No icon

நான் வாழ்வதா அல்லது வீழ்வதா?

திரும்பிப் பார்க்க முடிந்தால்!

இன்று எந்தவித பொருளாதாரச் சூழலோ, கல்வி நிலையோ, குடும்ப அமைப்பு முறையோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு கேள்வி இது. நாடுகளைக் கடந்து, மதங்களைக் கடந்து, மொழிகளுக்கு அப்பாற்பட்டு உருவாகும், இந்தக் கேள்விதான் ’நான் வாழ்வதா அல்லது வீழ்வதா? என்பது மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்திலும், மனிதன் நினைக்கின்றான். தோல்வி அல்லது வருத்தத்தின் அடி ஆழத்திலிருந்தும் இந்தக் கேள்வியை அவன் கேட்கிறான்.
ஏன் கேட்கிறான் என்பதற்கு அறிவியலாளர்களும், மனநல ஆலோசகர்களும், மருத்துவர்களும், சமூக அக்கரை உடையவர்களும் அவரவருக்குத் தெரிந்த விதத்தில் பலவித உண்மைகளையும், கருத்துகளையும் அவ்வப்போதும், தொடர்ச்சியாகவும், குறிப்பிட்டும், தனியாகவும், பொதுவாகவு
மென எப்படியெப்படிச் சொன்னாலும், ஆலோசனைகள் வழங்கினாலும் ஒருவர் விபரீத முடிவெடுக்கும் நேரத்தில் யார் சொன்ன ஆலோசனைகளும் அவரின் நினைவில் நிற்பதில்லை. ஆன்மிகத்தைப் போதிப்பவர்களும், தன்னம்பிக்கையை பேச்சால் போதிப்பவர்களும், எழுத்தால் ஊட்டுபவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
தோல்வி அடைந்துவிட்டேன். நான் ஏன் உயிர்வாழ வேண்டும் என ஆரம்பப் பள்ளி குழந்தையும் நினைக்கின்றது. மனைவி எப்போதோ தனக்குத் துரோகம் செய்து விட்டாள். தன்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என 99 வயது தாத்தாவும் விபரீத முடிவெடுக்கின்றார். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட வயதுடையோருக்கு மட்டும் பிரச்சினைகளே இல்லையா? எவ்வித தடைகளையும் தாண்டி விரைவாகப் பயணிக்க வேண்டிய இவர்கள், தம்மீது போடப்படும் குப்பைகளை உதறி தள்ளிவிட்டு மேலே வரவேண்டிய இவர்கள், போகவேண்டிய வாயில்கள் அடைபட்டாலும் எத்தனையோ வாயில்கள் திறக்கும் என்பதை அடிக்கடி கேள்விப்படும் இந்த இளம் வயதினர்தான் இன்று விபரீத முடிவுகளை வெகுவிரைவாக எடுக்கின்றார்கள்.
ஆத்மார்த்தமாக காதலிக்காத, காதலி அல்லது காதலன் போல் நடித்த நபருக்காக உயிரை விடுபவர்களும், உண்மையற்ற நட்புக்காக விரக்தியின் விளிம்புக்குச் செல்பவர்
களும், ஆபத்து நேரங்களில் கண்டு கொள்ளாத உறவுகளை எண்ணி உலகை வெறுப்பவர்களும் பெற்றோரின் கட்டாயத் தினால் தனக்கு ஈடுபாடு இல்லாத பாடத்தைப் படித்துவிட்டு விரக்கிதயில் வாழும் வாலிபர்களும் நினைத்தபடி உடனடியாக தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என எண்ணுவோரும் வெகு சுலபமாக இக்கேள்வியைக் கேட்கின்றனர். ஆனால் ஆலோசனையாகவோ, பதிலாகவோ அவர்கள் எதையும் எவரிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் அவர்கள் கேள்வி கேட்பது தங்களிடம் மட்டும் தான்.
எப்போதுமே எந்தவொரு பிரச்சினைக்குரிய கேள்விக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் உள்ளன. தேர்வு செய்யப்படவேண்டிய தீர்வு முறைக்கும் பல காரணங்களும் உள்ளன. இவையனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கவும்  ஆராயவும் தேர்வு செய்யவும் மாற்று வழிகளில் சிந்திக்கவும், காரண - காரியங்
களை கண்டுபிடிக்கவும் வாய்ப்புப் பெற்றவன் மனிதன் மட்டுமே. ஆனால் பிறரது பிரச்சினை
களுக்கு ஆயிரம் தீர்வு சொல்லும் மனிதன் துரதிர்ஷ்டவசமாக தனது சொந்தப் பிரச்சினை என்று வரும்போது முடிவெடுக்கத் தெரியாதவனும் அவனே.
வாழ்வதா அல்லது வீழ்வதா? என்ற கேள்விக் கான விடை சக மனிதனிடமிருந்து மனிதனுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் விண்ணில் பறக்கும் பறவைகளிடம் பதில் உண்டு; மண்ணில் வாழும் விலங்குகளிடம் விடை உண்டு. நீரில் நீந்துவனவிடமும் பதில் உண்டு. சில நேரங்களில் அதிரடியான விடைகளாக அவை இல்லாததால் புரியாமல் இருக்கலாம்.
பறவைகளின் வாழ்க்கை மனிதர்களுக்கு
பற்பல செய்திகளைச் சொல்வதுண்டு. உதாரணமாக வாழ்வில் விரக்தி அடைபவர்கள் கழுகின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கக் கடமைப் பட்டுள்ளார்கள். மற்றுமுள்ள பறவைகளைப்போல வாழ்வதாக இருந்தால், அதன் ஆயுட்காலம் நாற்பது ஆண்டுகளே! ஆனால் ஒரு கழுகால் தன் ஆயுளை 70 அல்லது 75 ஆண்டுகளாக கூட்டவும் முடியும். வயதான தோற்றத்தில் அல்ல; இளமையாகப் பறந்து திரிய முடியும். அதற்காக அது எந்த மந்திரத்தையும் உச்சரிப்பதில்லை. எந்த உடற்பயிற்சிக் கூடத்துக் கும் செல்வதில்லை. இளமையை தக்கவைக்க
மூலிகைகளையும், மருந்தையும் தடவுவ தில்லை.
சிறிது காலத்துக்கு அது கடினமான பாதையை கடந்து செல்கிறது. துன்பங்களை அனுபவிக்கின்றது. பட்டினி கிடக்கின்றது. ஆம் ஏறக்குறைய 40 ஆண்டுகள் வாழ்ந்த கழுகுக்கு முன் இரண்டுவித வாய்ப்புகள் இருக்கின்றன. வயதாகும் கழுகின் உடலில் இருக்கும் இறகுகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் தொடங்கும். படிப்படியாக பறக்கும் சக்தியை அது இழந்துவிடும். கூர்மையான அலகு வளைய ஆரம்பிக்கும். நாளடைவில் உண்ணமுடியாத சூழ்நிலை உருவாகும். எங்கேயாவது ஒதுங்கியிருந்து தனது இறுதி நாள்களை எண்ண வேண்டியிருக்கும். இது இயல்பாக, இயற்கையாக நிகழ்வது.
முயற்சி செய்யும் கழுகுக்கு இன்னொரு வாய்ப்பும் இருக்கின்றது. அதை பயன்படுத்தும் கழுகு மேலும் 30 ஆண்டுகள் இளமைப்பொலிவுடன் உயிர் வாழ முடியும். இது துன்பமான பாதை. ஆனால் வலிகள் அதிகமாக இருக்கிறது எனத் தெரிந்தும் ஒரு கழுகு 2 ஆம் முறையை தேர்வு செய்து அதிக ஆண்டுகள் உயிர் வாழுமாம். தன்னால் சரியாகப் பறக்க இயலவில்லை என்று உணரும் ஒரு கழுகு உயரமான பாறைக்குப் பறந்து செல்லுமாம். தன்னுடைய அலகால் தன்னுடைய வலுவான சிறகுகளில் இருக்கும் இறகுகளை ஒவ்வொன்றாக கொத்தி வெளியே தள்ளும். அவ்வாறு செய்வதால் பாறையில் குத்தி உடைத்துவிடும். இப்படிச் செய்யும் கழுகால் எதையும் உண்ண முடியாது. இந்த நிலைக்கு உள்ளான ஒரு கழுகு உண்ணாமல், பறக்கமுடியாமல் தனித்திருக்கிறது. குறிப்பிட்ட நாள்கள் முடியும்போது கழுகின் உடலில் புதிய இறகுகள் முளைக்கும். ஒடித்த அலகுகள் மீண்டும் புதிதாக வளரும்.
இப்போது கழுகு வயதான தோற்றத்தில் அல்ல, இளமைப் பொலிவுடன் புதிய சிறகுகளோடு மீண்டும் உயரே உயரே பறக்கத் தயாராகின்றது. மழைமேகம் சூழம்போது நனையாமல் இருக்க மேகக் கூட்டத்துக்கு மேலே உயர்வாகப் பறந்து செல்லவும், தனக்கான உணவை வேகமாகப் பறந்து கவ்விச் செல்லவும், இறக்கைகளில் குஞ்சுகளைத் தாங்கியபடி பறந்து செல்லவும் வலிமையைப் பெறுகிறது.
முக்கியமாக நம்மைப்போன்ற மனிதர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்ட ஒரு கழுகால் முடிகிறது. ஆயிரம் மனிதர்களால் கற்றுத்தர முடியாத வாழ்வியல் பாடத்தை ஒரு கழுகு நமக்குக் கற்றுத் தருகிறது. வீழ்வது அதாவது இறப்பது, நம் கையில் இல்லை. எப்படி நம் பிறப்பை நாம் தீர்மானிக்கவில்லையோ அதேபோல நம் இறப்பையும் முடிவு செய்யும் உரிமை நமக்கு இல்லை. ஆனால் வாழும் உரிமை இவ்வுலகில் பிறந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் உண்டு. எப்படியும் இவ்வுலகில் ஒருவர் வாழலாம். ஆனால் மனம்போகும் பாதையில் வாழ எவ்வித பயிற்சியும், முயற்சியும் தேவை யில்லை. எந்த விதமான திட்டமிடலும் அவசிய மில்லை. ஆனால் அப்படி வாழ் வதற்காக நாம் படைக்கபட வில்லையே!
வாழ்வதற்கு உரிமையைக் கொடுத்தவர் தாலந்துகளையும் மனிதனுக்கு தந்துள்ளார். ஆனால் தரப்பட்டுள்ள ஒவ்வொரு தாலந்தும் கணக்கு வழக்குக்கு உட்பட்டது. கொடுத்தவர் கணக்குக் கேட்பார். கொடுத்தவற்றை மண்ணில் புதைத்து வைக்கவோ, பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கவோ, குறைகூறவோ, பொறாமைப் படவோ அவர் சொல்லவில்லை. கடவுள் கருணை உள்ளவரும், அன்பானவரும் மட்டுமல்ல; கணக்குக் கேட்பவரும் கூட.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுக்கான கணக்குகளை ஒப்படைப்பதுவரை நாம் வீழ்ந்து போவது பற்றி எண்ணலாகாது. கொடுத்த வாயப்பு
களையும், வசதிகளையும் முறையாகவும், முழுமை யாகவும், நேர்மையாகவும் பயன்படுத்துவதும், கணக்கு களை சரியாக ஒப்படைப்பதும் நமது கடமையல்லவா?
மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய பலவித பாடங்கள் இயற்கையில் மறைந்து கிடக்கின்றன.
மனிதனே, உன் கடமைகள் இன்னும் முடிவடைய வில்லை. உயிர் உடலில் இருப்பதுவரை கடமைகள் உள்ளன. இளையோரே, நீங்கள் சாதிப்பதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளன. அதற்குள் ஏன்
அவசரம்? வாலிபனே, உனக்கு என்று ஒதுக்கி
வைக்கப்பட்டிருக்கும் சாதனையை இன்னொரு வருக்கு நீ ஏன் விட்டுவிட வேண்டும், ஆனால் சாதனைக்கு முன் தோல்விகளும், துன்பங்களும் உள்ளன. உன்னை மட்டுமே பார்ப்பதை விட்டுவிட்டு சுற்றிலும் பார். பார்க்கும் ஒவ்வொன்றிலும் படிக்கப் பாடங்கள் உள்ளன.
மனிதனைத் தவிர மற்ற எந்த ஜீவராசிக்கும் வாழ்வதா அல்லது வீழ்வதா? என்ற எண்ணம் தோன்றுவதே இல்லை. அவை தங்களை மற்றவையோடு ஒப்பிடுவதோ, தங்களைத் தரக்குறை வாக எண்ணுவதோ இல்லை. மனிதன் மட்டுமே விதி விலக்கானவன். ஆரம்ப கால சிறுசிறு சறுக்கல் களுக்கும், பின்னடைவுகளுக்குமே சோர்ந்து போகிறான். விரக்தியும் அடைகிறான். விதைப்புக் காலத்திலும், களையெடுக்கும் காலத்திலும் சோர்ந்து போனால் அமோக அறுவடையைப் பார்ப்பது எப்படி?
மேல்நோக்கி வளரும் வாய்ப்பு உள்ளவரை
    நிமிர்ந்தே வளரவேண்டுமென்பதை
    விழுந்த மரம் கற்றுத் தருகிறது.
உள்ளுக்குள்ளே உயிர் அசைவது வரை 
    முயற்சிசெய்தே தீர வேண்டுமென்பதை
    புதைந்த விதைகள் அறிவுறுத்துகின்றன.
சுற்றிவரும் வாய்ப்பு உள்ளவரை
    சோர்ந்துபோகக் கூடாதென்பதை
    சுழலும் கோள்கள் நினைவூட்டுகின்றன.
நீந்திச்செல்லும் வாய்ப்பு இருக்கும்வரை
    மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்பதை
    துள்ளும் மீன்கள் சொல்லித்தருகின்றன.
(தொடரும்)

Comment