No icon

கடினமான பாதையைத் தேர்ந்தெடு

“கடினமான பாதையைத் தேர்ந்தெடுங் கள். ஏனெனில் அதுதான் உங்களை யாரென்று இந்த உலகத்திற்கு காட்டும்... வேதியியல் துறையில் பெண்கள் யாரும் காலடி எடுத்து வைக்காத நேரத்தில் நான் காலடி எடுத்து வைத்தேன். அதனால் இன்றைக்குப் பல பெண்கள் வேதியியல் துறையில் மிகத் தைரியமாக காலடி எடுத்து வைக்கிறார்கள்... நான் முறையாக முனைவர் பட்டம் பெறவில்லை. ஆனாலும் நான் பெற்ற கவுரவ முனைவர் பட்டங்களுக்கு அளவே இல்லை... இப்படி என்னாலும் சாதிக்க முடிந்தது என்றால், உங்களால் ஏன் முடியாது?” 
இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல 1981 ஆம் ஆண்டு, வேதியியல் துறையில் செய்த ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்கவைச் சார்ந்த கெர்த்ரூத் ஏலியன் (ழுநசவசரனந நுடiடிn) என்ற பெண்மணி ஆவார்.  கெர்த்ரூத் ஏலியனால் எப்படி இந்த உயர்நிலையை அடைய முடிந்தது, அவர் கடந்துவந்த பாதை எப்படிப்பட்டது என்று இப்போது அறிந்து கொள்வோம்.
கெர்த்ரூத் ஏலியன், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 1918 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை ஒரு பல் மருத்துவர். இவருக்கு ஒரு சகோதரர் உண்டு. சிறுவயது முதலே நிறையப் புத்தகங்களை வாசித்து, அறிவுப்பூர்வமாக சிந்தித்து வந்த கெர்த்ரூத் ஏலியன், பள்ளிக் கல்வியை முடித்தபின் என்ன துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்து வந்தார். இந்தச் சமயத்ததில்தான் இவர் மிகவும் அன்புசெய்த இவருடைய தாத்தா புற்றுநோயால் இறந்துபோனார். தாத்தாவின் இறப்பினால் மனமுடைந்துபோன கெர்த்ரூத் ஏலியன், ‘இனிமேலும் யாரும் புற்றுநோயால் இறக்கக்கூடாது, அதற்கு ஏதாவது செய்யவேண்டும்’ என்று தீர்க்கமான முடிவெடுத்து, ஹன்டர் கல்லூரியில் இருந்த வேதியியல் துறையில் சேர்ந்து கல்லூரிப்படிப்பைப் படிக்கத் தொடங்கினார். 
அதுவரைக்கும் வேதியியல் துறையில் பெண்கள் யாரும் சேர்ந்து படிக்கவே இல்லை. கெர்த்ரூத் ஏலியன் வேதியியல் துறையில் சேர்ந்ததும் எல்லாரும் அவரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஒருசிலர் அவரை ஏளனம் செய்தார்கள்.  அதை யெல்லாம் அவர்  பொருட்படுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். ஏற்கெனவே நிறையப் புத்தங்களை வாசித்த அனுபவம் அவருக்கு இருந்ததால், படிப்பு ஒன்றும் அவருக்கு அவ்வளவு கடினமாக இல்லை.
இப்படி நாட்கள் போய்க்கொண்டிருக்கும் போது அவருடைய தந்தை பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தார். இதனால் கெர்த்ரூத் ஏலியனால் படிப்பைப் பாதியில் கைவிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குடும்பச் சூழ்நிலையால் படிப்பைப் பாதியில் கைவிட்டாலும் கெர்த்ரூத் ஏலியனுக்கு எப்படியாவது படிப்பைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தது. எனவே, அவர் பல்கலைக்கழத்தில் உதவியாளர் வேலைக்கு முயற்சித்துப் பார்த்தார். அது அவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்ததாக அவர் செவிலியர் பள்ளியில் கற்பிக்கும் வேலைக்கு முயற்சித்துப் பார்த்தார். அவ்வேலை அவருக்குக் கிடைத்தாலும் அதில் மூன்றுமாதங்கள்தான் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது. அதற்குப் பின்பு அவர் ஒரு மருத்துவரிடத்தில் உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டு, அதில் கிடைத்த சொற்ப வருமானத்தைக்கொண்டு தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார். 
கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்த பின்பு கெர்த்ரூத் ஏலியனுக்கு வேதியியல் பிரிவில் ஆய்வுப் படிப்புப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்கு நிறையப் பணம் தேவைப்படும் என்பதால், அவர் ஏற்கெனவே ஆற்றிவந்த வேலையை
விட்டுவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு ஆய்வுப் படிப்பைப் படித்தார். பகலில் ஆசிரியர் பணி, இரவில் ஆய்வுப் படிப்புக்குப் படித்தல் என்று அவருடைய வாழ்க்கை மிகவும் வேகமாக ஓடியது. இப்படிக் கடினமாக உழைத்ததன் பயனாக அவர்  1941 ஆம் ஆண்டு, வேதியியல் ஆய்வுப்படிப்பில் பட்டம் பெற்றார். 
இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப்போர் வந்தது. இதனால் பல மருந்துக் கம்பெனிகளில் மருத்துவருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. கெர்த்ரூத் ஏலியன் மருந்துகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததால், அவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. அவரோ, ‘ஏற்கெனவே ஒரு மருத்துவரிடத்தில் உதவியாளராகப் பணியாற்றி அனுபவம் போதும், வேதியியல் பிரிவில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்வோம்’ என்று ஜார்ஜ் ஹிட்சிங்க்ஸ் என்பவரிடத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து உயிர் வேதியியல், மருந்தியல், நோய் எதிர்ப்பியல், நச்சுயிரியல் என பல பிரிவுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஜார்ஜ் ஹிட்சிங்க்சும் அவருடைய ஆர்வத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். இதனால் அவர்  இரத்தப்புற்று நோய், அக்கி, எயிட்ஸ் நிவாரணம் போன்றவற்றிற்கு மருந்துகளைக் கண்டுபிடித்தார். இது மட்டுமல்லாமல் ஒருவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்படும்போது, அது அவருக்குப் பொருந்துகிற வகையில் மருத்துகளைக் கண்டு பிடித்தார். எனவே அவருடைய புகழ் எங்கும் பரவத் தொடங்கியது.
கெர்த்ரூத் ஏலியனுக்கு டாக்டர் பட்டம் பெறவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. ஆனால், அதற்கான பணம் அவரிடத்தில் இல்லாததாலும்  ஆராய்ச்சியிலே மூழ்கிப்போனதாலும் அவரால் டாக்டர் பட்டம் பெறமுடியவில்லை. ஆனாலும், மக்களுக்குப் பயன்படும் 45க்கும் மேற்பட்ட மருந்துகளை அவர் கண்டுபிடித்ததால் 23 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.  
கெர்த்ரூத் ஏலியனுக்குத் திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றன. ஆனால், திருமணத்திற்கு முன்பாக அவருக்கு மண ஒப்பந்தம் செய்ப்பட்ட இளைஞன் இறந்துபோனதால், கடைசி வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல், மக்களுக்குப் பயன்
படும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் தன்னுடைய வாழ்வை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்டார். இவரைப் பல கல்லூரிகளில் சிறப்புரை ஆற்ற
அழைத்தார்கள். இதனால் இவர் பல கல்லூரி களுக்கும் பல நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்கெல்லாம் தான் கண்டுபிடித்த மருந்துகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வந்தார். 
இப்படித் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, பலநோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடித்து மிக உன்னதமான பணியைச் செய்துவந்த கெர்த்ரூத் ஏலியனைப் பாராட்டித்தான் 1981 ஆம் ஆண்டு, வேதியியல் பிரிவில் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. முறையாக டாக்டர் பட்டம் பெறாமல், வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றவர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நோபல் பரிசு பெறும்போது உதிர்த்த வார்த்தைகள்தான் தொடக்கத்தில் வருகின்ற வார்த்தைகள்.
பெண்கள் யாருமே நுழைந்திருந்திராத ‘வேதியல் பிரிவு’ என்ற கடினமான பாதையை கெர்த்ரூத் ஏலியன், தேர்ந்துகொண்டது மட்டுமல்லா மல், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அதில் அவர் சாதித்துக் காட்டி நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக இருக்கின்றார். 
