No icon

கர்தினால் ஜான் ஹென்றி நியூமனுக்கு அக்டோபர் மாதம் புனிதர் பட்டம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஓர் ஆங்கிலிக்கன் திருஅவைத் தம்பதியருக்கு பிறந்த ஆறு மகன்களுள் மூத்தவரான ஜான் ஹென்றி நியூமன், 1825 ஆம் ஆண்டு ஆங்கிலிக்கன் திருஅவையில் குருவானவராக மாறினார். அதன்பின்னர் கத்தோலிக்கத் திருமறையால் ஈர்க்கப்பட்ட இவர், 1845 ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருஅவையில் சேர்ந்து,  1847 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவுச் செய்யப்பட்டார். 
தன்னுடைய எழுத்துக்களால் திருஅவைக்கு மிகப்பெரிய பங்களிப்பைப் செய்த இவர், 1879 ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். அப்போதிலிருந்து ஏறக்குறைய பதினோராண்டுகள் மிகச் சிறப்பான முறையில் பணியாற்றியபின் 1890 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 
இவரை 1991 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் ‘வணக்கத்திற்குரியவராக அறிவித்தார். 2010 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ‘அருளாளர் என்று அறிவித்தார். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு, மே திங்களில் சிக்காகோவைச் சார்ந்த மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த ஒரு கர்ப்பிணி பெண் அருளாளர் ஜான் ஹென்றி நியூமனிடம் பரிந்துபேசியதன் வழியாகக் குணமடைந்ததைத் தொடர்ந்து, வருகின்ற அக்டோபர் திங்கள் 13 ஆம் நாள் அருளாளர் ஜான் ஹென்றி நியூமனுக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்படும் என்று வத்திக்கானில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment