No icon

மக்கள் தீர்ப்பை ஏற்போம், மதிப்போம்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தமிழக ஆயர் பேரவையும் உளமார வாழ்த்துகிறது. வரவேற்கிறது. சனநாயகம் அளித்த தேர்தலை, தேர்தல் தந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ளல் சனநாயகத்தை மதித்தல் என்பதால், சனநாயகத்தின் முக்கியக் கூறாகிய தேர்தலையும் தேர்தல் முடிவுகளையும் மதிக்கிறோம்.
இந்திய நாட்டின் புதிய பிரதமராக மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்கும் திரு.மோடி அவர்களை வாழ்த்துகிறோம். திருவாளர் மோடி அவர்கள் தலைமையில் உருவாகவிருக்கும் ஆட்சி, உண்மையான மக்களாட்சியாக, இந்தியப் பன்முகத்தன்மையை மதிக்கும் ஆட்சியாக மனித உரிமைகளைப் பேணும் அரசாக, சிறுபான்மை மக்களின் நலன்களைக் காக்கும் அரசாக, பாகுபாடற்ற சமத்துவ நிலையில், ஆட்சியமைய கிறித்தவ மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டென்று உறுதி கூறுகிறோம். கடந்த ஐந்தாண்டுகளாக  மத்தியில் ஆட்சி நடத்திவரும் பாரதிய சனதா ஆட்சி மீது மதச் சிறுபான்மையினர்க்கு நிறைய மனக் கசப்புகள் உள்ளன. சேவை மட்டுமே உயிர்ப்பணியாகக் கொண்ட கிறித்தவர்க்கு வேறு சுயநலம் எதுவும் இல்லா நிலையில் கிறித்தவ அல்லது இசுலாமியச் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பா.ச.க அரசு மேற்கொண்டது என்பது உண்மையாயினும், சனநாயகக் குடியரசில் வாழும் மதச்சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழவும், அவர்தம் பணிகளை அச்சமின்றி முன்னெடுக்கவும் புதிய அரசு உத்தரவாதமளிக்க வேண்டுகிறோம். திருவாளர் மோடி தலைமையிலான அரசு, சனநாயக வழியில் நாட்டை வழி நடத்திட வேண்டுகிறோம். 
இந்தியாவின் சீர்மை அந்நாடு ஏற்கும் மதச்சார்பின்மையில்தான் இருக்கிறது என்பதால் மதச்சார்பற்ற கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்று உறுதி பூண்டிருந்தோம். மதச்சார்பற்ற கூட்டணிக்கே நம் வாக்கு என்பதை ஏற்றுக் கொண்ட எம்மக்களில் பெரும்பாலோர் மதச்சார்பற்ற கூட்டணிக்கே வாக்களித்தனர். மதச்சிறுப்பான்மையினர் காட்டிய ஆர்வம் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்பதும் உண்மை. தமிழகத்தில் மதச்சிறுபான்மையினர் அளித்த பேராதரவில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகள் பெரிய அளவிலான வெற்றி கண்டது என்பதில் பெருமை கொள்கிறோம். தமிழகத்தில் செயல்படும் மதசார்பற்ற கட்சிகள், இப்போது போல் எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைகள் வெற்றி பெற உழைப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தேர்தல் முடிவுகள் சிலருக்கு ஏமாற்றமளித்திருக்கலாம். பலருக்கு மகிழ்ச்சியும் அளித்திருக்கலாம். தேர்தல் தரும் வெற்றி தோல்வியைத் தாண்டி மக்களை முதன்மைபடுத்தும் ஆட்சி மலர வேண்டும். 

Comment