No icon

நீதிபதி லிவாத்தினோ - நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை

 

நீதிபதி லிவாத்தினோ - நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை

லிவாத்தினோ அவர்கள், நீதிபதிகளுக்கு மட்டும் ஓர் எடுத்துக்காட்டாக வாழவில்லை. மாறாக, சட்டம், நீதித்துறைகளில் பணியாற்றும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய நீதிபதி ஒருவரைப் பற்றி வெளியான நூல் ஒன்றுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.
இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் மாஃபியா எனப்படும் குற்ற கும்பலுக்கு எதிராக, ரொசாரியோ ஆஞ்செலோ லிவாத்தினோ என்ற நீதிபதி தன் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வந்ததால், அவர் அந்தக் குற்றக்கும்பலால் ஏவிவிடப்பட்ட ஓர் இளைஞரால், 1990 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
லிவாத்தினோ அவர்களின் சாட்சிய மரணத்தை மையப்படுத்தி, "இரத்தம் சிந்தாத காய்ந்த சாட்சியமும், இரத்த சாட்சிய மரணமும்" என்ற பெயரில் வெளியான ஒரு நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அணிந்துரையில், இந்த இளம் நீதிபதியின் உடலிலிருந்து வெளியான இரத்தம், நறுமணமிக்க ஒரு வேள்வியாக இயேசுவை மகிழ்வித்திருக்கும் என்று கூறியுள்ளார்.
தன்னைக் கொல்லவந்த இளைஞரைக் கண்டு, "இளைஞனே, நான் உனக்கு என்ன செய்துவிட்டேன்?" என்று லிவாத்தினோ அவர்கள் இறுதியாகக் கூறிய சொற்கள், இயேசுவாலும், ஏனைய இறைவாக்கினர்களாலும் எழுப்பப்பட்டக் கேள்வி என்பதை, திருத்தந்தை தன் அணிந்துரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தன் கிறிஸ்தவ நம்பிக்கையை, செய்துவந்த தொழிலில் காட்டிய அர்ப்பணத்தில் லிவாத்தினோ அவர்கள் வெளிப்படுத்தினார் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ரொசாரியோ லிவாத்தினோ அவர்களின் வாழ்வும், சாட்சிய மரணமும், இத்தாலிக்கு மட்டுமல்ல, உலகமனைத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன என்று கூறியுள்ளார்.
நீதிபதி லிவாத்தினோ அவர்கள், 1990 ஆம் ஆண்டு, தன் 38வது வயதில், கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு சிசிலிக்கு சென்ற திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், "இந்தத் தீவில் நல்லிணக்கம் உருவாகட்டும். கொலைகளும், அச்சுறுத்துதல்களும் இல்லாத ஒப்புரவுகள் இப்பகுதியில் நிலவட்டும்" என்று தன் மறையுரையில் கூறியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
"கடவுள், ஆணித்தரமாகக் கூறியுள்ள ’கொலை செய்யாதே’ என்ற கட்டளையை, இப்பகுதியில் வாழும் அனைவரும் புரிந்துகொண்டு, குற்றமற்ற, அப்பாவி மக்களை, கொல்லும் வழக்கத்தை கைவிட்டு, அமைதியை நிலைநாட்ட முன்வரட்டும்" என்று திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், தன் மறையுரையில் கூறியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நூலின் அணிந்துரையில் மீண்டும் நினைவுறுத்தியுள்ளார்.
1952 ஆம் ஆண்டு பிறந்து, 1990 ஆம் ஆண்டு கொலையுண்ட நீதிபதி ரொசாரியோ ஆஞ்செலோ லிவாத்தினோ அவர்கள், இவ்வாண்டு மே மாதம் 9 ஆம் தேதி, ஞாயிறன்று, ஆக்ரிஜெந்தோ (ஹபசபைநவேடி) பேராலயத்தில் அருளாளராக உயர்த்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment