No icon

அருள்முனைவர் ஜோமிக்ஸ்

மனம் மாறுவோம்!

தவக்காலத் தொடர்- 1

மனம் மாறுவோம்!

அருள்முனைவர் ஜோமிக்ஸ்

1. அருள்வாழ்வின் அடித்தளம் மனம் மாறுதல்

திருவிவிலியத்தின் தொடக்கமுதல் முடிவு வரை இழைந்தோடும் ஓர் ஆழமான கருப்பொருள்மனம் மாறுங்கள்என்பதாகும். பொய்மையிலிருந்து மெய்மைக்கு இறைவன் நம்மை அழைக்கிறார். அழிவிலிருந்து மீட்புக்கு மனம் மாறி வருவதற்கான அழைப்பு என்பது மீட்பின் வரலாற்றில் வழிநெடுகவே விடுக்கப்படுகிறது.

திருவிவிலியத்தின் முதல் மனிதனாகிய ஆதாமிடம் ஆண்டவராகிய கடவுள், “நீ எங்கே இருக்கின்றாய்?” (தொநூ 3:9) என்ற கேள்வி தொடங்கி இறுதி நூலாகிய திருவெளிப்பாட்டில் எல்லாரையும் நோக்கி இயேசு, “தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும். விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய் குடிக்கட்டும்” (திவெ 21 : 17) என்ற அழைப்பு முடிய மனிதன் மனம் மாறி புது வாழ்வு காண்பதற்கான அறைகூவல் திருவிவிலியம் எங்கணும் காணக்கிடக்கின்றது.

பழைய ஏற்பாட்டில் தம் பெயரில் நூல் எழுதா இறைவாக்கினர்களில் எலியா, எலிசா, நாத்தான் போன்றோரும்

பெரிய இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்றோரும் சிறிய இறைவாக்கினர்களாகிய ஓசேயா தொடங்கி மலாக்கி முடிய அனைவரும் ஏன் மோசேயின் இறைவாக்குகளிலும் "மனம் மாறுங்கள்" என்னும் அழைப்பு சற்று அழுத்தமாகவே உரைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் பாலமாக விளங்கும் இறுதி இறைவாக்கினரான திருமுழுக்கு யோவானின் முழு மூச்சான முழக்கமும், “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டதுஎன்பதாகும் (மத் 3:2).

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பொதுவாழ்க்கைப் பணியில் நுழைந்ததும் ஆற்றிய முதல் மறையுரையில், “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்என்று மனம் மாறுதலையே முதன்மைப்படுத்தினார் (மாற்கு 1:15). “அப்படியே இயேசுவின் பன்னிரு சீடர்களும் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்என்று மாற்கு 6:12 ல் வாசிக்கிறோம்.

பெந்தக்கோஸ்து பெருவிழாவன்று யூதர்கள் நடுவில் பேருரையாற்றிய பேதுரு,“நீங்கள் மனம் மாறுங்கள்... ஏனென்றால்இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள

யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியதுஎன்று கூறியதும் (திப 2:38-39), ஏதென்ஸ் நகரில் பேதுரு பிறஇனத்தவருக்கு ஆற்றிய அருளுரையில், “ஆனால் இப்போது யாவரும் மனம் மாற வேண்டும் என்று கடவுள் கட்டளையிடுகிறார்என்று கூறியதும் (திப. 17:38) மனம் மாறுதல் என்பது யூதருக்கும் தேவை, பிற இனத்தவருக்கும் தேவை, ஏன் அனைவருக்குமே தேவை என்பதை எடுத்தியம்புகின்றது.

எபிரேயர் 6: 1 -  3 ல் கிறிஸ்துவைப் பற்றிய படிப்பினைகளில் தொடக்க நிலை, முதிர்ச்சி நிலை என்று இரண்டு படிநிலைகளைக் குறிப்பிடுகிறது. அதில் தொடக்க நிலைப்பாடத்திட்டத்தின் முதல் பாடம், “சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து மன

மாற்றம் என்று குறிப்பிடுகிறது. அதாவது கிறிஸ்து வைப் பற்றிய பாடங்களின் அடிப்படையே மனம்மாற்றத்திலிருந்துதான் தொடங்குகிறது. அடித்தளம்சரியாக அமைந்தால்தான் அதன் மீது மாளிகை கட்டி எழுப்ப முடியும். அடித்தளமே ஆட்டம் காண்டால்...!”

"மனம் மாறுங்கள்" என்னும் அறிவுரைக்கு நாம் செவிகொடுத்தால் அது நமக்கு மன்னிப்பை யும் நம் நாட்டுக்கு நலத்தையும் வழங்கும் என்கிறார் ஆண்டவர். “எனது பெயரைப் போற்றிடும்என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களி லிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திரு

முகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களதுமன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்; அவர்களது நாட்டுக்கு நலன்

அளிப்பேன்” (2 குறி 7:14). மேலும் இக்கருப் பொருளை நாம் ஆழமாகச் சிந்திக்கச் சிந்திக்க கடவுளது அன்பின் அறிவு நம்மில் பெருகும். அது நம் கடின உள்ளத்தை மாற்றி பரிவு, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகிய குணநலன்களை வளர்க்கும் (காண்க உரோ 2: 4 - 5).

மனம் மாறுங்கள் என்னும் அழைப்பு பாவிகளுக்கு மட்டும்தான் என்று நாம் தவறாக நினைக்கின்றோம். ஆனால் திருவிவிலியம் கூறும்

மனம் மாறுங்கள் என்பது திருஅவையில் உள்ளஅனைவருக்குமானது என்பதை நாம் உணரவேண்

டும். எடுத்துக்காட்டாக திருவெளிப்பாடு நூலில் வரும் 7 திருச்சபைகளில் 5 திருச்சபைகளுக்கு ஆண்டவர் இயேசு, “நீ மனம் மாறு... மனம் மாறத்

தவறினால்...” என்று சற்று கடினமாகவே எச்சரிக் கிறார் (காண்க 2:5, 16, 21, 22; 3:3, 19). எனவே மனம்மாற இறைவார்த்தை விடுக்கும் அழைப்பு பாவி களுக்கும் நம்பிக்கையாளர்களாகிய (விசுவாசிகளாகிய) நமக்கும் என்பதை உணர்ந்து செவிமடுப்போம்.

2. ஏன் மனம் மாற வேண்டும்?

இன்றைய நாள்களில் நற்செய்திக் கூட்டங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், கிறிஸ்தவ இதழ்களின் எழுத்துக்களிலும் உலகத்தின் முடிவு மற்றும் நரகம் ஆகியவையே முதன்மைக்கவனம் பெறுகின்றன. இச்செய்திகள் மனிதர்களின்உள்ளத்தில் ஒருவித அச்சத்தினை உருவாக்கு கின்றன. இந்தப் பயம் (திரைக் கதைகளில் கையாளப் படுவதைப் போன்றே) ஒரு மனமாற்றத்தை எண்ணுகின்றார்கள். ஆனால் இந்த அச்சம் மனம் மாறுவதற்குச் சரியான நோக்கமாக இருக்கக்கூடாது. திருமுழுக்கு யோவானின் அழைப்பையும் நம் ஆண்டவர் இயேசுவின் அறை கூவலையும் மீண்டும் ஒருமுறை கவனத்துடன் வாசித்தால் நான் சொல்ல வரும் கருத்து தெற்றெனப்புலப்படும். “மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது” (மத் 3:2).

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற்கு 1:15) இங்கே, ஏனெனில் உலகத்தின் முடிவு நெருங்கி வந்துவிட்டது என்றோ,நரகம் நெருங்கி வந்துவிட்டது என்றோ சொல்லப்

படவில்லை. மாறாக விண்ணரசு, இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்றுதான் சொல்லப் பட்டுள்ளது. விண்ணரசு/இறையாட்சி என்பது அன்பும் நீதியும் இரக்கமும் நிறைந்த கடவுளின் அரசாட்சி/ஆளுமை ஆகும். இது நேர்மறையான சிந்தனை/அணுகுமுறை எனலாம்.

மேலும் திருமுழுக்கு யோவானின் அழைப் பைக் கேட்டு இரண்டு வகையான மக்கள் அவரிடம் வந்தார்கள். முதலாவது சாதாரண எளிய மக்கள். அவர்கள் நேர் மறையான எண்ணத்தோடு தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மனம் மாறி திருமுழுக்குப் பெற்றார்கள். ஆனால் இரண்டாவது வகையான மக்கள் பரிசேயரும் சதுசேயரில் சிலரும் ஆவர். இவர்களும் திருமுழுக்குப் பெற தண்ணீரில் இறங்கினார்கள் ஆனால், அவர்களது நோக்கம் எதிர்மறையாய் இருந்ததை திருமுழுக்கு யோவான் சுட்டுக்காட்டுகிறார். “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்என்றார் (மத் 3:6-8). வெற்றுச் சடங்கு ஆசாரங்களில் கலந்து கொள்வதால் பயனில்லை. உள்ளத்தின் நோக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பது இங்கே வலியுறுத்தப்படுகிறது. கடவுளின் சினத்திற்கும் வரப்போகும் நீதித் தீர்ப்புக்கும் தப்பித்துக்கொள்ள மனம் மாறக் கூடாது. மாறாக விண்ணரசில் ஆளுகையை வரவேற்று நேரிய உள்ளத்தோடு பாவங்களை அறிக்கையிட்டு மனம் மாறவேண்டும்.

3. எப்படி மனம் மாறக் கூடாது?

. பார்வோனைப் போலஆண்டவர் மோசேயை பார்வோனிடம் அனுப்பினார். அருஞ்செயல்கள் மூலம் ஆற்றலையும் மாண்பையும் வெளிப்படுத்தினார். கல்மழையும் இடிமுழக்கங் களும் பார்வோனின் மனத்தை மாற்றின. ஆனால்

கல்மழையும் இடிமுழக்கங்களும் ஓய்ந்து போனபோது பார்வோன் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். மேலும் தொடர்ந்து பாவம் செய்தான். அவனைப் போலவே அவனது அலுவலரும் நடந்து கொண்டனர். (விப 9:33-35). அற்புதங்களும் ஆசி களும் வரும்பொழுது மனம் மாறுவதும் மற்றக்காலங்களில் மனம் மாறாதிருப்பதும் ஏற்புடையதல்ல.

. நீதித் தலைவர்களின் நாள்களில் இஸ் ரயேலரைப் போல: பெருந்துயரத்திற்கு உள்ளான காலத்தில், ஆண்டவர் இஸ்ரயேலருக்காக  நீதித்தலைவர்களை எழச் செய்தார். அத்தலைவர்கள் எதிரிகளின் கைகளிலிருந்து மக்களை விடுவித் தனர். துன்புறுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் ஆண்டவர் இரக்கம் கொண்டார். “ஆனால் ஒவ்வொரு நீதித்தலைவர் இறந்தபொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற் றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரைவிட இஸ்ரயேலர் இழிவாகநடந்தனர். அவர்கள் ஆண்டவரின் கட்டளை களுக்குச் செவிகொடுத்து நடந்த நெறியை விட்டு விரைவில் விலகினார்” (நீதி 2:16 - 19).

வாழ்க்கை முழுவதிலும் வழிநெடுகிலும் நாம் ஆண்டவர் பக்கமாய் திரும்பி நடைபயில வேண்டும். சரியான சமயத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் நமக்கு அமையாதபோதிலும் ஆண்டவரின் வழிகளை நாம் விட்டுவிடலாகாது.

எவ்வாறு மனம் திரும்ப வேண்டும்?

. இறை அச்சத்தோடு: “பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. அவர்களின் மனக் கண்களில் இறை அச்சம் இல்லை” (திபா 35:1)

நாம் நமது உள்ளத்திலும் உடலிலும் மாசு எதுவுமின்றி நம்மையே தூய்மைப்படுத்துவோம். கடவுளுக்கு அஞ்சி தூய வாழ்வில் நிறை வடைவோம்” (2கொரி 7:1).

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு குற்றவாளி மற்றவனை நோக்கி, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா?” என்றான் (லூக் 23: 40-41). அந்த நல்ல கள்வனின் மனத்தை உறுத்துகிற நல்ல மனசாட்சியும் இறை அச்சமும் இருந்ததால்தான் வாழ்வின் இருள் சூழ் வேளையில் மீட்பை அடைந்தான்.

பாவத்தில் விழுவதற்கு ஏதுவான சூழல் அமைந்தும், பழியையும் தண்டனையையும் யோசேப்பு ஏற்றுக்கொண்டது எதனால்? “இந்த மாபெரும் தீச்செயலைக் செய்து கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா? என்ற கேள்வியைக் கேட்க வைத்த இறை அச்சம் அல்லவா? நொடிப் பொழுதில் பாவம் அவனுக்குச் சாபத்தை வரவழைத் திருக்கும். ஆனால் இறை அச்சம் அவனுக்கு இறுதியில் வெற்றியைத் தந்தது” (தொநூ 39:9)

அவ்வாறே பார்வோனின் கொடுங்கோல் ஆட்சியில்மருத்துவப் பெண்கள் சிப்ரா, பூவா ஆகியோர் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால்தான் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்” (விப 1:17). இறை அச்சம் தவறான அரச கட்டளையையும் எதிர்த்து நிற்கத் துணிவைத் தருகிறது!

. இறை அன்போடு: திருத்தூதர் பவுல், “ஆண்டவருக்கு அஞ்சி உழைக்கும் நாங்கள் கடவுளுக்கும் உங்களுக்கும் வெளிப்படையான மனச் சான்றைக் கொண்டுள்ளோம்என்கிறார். மேலும் கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட் கொள்கிறது என்கிறார் (2கொரி 5:11-15). என்னே அவரின் அன்பு! பாவமற்றவர் பாவமானார். ஆதலால் அப்பேரன்பு மனம் மாற நம்மை நெருக்குகிறது (20-21).

திருவெளிப்பாட்டு நூலில் இல்லதோக்கிய திருஅவைக்கு விடுக்கும் செய்தியில் இயேசு, “நான் யார் மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே நீ ஆர்வம் கொண்டு மனம் மாறுஎன்கிறார் (திவெ 3:19). நம்மை இவ்வளவாய் அன்பு செய்தவரை நாம் நாடாமல் இருக்கலாமா? மனம் மாற வேண்டாமா?

. இறைவார்த்தையோடு: இயேசுவின் உவமைகளில் தனிச் சிறப்பு மிக்கது செல்வரும் இலாசரும் உவமையாகும். அதன் இறுதியில் செல்வர் பாதாளத்தில் வதைக்கப்படுகிறார். ஏழை இலாசருக்கு வந்த வாழ்வை நினைத்து ஏங்குகிறார். தன்னுடைய ஐந்து சகோதரர்களும் பாதாளம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆபிரகாமிடம் பரிந்து வேண்டுகிறார். அவ்வேளையில் ஆபிரகாம், “அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால் இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்என்பார் (லூக் 15:29, 31). இதன் பொருள் நாம் இறைவார்த்தைக்குச் செவிசாய்த்து மனம் மாற வேண்டும் என்பதாகும்.

திருப்பாடல் 19ன் பிற்பகுதியில்ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அதுபுத்துயிர் அளிக்கிறதுஎன்றெல்லாம் சொல்லப் பட்டுள்ளது. இறைவார்த்தை இதயத்திற்கு ஒளடதமாய் அமைகிறது. அது செந்தேனிலும் இனிமையானதுதான். ஆயினும் வசனம் 11ல்அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதமாய் ஆறுதலும் விடுதலையும் தரும் இறைவார்த்தைதான் நம் இதயத்தைக் கிழிக்கவும் செய்கிறது. ஏனெனில் எபி 4:12ன் படி அது இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது ஆகும்.

தாவீதின் இதயத்தை நாத்தானின் இறைவாக்குகள் உடைத்ததைப் போன்று நம் முகமூடிகளையும் இறைவார்த்தை ஒன்றே கிழிக்க வல்லது (2 சாமு 11:1-12:23).

ஆக இறை அச்சமும், இறை அன்பும், இறைவார்த்தையும் நம்மில் நிலையான மனம் மாறுதலை ஏற்படுத்தட்டும். மனம் மாறுவோம்!.

Comment