No icon

உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) - 21.03.2021

உலக தண்ணீர் தினம் (மார்ச் 22)

அருள்பணி. யா. ஜான் ரிச்சர்டு, அருள்கடல், சென்னை.

ஒரு நாள் தேநீர் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். அப்போது ஜோசியக்காரர் ஒருவர், “சாமி ஜோசியம் பார்க்கிறீங்களா?” என்று அங்கு நின்றுக் கொண்டிருந்த

ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது முப்பது வயது நிரம்பிய ராஜா என்பவர் விளையாட்டாக, “இந்தாங்கைய்யா என் கையபார்த்துச் சொல்லுங்கஎன்று தன் கையை நீட்டினார். ஜோசியக்காரர் பார்த்தார்,“சாமி, உங்க வாழ்க்கை சிறப்பா இருக்குது, இன்னும் நல்லா இருக்கும், ஆனால் ஒருசிக்கல், சரியா ஐம்பது வயசாகும் போது உங்களுக்குத் தண்ணியில கண்டம் இருக்கு, கொஞ்சம் பார்த்து இருங்கஎன்று சொன்னார்அதற்கு ராஜா,“அதற்கு வாய்ப்பே இல்ல, ஏன்னா எனக்கு ஐம்பது வயசாகும்போது தண்ணியே கண்டமாயிருக்கும்என்று சொல்ல அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிரிப்புமழையில் நனைந்தார்கள். ஆனால், அவர் விளையாட்டாகச் சொல்லிய வார்த்தைகள் விரைவில் நடந்துவிடுவதற்கான சூழல்கள் தினந்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் நாள் உலக தண்ணீர் தினத்தைக் கொண்டாடும் நாம், உலகில் வாழும் ஒவ்வொரு உயிரின் ஆதாரமான நீரை நாம் எங்கணம் செலவழிக்கிறோம்? நீர் வளத்தை எவ்வாறு பாதுகாத்துப் பராமரிக்கிறோம்? நீர் வளத்தைப் பெருக்க நாம் எடுக்கும் முன் னெடுப்புகள் எவை? என்ற கேள்விகளை நாம் எழுப்ப வேண்டிய நேரம் இது.

உலகம் 71 சதவிகிதம் தண்ணீராலும் 29 சதவிகிதம் நிலத்தாலும் சூழப்பட்டிருக்கிறது என்பது நாம் அறிந்ததே. 71 சதவிகிதம் நீரால் சூழப்பட்டிருந்தாலும் நம்முடைய பயன்பாட்டுக்கு ஏற்றதாய் இருக்கும் தூய்மையான நீரின் அளவுவெறும் 3 சதவிகிதம் மட்டுமே. அதிலும் 2 சதவிகிதம் பனிப்பாறைகளிலும் பனிக்குமிழ்களிலும், 0.7 சதவிகிதம் நிலத்தடி நீரிலும் கிடைக்கப்பெறின் வெறும் 0.3 சதவிகிதம் மட்டுமே மழை, மலை, ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் மூலம் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் அரிய வளமான மற்றும் செல்வமான நீர்; அரசால், அரசின் உதவியால் கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டப்பட்டு உறிஞ்சப்படுகிறது. ஆற்றோரங்களில் அல்லது நீர் வளம் அதிகம் உள்ள இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்துத் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க ஒரு நாளைக்குப் பலலட்சக்கணக்கான லிட்டர்கள் என்ற அளவில் ஆறுகளிலிருந்தும் மற்றும் நீர்நிலைகளிலிருந்தும் களவாடுவது கார்ப்பரேட்டு கயவர்களின் கல் நெஞ்சத்தைக் காட்டுகிறது.

ஒரு பனியன் தயாரிக்க 2700 லிட்டர் தண்ணீரும், ஒரு ஜோடி செருப்பு தயாரிக்க 16600 லிட்டர் தண்ணீரும, ஒரு கார் தயாரிக்க 4 லட்சம் லிட்டர் தண்ணீரும், ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றன. இது போன்று பல பொருட்கள் தயாரிக்க லட்சகணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றன. இந்தப்பொருட்கள் அனைத்தும் வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்தநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவையெல்லாம் வளர்ந்த நாடுகளால் தங்கள் நாட்டிலேயே தயாரிக்க முடியும் என்றாலும் அவர்கள் அப்படி செய்வதில்லை. ஏனென்றால், அவர்களுடைய நீர் வளம் குறைந்து போகும். அவர்களின் நீர் வளத்தைப் பாதுகாக்க வளர்ந்து வரும் நாடுகளில் குறிப்பாக, இந்திய நாட்டில் அரசியல் தலைவர்களின் பணஆசை மற்றும் சுயநலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நம் நாட்டின் நீர் வளத்தைக் குறைத்து நம் நாட்டை அழிக்க அவர்கள் எடுக்கும் ஒரு முயற்சியாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது. திருப்பூரில், சாயக் கழிவுகள் ஓடியே செத்துப்போன நொய்யல் ஆறே இதற்கு ஒரு சாட்சியாக திகழ்கிறது.

இப்படி நீரை தொழிற்சாலைகள் மூலம் சுரண்டுவது ஒரு பக்கம் இருந்தாலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனக் கழிவு ஆற்று நீரோடும் மற்ற நீர்நிலைகளோடும் கலப்பதால் நீரைப் பருகும் மக்களும் மாக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதையும், இறந்து போவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. இந்த இரசாயனம் கலந்தநீர், பயிர் நிலங்களில் கலப்பதால் பயிர்கள் பாதிக்கப்பட்டுக் குறைந்த விளைச்சலைத் தருவதோடு நிலத்தையும் மலடாக்குகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தான் நீர் வளத்தைச் சுரண்டி மக்களை வஞ்சிக்கிறது என்றால், நம் நாட்டுத் தலைவர்களும் அதில் சளைத்தவர்கள் அல்ல. அனைவருக்கும் பொதுவான நீரை விலைக்கு விற்பது மக்களை ஏமாற்றும் செயலாகத்தான் இருக்கிறது. விலைக்குக்கொடுக்க வேண்டிய பொருட்களை இலவசமாகக் கொடுப்பதும், பொருட்களை விலைக்கு விற்பதும் நலிவுற்றவர்களின் வலுவின்மையைப் பயன்படுத்தும் நயவஞ்சகர்களால் மட்டுமே இது சாத்தியம். ஏழைகள் எப்படியாவது சம்பாதித்துத் தண்ணீரை விலைக்கு வாங்கினாலும், கால்நடைகளும் விலங்குகளும் எங்கே போகும்? என்ற கேள்வி நம் ஒவ்வொருவரிலும் எழ வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ்நீர் அனைவருக்கும் பொதுவான ஓர் இயற்கை வளம்; அது அனைவருக்குமான உரிமை,” என்று கூறுகிறார்.

பண்டைய காலத்தில், தமிழ்நாட்டில் 34 நதிகளும், 39000 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளும் மற்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓடைகளும் பாய்ந்தோடின என்று சமூக ஆர்வலர் சுந்தரராஜன் கூறுவார். ஆனால் அவைகளில் பெரும்பாலும் இன்று வீடுகளாகவும், பேருந்து நிலையங்களாகவும் மற்றும் வணிக வளாகங்களாகவும் மாற்றப்பட்டிருப்பது மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் பின்புலமாக இருப்பது பல ஆயிரக்கணக்கான மற்றும் இலட்சக்கணக்கான லிட்டர் நீர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அத்தியாவசிய வளமான நீரை நாமும் விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நம் அன்றாட வாழ்க்கையில் நீரைச் சிக்கனமாக, தேவைக்கேற்ற அளவு பயன்படுத்த வேண்டும். நம்முடைய குடும்பங்களில், கல்வி நிறுவனங்களில், அலுவலகங்களில் மற்றும் சமுதாய அமைப்புகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் மற்ற நாடுகள் படும் துன்பத்தை எடுத்துக் கூற வேண்டும். நீர் வளத்தைப் பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் நாம் பங்கு கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் நாட்டின் நீர் வளத்தைச் சுரண்டி தனியார்மயப்படுத்தி, நீரை விற்பனைப் பொருளாக்கும் பன்னாட்டு நிறுவனங்களைச் சாடி அவர்களின் சதிகளை முறியடிக்க வேண்டும். ஒவ்வொருமுறையும் நீரைப் பயன்படுத்தும்போது கடும் தாகம் கொண்டவரின் மனநிலையைப் பெற்றிருந்தால், நீரை வீணடிப்பதை முற்றிலும் தவிர்க்க முடியும். நீர் வளத்தைப் பயன்படுத்துவதில் மறு சுழற்சி முறையைப் பயன்படுத்தினால் நீரை அதிகம் சேமிக்கமுடியும். இத்தகைய முயற்சிகளை எடுத்து நீர் வளத்தைப் பாதுகாத்துப் பெருக்குவது நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய தார்மீகக்கடமையாகும். இயற்கை வளங்கள் என்பது நம் முன்னோர்களிடமிருந்து பெற்ற சொத்து அல்ல. அதைத் தாறு மாறாகச் செலவழிப்பதற்கு! மாறாக, வருங்காலத் தலைமுறையிடமிருந்து பெற்றிருக்கும் கடன். ஆகவே, கண்ணியத்தோடு கடனைக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் நம்மிலே எப்பொழுதும் இருக்க வேண்டும். "நீரின்றி அமையாது உலகு" என்று திருவள்ளுவரும், "நீரின்றி அமையாது யாக்கை" என்று ஒளவையாரும், “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்என்று இளங்கோவடிகளும், உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்று புறநானூறும், “தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதேஎன்ற சொல் வழக்கும், உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் மட்டுமல்லாது அவ்வுயிர்கள் வாழத்தேவையான அனைத்தையும் தயாரிப்பதற்கு நீர் அவசியம் மற்றும் முக்கியம் என்ற சிந்தனையைத் தருவதோடு அத்தகைய சிறப்புக்குரிய நீர் வளத்தைப் பாதுகாத்து பராமரிக்க மற்றும் பெருக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. திருத்தந்தை பிரான்சிஸ்இறைவா உமக்கே புகழ்என்ற சுற்றுமடலில் இரண்டாவது பகுதி முழுவதும் நீரைப் பற்றி எழுதுகிறபோது நீர் வளத்தைப் பராமரிக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

நீரின் முக்கியத்துவத்தை உணரும் நாம், போதுமான நீரில்லாமல் மற்ற நாடுகள் படும் துயரங்களையும் புரிந்து கொண்டு நீரை மதித்துப் பராமரிப்போம் என்று இந்நன்னாளில் உறுதிப்பூண்டு நீர் என்னும் கொடையைக் கொடையாகவே வழங்கி வருங்காலத்தையும், வருங்கால

தலைமுறையினரையும் வளமாக்குவோம்.

Comment