் என்று சொல் வதற்கில்லை. கடவுள் முன்பு அமைதியாக இருத்தல், கேட்டல், கடவுளைப் பேச அனுமதித்தல் எல்லாமே செபத்தின் வகைகள். அமைதியாக அமர்ந்திருக்கும் வேளைகளில் கடவுள் நம்மைப் பார்க்கின்றார். நாம் கடவுளைப் பார்க்கின்றோம். பல புனிதர்கள் கடவுளோடுத் தனித்திருந்த காலங்களில்தான் உண்மையான அறநெறியையும் ஆன்மிக வாழ்வையும் கற்றுக் கொண்டனர். சிலர் கையை விரித்து வானத்தை அண்ணார்ந்து பார்த்து செபிக்கின்றனர். சிலர் முழந்தாளிட்டு செபிக்கின்றனர். சிலர் தரையில் முகங்குப்புற விழுந்து செபிக்கின்றனர். ஆனால் ஒரு மின் தொழிலாளி “நான் மின்சார மரத்தில் மேலேறி தலைகீழாக தொங்கும் நேரத்தில் செபிக்கின்றேன் என்று கூறுகின்றார். பலர் தேவையின்போது மட்டும் கடவுளை நோக்கிக் கூக்குரல் எழுப்புகின்றனர். தேவைப்படும்போது மட்டும் பயன்படும் தாயத்துக் கடவுள் அல்ல. செபம் வாழ்வின் அன்றாட மூச்சாக வேண்டும். கடவுளின் வல்ல செயல்கள் நமது அன்றாடப் பேச்சாக வேண்டும்.

Comment