‘எண்ணம் போல் வாழ்க்கை’ வாழ எவை எவையெல்லாம் தேவையென்று பல்வேறு விஷயங்களைக் குறித்து இங்கு தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இதனுடைய ஒரு தொடர்ச்சியாக இருப்பதுதான் ‘கடினமான பாதையைத் தேர்ந்தெடு’ என்ற தத்துவம் அல்லது வாழ்க்கை  நெறியாகும். 
இன்றைக்குப் பலர், ‘எளிதான வழியைத் தேர்ந்தெடுத்து, எப்படியும் வாழ்க்கையை ஒட்டி
விடுவோம்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்துகொண் டிருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் சராசரிகள்.
இப்படிப்பட்டவர் இருக்கும்போதே இறந்தவர் களுக்குச் சமமானவர்களாக இருகிறார்கள். ஆனால் எண்ணம் போல் வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் இப்படிப்பட்ட எண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு கடினமான பாதையைத் தேர்ந்துகொண்டு அதில் சாதித்துக் காட்டவேண்டும். அதுதான் அவர்களுக்கு அழகையும் பெருமையும் சேர்க்கும். ராபர்ட் ப்ரோஸ்ட் என்ற ஆங்கிலக் கவிஞருடைய வரிகள் இவை:
Two roads diverged in a wood, and I, 
I took the one less traveled by,
And that has made all the difference.
யாரும் பயணப்படாத, அதே நேரத்தில் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தால், வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதாகவும் நமது வாழ்விலும் மாற்றம் ஏற்படுவதாகவும் கூறுகிறார் கவிஞர். ஆகையால், நாமும் யாரும் பயணப்படாத, கடினமான, இடுக்கமான வழியைத் தேர்ந்துகொண்டு, அதில்
நம்மை நிரூபித்துக் காட்டவேண்டும். அப்போதுதான் நாம் சராசரிகளிடமிருந்து சாதனையாளராக மிளிர்வோம்.
இறுதியாக ஒரு சிறிய நிகழ்வு. ஒரு வகுப்
பறையில் ஆசிரியர் வித்தியாசமான ஒரு தேர்வினை வைத்தார். அந்தத் தேர்வில் கடினமான கேள்விக்கு 90 மதிப்பெண்கள் என்றும் எளிதான கேள்விக்கு 10 மதிப்பெண்கள் என்றும் சொல்லி தேர்வினை எழுதச் சொன்னார். மாணவர்களும் வேகவேகமாகப் பதிலை எழுதிவிட்டு, விடைத்தாளை ஆசிரியரிடத்தில் கொடுத்தார்கள். ஆசிரியரோ விடைக்கான பதிலைப்
பார்க்காமல், எந்த கேள்வியைத் தேர்ந்திருக்கின் றார்களோ அதனடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கினார். இதைப் பார்த்து விட்டு மாணவர்கள், “சார்! பதிலைப் பார்க்காமல் மதிப்பெண்களை வழங்குகிறீர்களே, இது அநியாயம்” என்றார்கள். ஆசிரியரோ அவர்களிடம், “நான் பதிலுக்காக இந்தத் தேர்வினை வைக்க வில்லை. உங்களுடைய இலக்கினை கண்டறியவே இத்தேர்வினை வைத்தேன்... யாராரெல்லாம் கடினமான பாதையினை - இலக்கினை- தேர்ந் தெடுக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய வாழ்வில் உயர்வது உறுதி” என்றார்.
ஆம், கடினமான பாதையைத் தேர்ந்தெடுப் பவர்கள் வாழ்வில் சாதனையாளர்களாக வரு கின்றார்கள்.
 ஆகவே, எண்ணம் போல் வாழ்க்கை வாழ நினைக்கும் நாம் கடினமான பாதையைத் தேர்ந்தெடுப்போம். அப்போது நிறைய சவால்கள் வரலாம். அவற்றையெல்லாம் முறியடித்துவிட்டு வெற்றி வீரராய் வெளிப்படுவோம். அதன்வழியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம். 

Comment