No icon

மொசாம்பிக் ஆயருக்கு திருத்தந்தையின் ஆறுதல் தொலைப்பேசி அழைப்பு

மொசாம்பிக் நாட்டில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள காபோ டெல்காடோ  மாநிலத்தில் மேய்ப்புப்பணியாற்றும் பெம்பா மறைமாவட்ட ஆயர் லூயிஸ் பெர்னான்டோ லிஸ்போவா அவர் களை, எதிர்பாராத நேரத்தில், திருத் தந்தை  பிரான்சிஸ் தொலைப்பேசியில் அழைத்து, தன் ஒருமைப் பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.


திருத்தந்தையின் இந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து வத்திக்கான் செய்தித் துறையிடம் பகிர்ந்துகொண்ட ஆயர் லூயிஸ் பெர்னான்டோ லிஸ்போவா அவர்கள், ஆகஸ்ட் 18 ஆம் தேதி புதன்கிழமை காலை 11.29 மணிக்கு, திருத்தந்தை, தன்னை தொலைப்பேசியில் அழைத்து, காபோ டெல்காடோ வடபகுதி  மாநிலத்தில், மனிதாபி மான சூழல், மோசமடைந்து வருவது குறித்து தான் மிகவும் கவலையடைந் திருப்பதாகத் தெரிவித்தார் என்று கூறினார்.


திருத்தந்தையின் தொலைப்பேசி அழைப்பு, தனக்கு மிகுந்த ஆறுதலையும், உறுதியையும் கொடுத்தது எனவும், உதவி தேவைப்பட்டால், தயங்காமல் தன்னிடம் கேட்குமாறு திருத்தந்தை கூறியதாகவும், ஆயர் லூயிஸ் பெர்னான்டோ லிஸ்போவா அவர்கள் கூறினார்.


கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறன்று, ஊர்பி எத் ஓர்பி செய்தியிலும், காபோ டெல்காடோ  மாநிலத்தின் நிலைமையைக் குறிப்பிட்டு, அப்பகுதிக்காகத் திருத்தந்தை செபிக்க அழைப்பு விடுத்ததற்கு, தான் நன்றி கூறியதாக, ஆயர் பெர்னான்டோ லிஸ்போவா அவர்கள் தெரிவித்தார்.

 
மொசிம்போவா டா பிராய்யா  துறைமுக நகரில் ஜிகாதிகள் ஐ.எஸ். இஸ்லாம் அரசோடு தொடர்புடைய ஜிகாதிகள், மொசிம் போவா டா பிராய்யா துறைமுக நகரைக் கைப்பற்றியது குறித்தும், கடந்த வாரத்தில், அந்நகரை ஜிகாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து, மொசாம்பிக் அரசுப் படைகள் அந்நகரிலிருந்து வெளியேறியுள்ளது குறித்தும் திருத்தந்தையிடம் தான் பகிரந்துகொண்டதாக, ஆயர் பெர்னான்டோ லிஸ்போவா அவர்கள் கூறினார்.


ஜிகாதிகள் மொசிம்போவா டா பிராய்யா  நகரைக் கைப்பற்றியதிலிருந்து, காணாமல் போயுள்ள இரு அருள்சகோதரிகள் பற்றி எவ்விதத் தகவலும், இதுவரை கிடைக்கவில்லை எனவும்  ஆயர் பெர்னான்டோ லிஸ்போவா அவர்கள், திருத்தந்தையிடம், தொலைப்பேசியில் கூறியுள்ளார். கடந்த ஆண்டில் மொசாம்பிக் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, காபோ டெல்காடோ மாநிலத்தை அடிக்கடி நினைத்தேன் என திருத்தந்தை கூறியதாகவும், தேவைப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு, கர்தினால் மைக்கேல் சிசர்னி அவர்களைத் தொடர்புகொள்ள, திருத்தந்தை தன்னை ஊக்கப்படுத்தியதாகவும், ஆயர் பெர்னான்டோ லிஸ்போவா அவர்கள் கூறினார்.


காபோ டெல்காடோ  மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில், கணிசமான அளவு, இயற்கை எரிவாயு இருப்பதாக, 2010ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த வாயுவை எடுப்பதற்காக, ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளன. ஆயினும், தற்போது அப்பகுதியில் வளர்ந்துவரும் கடுமையான தாக்குதல்கள், இந்த முதலீடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த எரிவாயு பகுதி ஆப்ரிக்காவிலேயே மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு இருக்கும் இடம் என்று கூறப்படுகின்றது.

Comment